ஆணாதிக்கத்தை உடைத்தெரிந்த 5 அசாதாரண இந்தியப் பெண்கள்  

0

பாரம்பரியமாக ஆண் சமுதாயம் பின்பற்றும் நடைமுறைகளை முதலில் தகர்த்தெரிந்து தனக்கென புதிய பாதை வகுத்துக் கொண்டு அதை மற்ற பெண்களுக்கு முன்உதாரணமாக அளிக்கும் பெண்களே அனைவராலும் அதிகம் பாராட்டப்படுவார். ஆண்டுகள் கடந்தாலும் பாலின பாகுபாடு என்பது இன்னும் சமுதாயத்தை விட்டு நீங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்கள் சிறு வயது முதலே அழகுக்கலை தொடர்பான பணியைப் பற்றியே கனவு காண்பர், ஆனால் ஆண்கள் சிறு வயது முதலே தீயணைப்புத்துறை அல்லது ரயில் ஓட்டுனர் போன்ற சவாலான பணிகளை மனதில் உருவேற்றிக்கொள்வர் என்ற கருத்து இன்றளவும் உலவுகிறது. இங்கே ஒரே மாதிரியான சிந்தனை கொண்ட சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஐந்து பெண்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம், சிறுவர்களுக்கு இவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.

முதல் ரயில் ஓட்டுனர் – சுரேகா யாதவ்

இந்தியன் ரயில்வே ஆசியாவின் மிகப்பெரிய ரயில் அமைப்பு, அதே போன்று உலகிலேயே அதிக அளவில் ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இந்த ஊழியர்கள் பட்டியலில் 1989ம் ஆண்டு இடம்பெற்ற முதல் பெண் ரயில் ஓட்டுனர் சுரேகா யாதவ். சுரேகா துணை ஓட்டுனராக பணியில் சேர்ந்தார், அதன் பின்னர் முதல் மகளிருக்கான சிறப்பு ரயிலை ஓட்டினார். இது மத்திய ரயில்வேயின் உள்ளூர் ரயில், 2000ம் ஆண்டு மமதா பானர்ஜி ரயில்வே மந்திரியாக இருந்த போது முதன்முதலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 2011ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று சுரேகா, புனே முதல் மும்பை வரை செல்லும் பிரபல டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரயிலை ஓட்ட தேர்வு செய்யப்பட்டார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் ஒரு சரித்திரம் படைப்பார் என்று வேலைக்கு விண்ணப்பித்த போது நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. இன்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் லோகோ பைலட்டுகளாகவும், துணை ஓட்டுனர்களாகவும் இந்தியன் ரயில்வேயில் பணியாற்றுகின்றனர்.

முதல் ஒலிம்பியன் – கர்ணம் மல்லேஷ்வரி

ஆந்திராவின் இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் பாசத்தோடு அழைக்கப்படுவர், பளுதூக்கும் வீராங்கணை கர்ணம் மல்லேஷ்வரி 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் தேசத்தை பெருமைப்படவைத்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணான அவருக்கு எப்போதும் நாட்டின் விளையாட்டு வரலாற்றில் பெருமைக்குரிய முக்கிய இடம் உண்டு. 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கர்ணம் தான் பங்கேற்ற போட்டிகளில் 11 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளார். இது எல்லாவற்றையும் விட சிறப்பான விஷயம் இந்தியப் பெண்கள் கடினமான போட்டிகளைக் கண்டு அஞ்சுவதில்லை அதற்கு பளுதூக்கும் போட்டியும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளார். அவரின் வெற்றிக் காலடித் தடம் பிடித்து வரவிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அடுத்த சாதனைப் பெண்மணியைக் காணலாம் என்று நம்புவோம்.

கோபி பாலைவனத்தைக் கடந்த முதல் பெண் – சுசேதா கடேதங்கர்

போராட்டம் மற்றும் சாதனை விளையாட்டுகளில் பெண்களைக் காண்பது அரிதிலும் அரிது. ஆனால் சுசேதா கடேதங்கருக்கு இந்த குணம் இயல்பாகவே காணப்பட்டது. புனேவைச் சேர்ந்த சுசேதா மங்கோலியாவில் உள்ள 1,600 கிலோமீட்டர் நீளம் கொண்ட கோபி பாலைவனத்தைக் கடந்து வந்த முதல் பெண்மணி. ரிப்லே டேவென்போர்ட்டு ஏற்பாடு செய்திருந்த பாலைவனச் சுற்றுப்பயணத்தில் 9 நாடுகளைச் சேர்ந்த 13 பேர் குழுவில் சுசேதாவும் ஒருவர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏழு பெண்கள் மலையேற்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அந்த 13 பேரில் 3 பேர் மட்டுமே இறுதிச் சுற்றுக்குச் சென்றனர் அவர்களில் ஒரே இந்தியர் சுசேதா. இதற்காக அவர் 6 மாத பயிற்சி எடுத்துக்கொண்டார், தினந்தோறும் 24 கிலோமீட்டர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வீடு வரை மிகவும் கனமான தோள்பையுடன் நடந்தே சென்று வந்தார்.

இந்த இண்டியானா ஜோன்ஸ்க்கு ஏற்றம், மலையேற்றம், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஆறுகளை நீந்திக் கடந்து செல்வதன்றால் அலாதி பிரியம். சுசேதா 2008ம் ஆண்டு எவரெஸ்ட் சிகர பேஸ் கேம்பிற்கு மலையேற்றம் செய்திருக்கிறார். அதே போன்று ‘இந்திய சாகச போட்டி என்டூரோ 3’ விருதையும் அவர் வென்றுள்ளார். இதில் 180 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டம் மற்றும் 80 கிலோமீட்டர் மலையேற்றம் மற்றும் ஆறுகளை நீந்திக் கடந்து செல்லுதலும் அடங்கும்.

முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி – கிரண் பேடி

கிரண் பேடி தன்னுடைய சமூகப் பணி மற்றும் அரசியல் பிரவேசத்தால் தற்போது செய்திகளில் அதிகம் அறியப்படுபவர். ஆனால் இந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கணை முதன்முதலில் அனைவரின் பார்வையில் விழக்காரணமாக அமைந்தது முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற அசாத்தியமே. இந்தப் பதவி கோடிக்கணக்கான ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது மேலும் அவரை மையமாக வைத்து பல வெற்றிப் படங்கள் உருவாகின. 1972ம் ஆண்டு கிரண், முசோரியில் உள்ள தேசிய நிர்வாக அகாடமயில் காவல்துறை பயிற்சிக்காக சேர்ந்த போது 80 ஆண்கள் கொண்ட அந்தக் குழுவில் இடம்பெற்ற ஒரே பெண்மணி கிரண். 1975ம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பின் போது தேசத்தின் பார்வை அவர் மீது விழுந்தது இதற்குக் காரணம் அவர் டெல்லி காவல்துறையின் ஆண்கள் படைப்பிரிவு அணிவகுப்பை தலைமைஏற்று சென்றுகொண்டிருந்தார்.

டெல்லியில் அகாலி நிரன்காரி சீக்கியர்கள் கலவரத்தைக் கையாண்டது முதல் தங்கள் பகுதிகளில் குற்றங்கள் குறைய கடுமையாக பாடுபட்ட காண்ஸ்டபிள்களை பாராட்டியது மற்றும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அலுவலகமாக இருந்தாலும் தவறான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததற்காக வாகனங்களை அப்புறப்படுத்தியது வரை அனைத்திலும் அதிரடியை புகுத்தி நேர்மையை கடைபிடித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் கிரண் பேடி என்ற அழைக்கப்பட்டார், கிரண் என்றால் எதற்கும் அஞ்சாதவர், மேன்மை அடைபவர், அடிக்கடி இடமாறுதல்களை சந்தித்த போதும் அநியாயத்தை அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தவர். அவரைப் பற்றிக் கூற ஒரு உதாரணம் இல்லை பல சம்பவங்கள் கொட்டிக் கிடக்கின்றன, அவர் தன்னுடைய ஒவ்வொரு செயலையும் நேர்மையுடனும் உத்வேகத்துடனும் செய்கிறார்.

திஹார் சிறையில் கிரண் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டபோது அவர் அந்தச் சிறைச்சாலையை முன்மாதிரி சிறையாக மாற்றியமைக்க முடிவுசெய்தார். அவர் சில மறுவாழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் வகுப்புகளை குற்றவாளிகளுக்கு அறிமுகம் செய்தார். கல்வி, தியானம், யோகா சார்ந்த கலாச்சார செயல்பாடுகளும் இதில் அடங்கும். திஹார் சிறையை முயற்சிக்கான இடமாக மாற்றி அங்கீகரித்தற்காக 1994ம் ஆண்டு அவர் ரேமன் மகசேசே விருதை பெற்றார்.

முதல் தீயணைப்பு வீராங்கணை – ஹர்ஷினி கன்ஹேகர்

நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு பயிற்சி மையத்தில் தீயணைப்புத் துறை சார்ந்த பொறியியல் படிப்பிற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த போது ஹர்ஷினி கன்ஹேகருக்கு அவர் தான் இந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கணை மற்றும் அவர்கள் பிரிவில் அவர் ஒருவர் தான் பெண் என்பதும் தெரியாது. அந்தக் கல்லூரி பேராசிரியர்களுக்கும் இந்த அனுபவம் புதிது, பெண்களுக்கென்று எந்த மருத்துவ பரிசோதனை திட்டமும் அங்கு வகுக்கப்படவில்லை என்பதோடு பெண்கள் விடுதியும் இல்லை. ஹர்ஷினி சிறப்பு அனுமதி பெற்று கல்லூரிக்கு தினந்தோறும வந்து செல்லும் வகையில் அந்த படிப்பில் சேர்ந்தார். 2005ம் ஆண்டு அவர் படிப்பை முடித்து எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆணையத்தில் (ஓஎன்ஜிசி) தீ மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

கனஆயுதங்களை கையாள்வதில் இருந்து பெரிய தீயணைப்பு வாகனத்தை ஓட்டுவது வரை அனைத்தையும் ஹர்ஷினி விரும்பி செய்தார். வேலையில் இது ஆண்களுக்கானது இது பெண்களுக்கானது என்ற பாகுபாடு இல்லை என்று அவர் நினைத்தார். இந்தத் துறையை தேர்வு செய்ததற்காக அனைவரிடத்திலும் முதலில் அவநம்பிக்கையை பெற்றாலும் அவரின் பெற்றோர் உறுதியாக இருந்தனர். ஹர்ஷினிக்குத் தான் விரும்பும் பணி கிடைத்தால் அந்த திரில் அனுபவம் அவரை ஒரு வரலாறு படைக்க வைக்கும் என்பதில் அவர்கள் திடமாக இருந்தனர். இன்று அவர்கள் பெருமையின் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருக்கிறார்கள், இதற்குக் காரணம் அவர்களின் அன்பு மகள் பல ஆயிரம் இளம்பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

இந்த ஐந்து பெண்களும் உடல் வலிமையைவிட சிந்தனையின் வலிமை பெரிது என்பதை நிரூபித்துள்ளனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டிய ஒரு உண்மை என்னவென்றால் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய துறையை தேர்வு செய்து அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர், அவர்களுக்கு சகநண்பர்கள் மற்றும் மிகப்பெரிய சமுதாயத்தின் ஆதரவு கிடைத்திருக்கிறது. இதற்கெல்லாம் முதல்படி அமைத்தது தைரியம், யாருமே பயணிக்காத பாதையில் பயணிக்கும் அசாதத்திய தைரியம் அது. யாருக்குத் தெரியும் நீங்கள் ஒரு பாதையை நிர்ணயித்துவிட்டால் சாலை கூட உங்களுக்கு ஏற்ப தடத்தை எளிதாக்கிக் கொடுக்கும்.

கட்டுரை: ஷரிகா நாயர் | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்