2017-ல் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு? பீட்சா இல்லை நம்ம ‘பிரியாணி’ தான்...

0

ஆன்லைன் மூலம் மக்கள் விரும்பி ஆர்டர் செய்யும் உணவுகள் குறித்த ஸ்விக்கியின் ஆய்வில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் பீட்சா அதிக அளவில் தேடப்பட்ட உணவாகத் தேர்வாகியுள்ளது.

சுபகாரியங்கள், திருவிழாக்கள், பார்ட்டிகள் என்றால் உடனடியாக பலருக்கும் நினைவுக்கு வருவது பிரியாணி தான். அந்தளவிற்கு ‘பிரியாணி’ என்ற மந்திரச் சொல்லுக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. பிரியாணி மீது மக்களுக்கு தீரா ஆசை என்றே சொல்லலாம்.

இதனாலேயே முன்பைவிட தற்போது பிரியாணிக் கடைகள் அதிகரித்து வருகின்றன. எதிரெதிரே பிரியாணிக் கடைகள் இருந்தாலும்கூட, இரண்டும் நஷ்டமின்றி அமோகமாக விற்பனையாகும் அளவிற்கு நம்மூரில் பிரியாணி ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில், 2017-ம் ஆண்டு விடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஸ்விக்கி என்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளம், இந்தாண்டு ஆன்லைனில் மக்கள் அதிகம் விரும்பி, தேடி ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

நள்ளிரவுகளில் ஆர்டர் செய்யப்படும் உணவு, ஸ்னாக்ஸ் (நொறுக்குத் தீனி உணவுகள்), வருங்காலத்தின் பிரபல உணவுகள், ஆரோக்கிய உணவுகள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜனவரி முதல் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை பதிவான தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிக்கன் பிரியாணி முதலிடம்:

மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, புனே, கொல்கத்தா ஆகிய 7 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிகம் பேர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த உணவுப் பொருள் என்ற பெருமையுடன் சிக்கன் பிரியாணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களை முறையே மசாலா தோசை, பட்டர் நான், தந்தூரி ரொட்டி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா போன்றவைப் பிடித்துள்ளன.

அதிகம் தேடப்பட்ட பீட்சா:

இந்த முதல் ஐந்து இடங்களில் பீட்சா இடம் பெறவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு என்ற பட்டியலில் முதல் இடத்தை பீட்சா பிடித்துள்ளது. ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் இந்தாண்டு பீட்சாவைத் தேடியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பர்கர், கேக், மோமோஸ் போன்றவை அதிகம் தேடப்பட்ட உணவுகளாக உள்ளன.

இது தவிர, மக்கள் விரும்பி வாங்கிச் சாப்பிட்ட ஸ்நாக்ஸ் பட்டியலில் சிக்கன் ரோல், பிரென்ஞ் பிரைஸ், பாவ் பாஜி, சமோசா மற்றும் பேல் பூரி போன்றவை முறையே ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

சிக்கனுக்கு ஜே:

இந்தாண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட உணவுகளில் சிக்கன் முதலிடம் வகிக்கிறது. அதிகம் பேரால் விரும்பி உண்ணப்பட்ட உணவாக சிக்கன் பிரியாணியும், ஆசிய உணவு வகைகள் பட்டியலில் சிக்கன் ஃபிரைடு ரைஸ்-ம், ஆரோக்கிய உணவுப் பட்டியலில் வறுத்த சிக்கன் சாலடும் முதலிடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சிக்கன் பிரியாணியைத் தொடர்ந்து, தேசிய அளவில் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட சிக்கன் உணவுகளில் ’சிக்கன் 65’ இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூருவாசிகள் சிக்கன் லாலிபப்பை அதிகளவிலும், ஹைதராபாத்காரர்கள் சிக்கன் 65-யும், டெல்லி, குர்கான் மக்கள் பட்டர் சிக்கனையும், டெல்லி மற்றும் மும்பைவாசிகள் வறுத்த சிக்கனையும், சிக்கன் மோமோக்களையும் விரும்பி ஆர்டர் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகின்றது.

அதிகளவு அசைவப் பிரியர்கள்:

இந்தாண்டு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவர்களில் 57 சதவீதம் பேர் அசைவ உணவுப் பிரியர்களாகவும், மீதமுள்ள 43 சதவீதம் சைவ உணவுப் பிரியர்களாகவும் இருந்துள்ளனர். அதிகளவு அசைவ உணவுகளை ஆர்டர் செய்த வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நகரங்களுக்கு மத்தியில் பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல் அதிகளவு சைவ உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டது புனே நகரத்தில் தான்.

பெண்களுக்குப் பிடித்த டெசர்ட்கள்:

இந்தியர்கள் தங்களது உணவுகளில் பெரும்பாலும் இனிப்பை மறப்பதில்லை. ஸ்விக்கியின் ஆய்வுப்படி குலோப் ஜாமூன், டபுள் கா மீதா, ரசமலாய் போன்ற இனிப்புகளை இந்தியர்கள் இந்தாண்டு அதிகம் விரும்பி சாப்பிட்டுள்ளனர். ஐஸ்கிரீம் வகைகளில் டெத் பை சாக்லேட், டெண்டர் கோகனட், ப்ரௌவ்னி ஃபட்ஜ் சண்டே போன்றவை அதிகம் விரும்பி வாங்கப்பட்டுள்ளன.

ஆண்களைவிட பெண்களே அதிகளவில் டெசர்ட்களை ஆர்டர் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகின்றது. பெண்களுக்கு வைரங்களை விட டெசர்ட்களையே அதிகம் பிடிப்பதாக இந்த ஆய்வு வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆரோக்கிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு:

சுவைக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் தருகிறார்களோ, அதே அளவிற்கு மக்கள் மத்தியில் ஆரோக்கிய உணவுகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, வறுத்த சிக்கன் சாலட் சுவையான ஆரோக்கிய உணவுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பெரும்பாலான நகரவாசிகள் இதனையே தேர்வு செய்திருந்தபோதும், பெங்களூருவாசிகள் மட்டும் சற்று விதிவிலக்காக பழச்சாறுகளைத் தேர்வு செய்துள்ளனர். இதேபோல், ப்ரௌன் ரைஸ் சிக்கன், சிக்கன் ஓட்ஸ் மோமோஸ், ஓட்ஸ் பனானா டேட்ஸ் ஸ்மூத்திஸ் போன்றவை முறையே ஆரோக்கிய உணவுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

25 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் தான் அதிகளவில் ஆரோக்கிய உணவுகளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்துள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மொத்தத்தில் இந்தாண்டு இனிப்பு, காரம் என மிகவும் சுவையாகவே கடந்துள்ளது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இனி வரப்போகும் ஆண்டுகளும் இதுபோலவே உணவுப் பிரியர்களுக்கு சுவையானதாக அமைய நாமும் வாழ்த்துவோம்!

ஆங்கில கட்டுரையாளர்: நேஹா ஜெயின்