”நீங்கள் என்னை ஆணாக பார்க்க வேண்டாம், பெண்ணாகவும் பார்க்க வேண்டாம், மனிதனாக பாருங்கள்: ஒரு திருநம்பியின் வேண்டுகோள்!

4

இவ்வுலகில் ஆண், பெண் என இருபாலினம் மட்டும் தான் ஏகோபித்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது. பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து வாழ முற்படுவோரை ’திருநங்கை’ (transwoman) என்றும் பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் ’திருநம்பி’ (transmen) என்று அழைக்கப்படுகின்றனர். இது ஒருவரது உடலில் உள்ள ஹார்மோன்களின் மாற்றத்தால் வரும் நிலை தான், இதை குற்றம் என எண்ணுவது மடத்தனம். இவை இயல்பானது எனும் புரிதல் இருந்தாலே போதுமானது என்று பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

ஃப்ரான்க் ரோஹ்ரிக் என்ற ஜெர்மனி நாட்டை சேர்ந்த 25 வயது புகைப்படக்கலைஞர் உலகெங்கிலும் உள்ள பலரது வாழ்க்கையை படமாக்குவதை விரும்புபவர். விதவிதமான மனிதர்களை கதைகளை தன் வீடியோ மூலமும், காட்சிகள் மூலம் உலகிற்கு எடுத்துரைப்பதில் நாட்டம் கொண்டவர். ஒரு முதியவரின் வாழ்க்கை, கார் ஓட்டுனரின் தினசரி, விவசாயி ஒருவரின் அயராத உழைப்பு என்று வெவ்வேறு துறைகளில் உள்ள பலரைப் பற்றி படம் எடுத்து ஆவணமாக எடுத்து வருகிறார். 

இந்த வழியில், திருநம்பியாக மாறிய ஒருவரின் வாழ்க்கை முறைகளை குறு ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார் ஃப்ரான்க். அவர் படமாக்கியது மதுரையில் பெண்ணாக பிறந்து ஆணாக விருப்பப்பட்டு மாறிய ராஜா என்பவரின் வாழ்க்கை கதையை. அவரின் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டுள்ள ராஜாவின் கதை: 

ராஜா- இவர் சந்தியா என்ற பெண்ணாக பிறந்து, ஆணாக இந்த சமுதாயத்தில் வாழ்ந்து வருகிறார்மதுரையை சொந்த ஊராக கொண்டவர். இவர் தன் நிலையை பற்றி கூறுகையில்-

”நான் எனது பதினாலவது வயது வரை பெண்ணாகவே வாழ்ந்தேன். அதற்கு பின் தான் எனக்குள் ஏற்பட்ட மாற்றம் என்னை ஆணாக மாற்றியது. பெண்கள் அணியும் உடைகள், நகைகள் என பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பொருள்களையும் வெறுத்தேன். ஆணை போலவே உடை அணிந்தேன். முடி கூட ஆண்களை போலவே வெட்டினேன். நான் ஆணாகவே மாறினேன்.”

தனக்கு இது மிகவும் பிடித்து இருந்ததாகவும், ஆனால் அவரின் தந்தைக்கும், உறவினருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் ஆணாக மாறியதில் துளிவும் விரும்பமில்லை என்றார் ராஜா.

அவர் தந்தை கூறுகையில் –

என் பிள்ளை பெண்ணாக வளர்வதே எனது விருப்பம். இந்த சமூகம் எனது பிள்ளையை பெண்ணாகவே பார்த்து உள்ளனர், அவளை ஆணாக இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறார். 

மேலும், டீ கடை வைத்து தான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். வறுமையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் ராஜாவின் நிலைவேறு, எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றார். 

மேலும் ராஜா கூறுகையில்-

என்னை இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்தது. நான் ஆணாக மாறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக நான் பெண்ணாக மாறபோவதுமில்லை என்கிறார்.

ராஜாவின் அம்மா அவரை பார்த்து கொண்டு இருக்கிறார், அவர் தினமும் தன்னை நினைத்து வேதனை படுவார் என பகிர்ந்தார். 

இதுவரை என்னை நிறைய பேர் மிரட்டி உள்ளனர் சிலர் என்னை கொலை செய்து விடுவேன் என்று கூட மிரட்டினார், ஆனால் அதை எதையும் நான் என் அம்மாவிடம் கூறியது இல்லை, கூறினால் அவர் மிகவும் வேதனை அடைவார், மேலும் அவர் அழுதால் என்னால் தாங்க முடியாது என மிக உறுக்கமாக கூறுகிறார்.

ராஜாவுக்கு நண்பர்கள் என்று யாருமில்லை, இவர் திருநம்பி (transman) என்பதால் யாரும் இவருக்கு வேலை தரவில்லை. ஆதலால் பெரும்பாலான நேரம் இவர் விட்டில் தான் இருக்கிறார். அனைத்து ஆண்களை போலவே ராஜாவுக்கு பெண்களின் மேல் காதல், காமம் போன்ற உணர்ச்சிகளும் ஏற்படுகிறது. ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இவரின் ஆசை.

ராஜா விஜய் பட போஸ்டர் முன்
ராஜா விஜய் பட போஸ்டர் முன்

மேலும் இவர் ஒரு விஜய் ரசிகர் என்பதால், விஜய் படத்தின் வெளியீட்டின் போது பேனர்கள் வைக்க வேண்டும் என்பது இவரின் வெகு நாள் ஆசை. மதுரையில் பல பிரச்சனைகள் வருவதை அடுத்து, தற்போது ராஜாவும் அவரது தாயாரும் தாங்களது பாதுக்காப்புக்காக சென்னைக்கு குடிப் பெயர்ந்து விட்டனர். 

சென்னைக்கு முதல் முதலாக வந்த உடன் ராஜாவும் அவரின் தாயாரும் மெரினா கடற்கரை சென்று பார்த்து உள்ளனர். மதுரையிலிருந்த போது ராஜாவின் தாயார் கடற்கரை பார்க்க வேண்டும் என ராஜாவிடம் கூறி உள்ளராம், ராஜாவுக்கும் கடற்கரை சென்று அலையோடு விளையாட வேண்டும் என வெகு நாள் ஆசை இருந்தது. அது தற்போது நிறைவேறி உள்ளது.

ஆனால் அவரின் பல ஆசைகள் இன்னும் நிறைவேறாமல் உள்ளது...

ஆண் உண்ணும் உணவை தான் பெண்ணும் உண்கிறாள், பெண் உண்ணும் உணவை தான் ராஜா போன்றவர்களும் உண்கிறனார். பிறகு ஏன் இந்த வேறுபாடு...?

நீங்கள் என்னை ஆணாக பார்க்க வேண்டாம், பெண்ணாகவும் பார்க்க வேண்டாம், மனிதனாக பாருங்கள்… “ என்று கூறும் ராஜாவின் குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

ராஜாவின் கதையை வீடியோ பதிவாக காண : http://frankrohrig.com/video-dont-call-me-a-woman-2/#.WHSgVF0cXX8.facebook

தகவல்கள் உதவி: தீபக் குமார்