'எம் தில்': எஸ்.எம்.எஸ். மூலம் மருத்துவ சந்தேகங்களுக்கு விடை!

0

உடல் உபாதை தொடர்பாக சிறு சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள நினைக்கும்போது, ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் அதற்கு விடை கிடைத்தால் எப்படி இருக்கும். அத்தகைய சேவையைத்தான் எம் தில் (mDhil ) வழங்குகிறது.

நந்து மாதவா, இவர் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியில் ஒரு பெரிய பொறுப்பில் இருந்தார். ஆனால், ஏனோ அவருக்கு அந்த பதவி சுவாரஸ்யமானதாக இல்லை. மனதுக்கு நெருக்கமானதாக அந்த வேலை இல்லாவிட்டாலும் அவருக்கு சில தொழில் சார் நுணுக்கங்களை நல்கியது. சிலிக்கான் வேலியில் பல்வேறு தொழில்முனைவரோடு வேலை பார்த்த அனுபவம் நந்துவுக்கு தானும் ஒரு தொழில் முனைவராக வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

தொழில்முனைவராக வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது என்னவோ கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்தான் என்றாலும் லத்தீன் அமெரிக்காவில் பீஸ் கார்ப்ஸ் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியதே தொழில் முனைவராக உருமாறுவதற்கான உந்து சக்தியை வழங்கியது. ஆம், அந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலன் சார்ந்த தகவல்களை வழங்குவதில் ஒரு மிகப் பெரிய இடைவெளி இருப்பதை நந்து உணர்ந்தார். அதுவும், எவையெல்லாம் சமுதாயத்தால் இவை பொதுவெளியில், பொதுப்படையாக கேட்கக் கூடிய மருத்துவ சந்தேகம் இல்லை என வெறுத்து ஒதுக்கப்படுகின்றனவோ அத்தகைய தகவல்களை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் நந்துவுக்கு அதிகரித்தது.

"எம் தில்" உருவான கதை குறித்து நந்து மாதவா கூறும்போது, "ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு யாரோ ஒருவருக்கு கோடீஸ்வரர் ஆவதற்கான யோசனைகளை சொல்லும் வேலையை நான் இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், போதிய மருத்துவர்கள் இல்லாததால் உடல் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களைப் பெற முடியாமல் இருப்பவர்களுக்கு சிறு சிறு தகவல்களை, ஆலோசனைகளை வழங்குவது மிகப் பெரிய வரப்பிரசாதம் என நினைத்தேன். அதுவே ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற கையோடு எம் தில் உருவாக்க வேண்டும் என்ற உறுதியை அளித்தது.

"எம் தில்" பிறந்த கதை

அமெரிக்காவிலேயே பெரும்பாலான நாட்களை கழித்த நந்து 2008-ல் இந்தியாவுக்கு திரும்பினார். 4 ஆண்டு ஆயத்தப் பணிகளுக்குப் பிறகு 2009-ல் எம் தில் நிறுவனத்தை தொடங்கினார். உடல்நலக் குறைவு சமூகத்தில் பொருளாதார ரீதீயில் அடிமட்டத்தில் இருப்பவர்களையே அதிகம் பாதிப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. உடல்நலக் குறைவுக்கு சமூக அந்தஸ்து தெரிவதில்லை. அது யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். சர்க்கரை நோய், புகைப்பழக்கம் போன்ற நோய்கள் சமூகத்தின் எல்லா பிரிவினரிடமும் காணப்படுகிறது.

எம் தில் சேவை ஆரம்பத்தில் எஸ்.எம்.எஸ். சேவையாக மொபைல் போன் மூலம் வழங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் தள நகரங்களில் வசிக்கும் 17 முதல் 25 வயது நிரம்பியவர்களே எங்கள் டார்கெட். ஏனெனில் அவர்கள் மத்தியிலேயே மொபைல் போன் புழக்கம் சற்று அதிகமாக இருக்கும். அவர்கள் மத்தியில் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத சில மருத்துவ ரீதியான சந்தேகங்களும் இருக்கும். அதற்கான விடையை பெறுவதற்கான தேடலும் அதிகமாக இருக்கும். இந்த தேடலே எம் தில் உருவாவதற்கான மூலதனம்.

சவால்கள் வளர்ச்சிக்கு வித்திடும்

"ஆரம்பத்தில் வெறும் எஸ்.எம்.எஸ். மூலம் மட்டுமே மருத்துவ சந்தேகங்களை தீர்த்து வந்தோம். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புதுப்புது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் மொபைல் போன்களும் மற்ற உபகரணங்களும் பெருகின. அதற்கேற்ப நாங்கள் பல மாற்றங்களைச் செய்தோம். மருத்துவ சந்தேகங்களை தீர்க்கும் தகவல்களை வழங்கும் செயலிகள், வீடியோ இணைப்புகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினோம். இப்போது எங்கள் இணையதளத்துக்கான வாடிக்கையாளர்கள் 60% பேர் மொபைல் மூலமாகவும், 40% பேர் கணினி வழியாகவும் வருகின்றனர். இவர்களில் 85% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ளவர்கள் பாகிஸ்தான், சவுதி, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

எஸ்.எம்.எஸ். சேவையில் மொழித் தடையைக் கடந்து செல்லவே ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் சேவையை வழங்குகிறோம்" என்று சவால்கள் குறித்தும், அதை வென்றது குறித்தும் கூறுகிறார் நந்து.

"எனக்கு வருவாயைவிட வாடிக்கையாளர்கள் திருப்தியே முக்கியம். சில வாடிக்கையாளர் அவரது மகள் பூப்படைந்ததும் அவளுக்கு அது குறித்து மேலும் தகவல்களை அளிக்க விரும்பலாம். அப்போது எம் தில் போன்ற அமைப்பின் சேவையை அணுகலாம்" எனக் கூறுகிறார் நந்து.

இதுஒருபுறம் இருந்தாலும், எம் தில் நிறுவனம் நியாயமான வருவாயை ஈட்டியே வருகிறது. மருந்து நிறுவனங்கள், நோய்கள் குறித்த விளக்கங்களை அளிக்கின்றன. எஸ்.எம்.எஸ். சேவைக்காக ஏர்டெல் நிறுவனம் பணம் வழங்குகிறது. இதேபோல், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் வாயிலாக தகவல் பறிமாறுவதன் மூலமாகவும் எம் தில்-க்கு வருவாய் கிடைக்கிறது.

அடுத்து 5 ஆண்டுகளில், லட்சக்கணக்கானோருக்கு வீடியோ மூலம் மருத்துவ சந்தேகம் தொடர்பாக விளக்கங்களை அளிக்க வேண்டும் என்பதே எம் தில் அமைப்பின் இலக்கு.

எனவே உங்களது மருத்துவ சந்தேகங்களுக்கு மொபைல் போன் வாயிலாக பதில் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா? எம் தில் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்... mDhil