ரயில் பயணத்தில் பிறந்த பயணிகள் செயலி ‘ஓமித்ரா’

1

இணைக்கப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம். இதற்கேற்ப ஒரே சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுடன் இணைக்கும் செயலி (APP), சமூக தொடர்பு செயலி மற்றும் சுற்றுலா பயண நண்பர்களுக்கான செயலி என பரஸ்பரம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள உதவும் விதவிதமான செயலிகள் சந்தையில் இருக்கின்றன. இந்த பட்டியலியில் சேர்ந்திருக்கும் ஓமித்ரா(OMitra) செயலி இந்திய ரெயில் பயணங்களுக்கான புதுமையான சமூக செயலியாகும். ரெயில் பயணிகள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது இந்த செயலி.

விகாஸ் ஜெகேதியா (Vikas Jagetiya) , ஒரு மோசமான ரெயில் பயண அனுபவத்திற்கு பிறகு பயணிகளுக்கான இந்த சமூக செயலியை உருவாக்கும் உத்வேகம் பெற்றார். அவர் ஐதராபாத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு தனியே, 30 மணிநேர பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது தான் சராசரி ரெயில் பயணிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை- குடும்ப உறுப்புனர்கள் வேறு வேறு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பது முதல் சரியான உணவு கிடைக்காதது, எந்த ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும் என தெரியாமல் இருப்பது மற்றும் அடிப்படையான பயண விவரங்களை அறியாமல் இருப்பது போன்றவற்றை- அவர் உணர்ந்தார்.

ஓமித்ரா குழு
ஓமித்ரா குழு

செயல் வடிவம்.

”இந்த பயணத்தின் போது தான் சக பயணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி ரெயில் பயணங்களை இனிமையானதாக்க உதவும் செயலியை உருவாக்கும் எண்ணம் உண்டானது” என்கிறார் விகாஸ். ஐ.ஆர்.சி.டிசி தளம் மூலம் ரெயில் டிக்கெட் பதிவு செய்து அதற்கான குறுஞ்செய்தியை பெற்ற பிறகு இந்த செயலி அந்த குறுஞ்செய்தியை அடையாளம் கண்டு பயணி சார்பில் அனைத்து விஷயங்களையும் கவனிக்கிறது; அதாவது ரெயிலின் நிலை அறிதல், சக பயணிகளை கண்டறிதல், பயணத்திற்கு முன்னதாக நினைவூட்டல் வசதியை அமைத்துக்கொள்ளுதல் மற்றும் காத்திருத்தல் பட்டியல் என்றால் டிக்கெட் உறுதியாகிவிட்டதா எனும் தகவல் அளிப்பது ஆகியவற்றை செயலி மேற்கொள்கிறது . ரெயிலின் பயண நிலை மற்றும் ரெயில் நிலையங்களையும் அது டிராக் செய்கிறது.

மேலும் சக பயணிகளுடன் தொடர்பு கொண்டு, அவர்களுடன் இணைந்து பயணிப்பது மற்றும் பயணிகளுடன் தொடர்பு கொண்டு இருக்கைகளை மாற்றிக்கொள்வது போன்றவற்றுக்கும் உதவுகிறது. ஐந்து நிமிடங்களுக்குள் உதவிக்கு ஏற்பாடு செய்யும் அவசர கால பட்டன் உள்ளிட்ட மற்ற அம்சங்களும் இருக்கின்றன.

சவால்கள்

இந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய சரியான சகாக்களை தேடுவது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார் விகாஸ். மேலும் இந்த செயலி முற்றிலும் புதுமையான கருத்தாக்கம் கொண்டதாக இருந்தது. பொதுவாக அறிமுகம் இல்லாதவர்களுடன் பேச வேண்டாம் என்பதே சமூகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாக இருக்கும் நிலையில் இந்த செயலி இதில் உள்ள சிக்கலை நீக்கி, பயணிகள் மற்றவர்களுடன் பரஸ்பரம் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. விகாஸ், நிறுவனராக இருக்க அவரது கீழ் 3 முழு நேர டெவலப்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

விளம்பர வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ள இக்குழு, உணவு மற்றும் பயணம் சார்ந்த சேவைகளையும் இணைக்க உள்ளது.“இப்போதைக்கு எங்கள் கவனம் எல்லாம் பயணங்களை இனிமையாக்குவது தான். எளிமையான ரெயில் பயண சேவையை வழங்க விரும்புகிறோம்” என்கிறார் விகாஸ். இந்த செயலி, 4,000 பார்வைகளை பெற்று வருவதுடன் வார அடிப்படையில் 10% வளர்ச்சியை பெற்று வருகிறது.

சந்தை வாய்ப்பு

இந்தியாவில் ரெயில் பயண வெளியில் பல செயலிகள் அறிமுகமாகி வருகின்றன. 2013-14ல் இந்திய ரெயில்வே மூலம் 8,420 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆனால் பயணிகளின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது பெரும் சவாலாக இருப்பதாக ரெயில்வே அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த குழு, ரிஸ்டா (RISSTA) எனும் பயண பாதுகாப்பு செயலியையும் உருவாக்கியுள்ளது. உள்ளூர் ரெயில் பயணிகளுக்கு 5 நிமிடங்களில் இது பாதுகாப்பு உதவியை அளிக்கிறது. முதல் கட்டமாக ஐதாரபாத்தில் உள்ள புறநகர் ரெயில் பயணிகளுக்கு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காப்புரிமை பெறும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து தீர்வை உருவாக்கி வருகின்றனர். தெற்கு-மத்திய ரெயில்வே மற்றும் ஆர்.பி.எஃப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் பலர் டிஜிட்டல் உலகில் நுழைந்து வரும் நிலையில் அதற்கேற்ற வகையில் மேம்பட்ட ரெயில் சேவை அமைப்பு தேவைப்படுகிறது. இதன் காரணமாக ரெயில் சேவை செயலிகள் அதிகரித்து வருகின்றன. ரெயில்யாத்ரி ( RailYatri), டிரைன்மேன் (Trainman) மற்றும் கன்பர்ம் டிகேடி (ConfirmTKT.) ஆகியவை இவற்றில் சில.

ஓமித்ரா இணையதளம்;http://omitra.in/

ஓமித்ரா செயலி: https://play.google.com/store/apps/details?id=com.train.omitraapp