உள்ளூர் மொழியில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக உதவும் கல்வி வழிகாட்டி செயலி

0

தேர்வு காலத்தில் வழிகாட்டி புத்தகங்கள் மற்றும் கையேடுகளை தேடி அலைந்தது உங்களில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது ? இணைய யுகம் மற்றும் கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாவதற்கு முன்பெல்லாம் மாணவர்கள் எஸ்.சந்த் போன்றோர் உருவாக்கிய கையேடுகளை தான் அதிகம் பயன்படுத்தினர். அதே நேரத்தில் அரசுத் தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயாரவது என்றால் சரியான புத்தகங்கள் மற்றும் வழிகாட்டி தகவல்களை பார்த்து படிக்க வேண்டும்.

ஆனால் இன்றோ "ஆன்லைன் டியாரி" (OnlineTyari ) போன்ற இணைய சேவைகள் மற்றும் செயலிகள் மூலமாக கல்வி சார்ந்த தகவல்களை தேடுவது எளிதாகி இருக்கிறது. வங்கித்தேர்வுகள், ஐ.ஏ.எஸ் தேர்வு, ரயில்வே மற்றும் அரசு வேலைகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகத் தேவையான கையேடுகளை வழங்குகிறது.

கிராமப்புற இந்தியாவின் கவனம்

ஆன்லைன் டியாரியின், இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விபின் அகர்வால் கூறுகையில்,

“ஆண்டுதோறும் அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் 3 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றாலும் அவர்களுக்கு தங்கள் சொந்த மொழியில் கையேடுகளை அணுக போதிய வாய்ப்பு இருப்பதில்லை. இந்த டிஜிட்டல் இடைவெளியை போக்கும் வகையில் மொபைல் மூலம் எளிதாக அணுக்ககூடிய வகையில் கல்வி சார்ந்த தகவல்களை ஆன்லைன் டியாரி வழங்குகிறது” என்கிறார்.

நாஸ்காம் அறக்கட்டளைக்காக தேசிய டிஜிட்டல் கல்வி திட்டமான திஷா (டிஜிட்டல் சாக்‌ஷார்டா அபியான்) வில் ஆலோசகராக பணியாற்றிக்கொண்டிருந்த போது 2014 ல் விபினுக்கு இந்த சேவையை துவக்குவதற்கான எண்ணம் உண்டானது.

இந்தியர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்க பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்த திட்டத்தின் கீழ், குர்காவ்ன் அருகே உள்ள கிராமத்திற்கு சென்ற போது பலரும் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தயங்குவதை விபின் பார்த்தார். அவர்களிடம் பேசிய போது, கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஆன்லைனில் எதையும் கற்றுக்கொள்ள முடியாததால் வேலைவாய்ப்புகளை இழப்பதாக தெரிவித்தனர்.

"இதில் ஆச்சர்யம் என்ன என்றால், அவர்களில் பலரும் ஸ்மார்ட்போன் இயக்குவதில் பரிட்சயம் கொண்டிருந்தாலும் கம்ப்யூட்டர் இயக்க கற்றுக்கொள்வதிலும், ஆன்லைனில் தேர்வு எழுதுவதிலும் தயக்கம் கொண்டிருந்தனர். எனது ஐ.ஐ.டி சகாவான போலா மீனாவும் இதே பிரச்சனைக்குத் தீர்வுகான முயன்று கொண்டிருந்தார். எனவே இருவரும் ஒன்றாக சேர்ந்து மொபைல் மூலமான கல்விச் சேவையான ஆன்லைன் டியாரியை துவக்க முடிவு செய்தோம்” என்கிறார் விபின்.

மொழியின் ஆற்றல்

இதன் பின்னே உள்ள குழுவினர் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்காக புதுமையான வர்த்தக மாதிரியையும் உருவாக்கத் தயாராக உள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு மொபைல் மூலமே கல்வி சார்ந்த சேவைகளை வழங்க முடியும் என்றும் அறிந்திருந்தனர்.

மேலும் கல்வி தகவல்களை உள்ளூர் மொழியில் வழங்குவதன் அவசியத்தையும் உணர்ந்திருந்தனர். இந்தியாவுக்கான மற்றும், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவக்கூடிய ஒன்றை உருவாக்க விரும்பியதாகவும் விவின் கூறுகிறார். இந்தக்குழு மாணவர்களின் தேவையை ஆய்வு செய்து பயனாளிகளை மையமாக கொண்ட மாதிரியை உருவாக்கியது.

ஆன்லைன் டியாரி, கல்வி சார்ந்த உள்ளடக்கத்திற்கான பரிவர்த்தனை சந்தையாக இருக்கிறது. இந்தச் செயலி ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி மொழியில் செயல்படுகிறது. மற்ற உள்ளூர் மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த செயலியின் பயனாளிகளில் ஒருவரான நரேந்திர குமார் தில்லி தலைமை காவலர் தேர்வுக்கு இந்த செயலியின் உதவியுடன் தயாராகி தேர்வானாதாக நன்றியுடன் தெரிவிக்கிறார்.

நீண்டகால நண்பர்கள்

இக்குழுவினர் ஐ.ஐ.டி கான்பூர் நாட்களில் இருந்து 15 ஆண்டு காலமாக நண்பர்களாக இருக்கின்றனர். விபின் மற்றும் போலா வேறு வேறு நிறுவனங்களில் பணியாற்றினாலும் பரஸ்பரம் தொடர்பில் இருந்தனர். பின்னர் ஒன்றாக இணைந்து கல்விச் சேவை செயலியை அறிமுகம் செய்ய தீர்மானித்தனர். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் நட்பு மூலமாக தங்கள் குழுவை அமைத்துக்கொண்டுள்ளனர்.

இந்த சேவையை துவக்குவதற்கு முன்பாக விபின் விசியாக மற்றும் தொழில்முனைவோராக இருந்திருக்கிறார். போலா முதல் டாக்சி சேவை செயலியை உருவாக்கியதுடன் மைக்ரோசாப்டின் இந்திய மேம்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப தலைவராக இருந்திருக்கிறார்.

"மையக் குழுவில் நிஷித் மாத்தூர், அமீத் ஜெய்ஸ்வால் மற்றும் ராஜ்வீர் இடம் பெற்றுள்ளனர், இவர்கள் ஆன்லைன் டியாரியில் இணைவதற்கு முன் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பதவியில் இருந்துள்ளனர். நிஷித் வீயூகம் மற்றும் நிதியில் அனுபவம் உள்ளவர். அமீத், ஜீவன்சாத்தி மற்றும் ஷைன் பிளாட்பார்ம்சில் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக இருந்திருக்கிறார். ராஜ்வீர் ராம்கே சிஸ்டம்சில் விற்பனை மேலாளராக இருந்தார்” என்கிறார் விபின்.

வளர்ச்சிப்பாதை

டிசம்பர் மாதம் வரை இந்தச் செயலி 2.5 மில்லியன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 2,50,000 தீவிர பயனாளிகளை பெற்றுள்ளதாகவும் இக்குழு தெரிவிக்கிறது. துவக்கத்தில் குறைந்தபட்ச சாத்தியம் கொண்ட சேவையை அறிமுகம் செய்தது. அதன் பிறகு பயனாளிகள் கருத்துக்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டது.

எஸ்.சந்த் பப்ளிகேஷன்ஸ், உப்கார்க் பப்ளிகேஷன்ஸ், அரிஹண்ட் பப்ளிகேஷன்ஸ் மற்றும் கேரியர் லாஞ்சர் ஆகியவற்றுடன் உள்ளடக்கம் தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது. சமீத்தில் இந்தக்குழு 500 ஸ்டார்ட் அப்ஸ், மோகந்தாஸ் பை, டாண்டம் கேபிடல், குளோப்வெஸ்டர், எயிட் கேபிடலின் விக்ரம் சக்ரா மற்றும் இக்ஸ்க்லோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அலோக் பாஜ்பாயியிடம் இருந்து ரூ. 5 கோடி ரூபாய் நிதியாகத் திரட்டியுள்ளது. தனது முதலீடு பற்றி விக்ரம் கூறுகையில்,

"இந்தியாவில் அடுத்த 350 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளிகள் மூலமாக இந்தியாவில் உள்ளூர் மொழி உள்ளடக்க நுகர்வில் பெரும் மாறுதல் நிகழ இருக்கிறது. உள்ளூர் மொழியில் கவனம் செலுத்துவதால் ஆன்லைன் டியாரி இந்த புதிய பயனாளிகளை ஈர்க்கும் நிலையில் உள்ளது” என்று கூறுகிறார்.

15 மில்லியன் பயனாளிகளை அடையவும், அண்டு இறுதிக்குள் முக்கிய இந்திய மொழிகளில் விரிவாக்கம் செய்து கொள்ளவும் இக்குழு திட்டமிட்டுள்ளது. "மாணவர்கள் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்திக்கொண்டு, தங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வகையில் பயனாளிகளுக்கு ஏற்ற மற்றும் அவர்கள் கற்றலுக்கு உகந்த வகையிலான அமைப்பை உருவாக்கி வருகிறோம்” என்கிறார் விபின்.

யுவர்ஸ்டோரி பார்வை

ப்ளூம்பர்க் தகவல்படி இந்தியா இந்த கல்விப்புரட்சியின் மையமாக இருக்கிறது. இந்தியாவில் இணைய கல்விச் சந்தை 18 சதவீதமாக வளர உள்ளது. மேலும் சுயமாக கற்றுக்கொள்ளும் இணைய கல்வி முறையிலும் இந்தியா 55 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

2017 ல் இந்திய ஆன்லைன் கல்விப் பிரிவு 40 பில்லியன் டாலர் கொண்டதாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ம் ஆண்டு வாக்கில் இந்தியா 500 மில்லியன் திறன் வாய்ந்த ஊழியர்களை உருவாக்க இலக்கு கொண்டுள்ளதாக ஐ.பி.இ.எப் அறிக்கை தெரிவிக்கிறது. 2000 எப்ரல் முதல் 2015 ஜனவரி வரை இந்தப் பிரிவில் அந்நிய நேரடி முதலீடு 1071.15 டாலராக இருந்துள்ளது.

இந்தியாவில் உள்ளூர் மொழி சேவைகளுக்கானத் தேவை அதிகரிக்கிறது. இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 29 மொழிகளில் குறைந்தது பத்து லட்சம் பேருக்கு மேல் பேசப்படுகின்றன. 22 மொழிகள் அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இணையத்தில் ஆங்கில மொழி உள்ளடக்கம் 56 சதவீதமாக உள்ள நிலையில் இந்திய மொழிகளின் உள்ளடக்கம் 0.1 சதவிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எல்லாம் மொபைல் இணையத்தை பயன்படுத்துவதாக வைத்துக்கொண்டாலும் கூட 100- 160 மில்லியன் பயனாளிகள் உள்ளடக்கத்தை படிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இன்ஷார்ட் மற்றும் ஸ்னேப்டீல் போன்றவை உள்ளூர் மொழிகளில் சேவை வழங்கத் துவங்கியிருக்கும் நிலையில் இதில் மாற்றம் வரலாம்.

இணையதள முகவரி: OnlineTyari

ஆக்கம்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்