உலக அளவில் பெண்களை பாலியல் கொடுமைகள் பற்றி பேச வைத்த #metoo

1

சமூக வலைதளங்கள் எப்பொழுதும் ஏதோ ஒன்றை டிரென்ட் ஆக வைத்து அதை சுற்றியே பல பகிர்வுகளை பதிவிட்டு வலம் வரும். அந்த வகையில் #metoo என்ற இரண்டு சிறு வார்த்தைகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக புரட்சி செய்து வருகிறது.

பெண்களுக்கான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் இந்த சூழலில் பெண்கள் பலர் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். பாலியல் ரீதியான சங்கடங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை ’அலிஸ்ஸா மிலானோ’ ஞாயிற்றுகிழமை அன்று ஒரு ட்வீட் செய்து இருந்தார்.

“நீங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறீர்கள் அல்லது தாக்கப்பட்டுள்ளீர்கள் என்றால், ’me too’ என்று பதில் அளியுங்கள்,” என ட்வீட் செய்திருந்தார்.

அலிஸ்ஸா மிலானோ இந்த ட்வீடை பதிவிடும்பொழுது இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டார். ஆனால் கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் சமூக வலைதளங்களில் #metoo என்ற ஹாஷ்டாகில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதைப் பற்றி பேச சங்கடப்பட்ட பல பெண்கள் இதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை சொல்கின்றனர். இந்த விழிப்புணர்வு பலரை பேச மற்றும் சிந்திக்க வைத்துள்ளது.

அதிர்ச்சியூட்டும் வகையாக, என் சமூக வலைதளத்தில் இருக்கும் அனைத்து நண்பர்களும் இதை பகிர்ந்து வருகின்றனர். கிட்டத் தட்ட அனைத்து பெண்களும் இதை சந்தித்து உள்ளனர் என்பது தெரிய வருகிறது. இன்னும் திடுக்கிடும் தகவல்களாக வெளியில், அலுவுலகத்தில் ஏற்படும் துன்புறுத்தல்களை தாண்டி வீட்டிலும், நெருங்கிய சொந்தங்களுமே அதிக துன்புறுத்தல்களை நடத்துவதாக பல பெண்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

பாடகி சின்மயி #metoo வில் பல பதிவுகளை ட்வீட் செய்துள்ளார். அதில் ஒன்றாக,

“என் சமூக வலைதளத்தில் இருக்கும் அனைத்து பெண்களும், என் அனைத்து நண்பர்களும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பெரும்பாலான வன்முறையாளர்கள் பெரியவர்கள், ஆசிரியர்கள், சொந்தங்கள்.. இது நம் நாட்டையும் நமது கலாச்சாரத்தையும் பற்றி என்ன கூறுகிறது? (கலாச்சாரத்தின் மானுடவியல் அர்த்தத்தை தயவுசெய்து பாருங்கள்).”

இதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களையும், இதை பற்றி பெண்கள் அதிகம் பேச வேண்டும்போன்ற பல பகிர்வுகளை ட்வீட் செய்திருந்தார்.

இது நமக்கு மட்டுமே நடந்துள்ளது என எண்ணி சங்கடப் பட்ட நமக்கு, இது தனி மனித போராட்டம் அல்ல உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகிறது என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களைத் தாண்டி ஒரு சில ஆண்களும் இதை பகிர்ந்து வருகின்றனர். மேலும் பல ஆண்கள் தங்கள் நெருங்கியவர்களுக்கு இது போல் நடந்துள்ளது என்பதை அறிந்து ஆறுதலாக பல ட்வீட்டை பகிர்கின்றனர்.

இந்த #metoo பல பெண்களை பேச வைத்துள்ளது; இதனால் ஏதேனும் மாற்றம் வரும் என்பதை நம்பலாம்.