அமெரிக்க தேர்தலில் வரலாறு படைத்த பெண்கள்!

0

2018 அமெரிக்க இடைத்தேர்தல், உலகின் சூப்பர் பவரான அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் பெரிய முன்னேற்றத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது. சிறுபாண்மை சமூகத்தைச் சேர்ந்த பலரும் சாதனை படைத்திருக்கிறார்கள்; இதுவரை நடைமுறையில் இருந்த ஆதிக்கத்தை தகர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள் பலர் வரலாறு படைத்திருக்கிறார்கள். 2018 அமெரிக்க இடைத்தேர்தலில் வரலாறு படைத்த ஜனநாயக கட்சியின் பெண்கள் சிலரைப் பற்றிய அறிமுகம்.

முதல் இஸ்லாமியப் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்:

அமெரிக்காவின் சட்டமன்றத்தில் இஸ்லாமியப் பெண்கள் உறுப்பினர்களாவது இதுவே முதன்முறை. இஸ்லாமியர்களான ரஷிதா த்லெய்பும், இல்ஹான் ஓமரும் புலம் பெயர்ந்த பின்புலத்தை உடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1) ரஷிதா த்லெய்ப்

ரஷிதா த்லெய்ப்
ரஷிதா த்லெய்ப்

பாலஸ்தீனிய அகதிகளின் மகளாக பிறந்த ரஷிதா த்லெய்ப், அமெரிக்காவின் மிஷிகனில் வளர்ந்தவர். ரஷிதா பிறப்பதற்கு ஒரு வருடம் முன்னர் தான் அவருடைய பெற்றோர்கள் பாலஸ்தீனில் இருந்து அமெரிக்கா வந்தனர். என்ன தான் ரஷிதா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நடையிலும் அவர் ஒடுக்குமுறையை சந்தித்ததாக சொல்கிறார். 

விமான நிலைய சோதனைகளில் தொடங்கி, தினசரி வாழ்க்கை வரை நிறைய போராட்டங்களை கடந்திருக்கிறார். இருந்த போதிலும், தான் பாலஸ்தீனத்தை சேர்ந்தவள் என்பதை ஒவ்வொரு நாளும் பெருமையாக சொல்லிக் கொள்ள நினைக்கும் ரஷிதா, தான் பதவியேற்கும் போது பாலஸ்தீனத்தின் பாரம்பரிய உடையையே அணியப் போகிறாராம்.

2) இல்ஹான் ஒமர்

ஓமர்
ஓமர்

சோமாலியாவில் பிறந்த இல்ஹான் ஓமர், தன்னுடைய எட்டு வயதில் போர் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினார். எட்டு வயதில் இருந்து பனிரண்டு வயது வரை கென்யாவில் இருந்த ததாப் அகதிகள் முகாமில் வாழ்ந்த ஒமர், அமெரிக்க சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார் என்பது அந்த அகதி முகாமில் அவரோடு விளையாடிய மற்ற குழந்தைகள் எதிர்பாராதது. 1995 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குள் அகதியாக நுழைந்தார் இல்ஹான் ஓமர். தற்போது பெற்றிருக்கும் வெற்றியை படிப்படியாக வந்தடைந்தார்.

தற்போது ததாப் முகாம் மூடப்படவிருக்கிறது எனும் செய்தி அங்கிருக்கும் அகதிகளை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இந்நிலையில், ஓமரின் வெற்றி சோமாலிய அகதிகளுக்கு ஆதரவான மாற்றங்கள் உண்டாக காரணமாயிருக்கும் எனும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

3) அலெக்ஸாண்ட்ரியா ஒகேசியோ-கார்டஸ் : இளம் பெண் சட்டமன்ற உறுப்பினர்

அலெக்ஸாண்ட்ரியா
அலெக்ஸாண்ட்ரியா

இளம் வயதிலேயே அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஆன பெண் எனும் சாதனைக்கு சொந்தக்காரர் அலெக்ஸாண்ட்ரியா ஒகேசியோ-கார்டஸ். தன்னுடைய 29 ஆவது வயதில் அமெரிக்காவின் சட்டமன்ற உறுப்பினராகி வரலாறு படைத்திருக்கிறார் அலெக்ஸாண்ட்ரியா ஒகேசியோ-கார்டஸ். பெற்றோரில் ஒருவரை புற்றுநோய்க்கு இழந்து, இளம் வயதிலேயே கடினமான வேலைகளை ஏற்று செய்யத் தொடங்கிய இவர், கடந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் ஒரு பாரில் தான் வேலை செய்து கொண்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

தற்போது, ந்யூ யார்க்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் அலெக்ஸாண்ட்ரியா, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் வாஷிங்டன்னிற்கு வருமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்.

“அடுத்த மூன்று மாதங்களுக்கு எனக்கு வேறு வருவாய் இல்லை. என்னால் வாஷிங்டன்னில் ஒரு வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது. அமெரிக்காவின் தேர்தல் ஆணையம், உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் பதவிகளுக்கு வருவதை தடுப்பதற்காக மட்டுமே இப்படி விதிமுறைகளை வைத்திருக்கிறது. இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் யதார்த்தங்களை உணர்த்துகிறது,” என்று இது குறித்து சொல்லியிருக்கிறார்.

4) ஷேரிஸ் டேவிட்ஸ் மற்றும் டெப் ஹாலண்ட் : முதல் அமெரிக்க பூர்வகுடி பெண் உறுப்பினர்கள்

ஷேரிஸ் டேவிட்ஸ் மற்றும் டெப் ஹாலண்ட்
ஷேரிஸ் டேவிட்ஸ் மற்றும் டெப் ஹாலண்ட்

கான்ஸாஸை சேர்ந்த ஷேரிஸ் டேவிட்ஸும், ந்யூ மெக்சிகோவை சேர்ந்த டெப் ஹாலண்டும் தான் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகும் முதல் அமெரிக்க பூர்வகுடி பெண்கள். இதில் ஷேரிஸ் டேவிட்ஸ் அப்பாவை போரில் இழந்ததால், அம்மாவின் ஆதரவில் மட்டுமே வளர்க்கப்பட்டவர். ஓபாமா வெள்ளை மாளிகையில் இருந்த போது, அங்கு பணியாற்றியவர். லகுனா எனும் பழங்குடியைச் சேர்ந்த டெப் ஹாலண்ட் நெடு நாள் மனித உரிமை ஆர்வலர் மற்றும் போராளி.

5) அயானா பிரெஸ்லி : மசசூசட்ஸ் மாகாணத்தில் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் கறுப்பின பெண்

அயானா பிரெஸ்லி
அயானா பிரெஸ்லி

அயானாவின் குழந்தைப்பருவம் முழுவதுமேயே அவருடைய போதைப்பழக்கத்திற்கும், குடிப்பழக்கத்திற்கும் அடிமையாய் இருந்திருக்கிறார்; அவருடைய அம்மா நிறைய வேலைகள் செய்து அயானாவை படிக்க வைத்தார். பள்ளி காலத்தில் இருந்தே சுறுசுறுப்பான பெண்ணாக இருந்த அயானா, எந்த நிலையிலும் தேங்கி நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தார். 

“வறுமையை ஒழித்து, நீதியை வழங்கும் ஒரு அமைப்பை உண்டாக்குவதற்கான ஒரு நோக்கை தான் உங்களுக்கு அளிக்கிறேன். ஒருவருக்கு ஒரு வேலை மட்டுமே போதுமானதாக இருக்கும் ஒரு பொருளாதாரத்தையும்; திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கான உரிமையை பெற்றுக் கொள்ளும் சூழலையும் உண்டாக்க நினைக்கிறேன்,” என்பதுவே அயானாவின் பிரச்சாரமான இருந்தது.

இவர்களை தவிர மார்ஷா பிளாக்பர்ன், ஜேனட் மில்ஸ், ஏபி ஃபின்கெனூவர், ஜஹானா ஹேய்ஸ், வெரோனிகா எஸ்கோபார் மற்றும் சில்வியா கார்சியா ஆகிய பெண்களும் கூட இந்த இடைத்தேர்தலில் வரலாறு படைத்திருக்கிறார்கள். இந்நாள் வரை எழுத்தளவிலேயே நான் பார்த்து வரும் பெண்ணிய புரட்சி, யதார்த்தத்தில் நடப்பது நம்பிக்கையளிப்பதாகவே இருக்கிறது. 

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha