நகை விற்பனை தளம் 'வாட்ஸ் அப்' இல் முடித்த டீல்: ரூ.1.62 கோடி மதிப்புள்ள நகைகளை ஆர்டர் செய்த மணப்பெண்!

0

தன்னுடைய திருமணத்துக்காக நகை டிசைன்களை தேர்ந்தெடுக்க, 'வெல்வெட் கேஸ்' VelvetCase.com எனும் தளத்தை நாடிய மும்பையைச் சேர்ந்த மணப்பெண்ணால், அத்தளம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. திருமண நகைகள் செய்ய தனக்கு பிடித்த டிசைன்களை வெல்வெட் கேஸ் தளத்தில் தேடி, அவர்களின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளின் உதவியை நாடினார் அந்த மணப்பெண். அவர்களின் நகை வல்லுனர் குழு, 3டி வடிவில் நகை டிசைன்கள் பலவற்றை அப்பெண்ணுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒரு நகை செய்யப்படுவதன் முழு வழிமுறைகளையும் விளக்கி படங்களை அவருக்கு அனுப்பி வைத்தது வெல்வெட் கேஸ் குழு. தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெல்வெட் கேஸின் நகை டிசைன் வல்லுனர் உட்பட ஒரு பிரத்யேக வாட்ஸ் அப் க்ரூப்பை உருவாக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான டிசைன்களை அந்த க்ரூபில் வல்லுனர் பகிர, அதிலிருந்த தங்களுக்கு ஏற்ற, பிடித்த நகைகளை, க்ரூப்பில் கலந்து ஆலோசித்து தேர்ந்தெடுத்தனர். இறுதியில் அந்த மணப்பெண் வெல்வெட் கேஸ் தளத்திற்கு அளித்த நகை ஆர்டரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சற்றும் எதிர்பார்த்திராத அளவு ரூ.1.62 கோடி மதிப்பிலான நகைகளை அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஆர்டர் செய்தனர். 

வெல்வெட் கேஸ் பின்னணி

வெல்வெட் கேஸ், பாரம்பரிய அதே சமயத்தில் தனித்துவமிக்க நகை டிசைன்களை ஒருங்கிணைத்து வெளியிடும் ஒரு தளம். அதிலுள்ள டிசைன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்தும் ஆர்டர் செய்ய முடியும் என்பது இவர்களின் சிறப்பு. 2012 ஆம் ஆண்டு, கபில் ஹெடம்சாரியா மற்றும் ருனித் ஷா ஆகிய இருவர் இணைந்து தொடங்கிய ஸ்டார்ட் அப் தளம் இது.

"வாடிக்கையாளரின் தேவைக்காக தொடக்கப்பட்டதே வெல்வெட்கேஸ்.காம்- வெரும் நகைகளை அடுக்கிவைக்க அல்ல," என்கிறார் கபில்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய கபில், தன் மனைவியுடன் நகை வாங்க கடைகளுக்குச் சென்றபோது, தங்களுக்கு பிடித்த எதிர்பார்த்த டிசைன் நகைகள், பிரபலமான நகை கடைகளில் கூட இல்லாதது ஆச்சர்யத்தை தந்தது. அதேசமயம் இக்கடைகள் இவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற டிசைனில் நகை செய்யவும் தயாராக இல்லாமல் தங்களிடம் இருக்கும் நகைகளை விற்பதிலேயே குறியாக இருந்தது கபிலை யோசிக்க வைத்தது. 

இதை தொடர்ந்து, கபில் இது குறித்து ஆராயத் தொடங்கினார். நகை வடிவமைப்பு, விற்பனை செய்யும் முறை, நகைக் கடைகள் இயங்கும் விதம் என எல்லா விதத்திலும் ஆராய்ந்தார் கபில். அப்போதுதான், மற்ற பொருட்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படும் போது, விரும்பி அணியக்கூடிய நகைகள் ஏன் அவ்வாறு அளிக்கப்படுவதில்லை என யோசித்தார். 

பளிச்சிடும் தொடக்கம்

தொடங்கிய காலத்திலிருந்தே, வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப கேட்ட வடிவில், வீட்டிலிருந்தபடியே நகைகளை ஆர்டர் செய்யும் வழியை ஏற்படுத்தி தனித்து விளங்கியது வெல்வெட் கேஸ். 300க்கும் மேற்பட்ட நகை வடிவமைப்பாளர்களைக் கொண்டு சர்வதேச டிசைன்களுடன் தங்களுடைய தளத்தை இயக்குகின்றனர் இவர்கள். 

ஆரம்பத்தில் சில சாவல்கள் இருந்தது. கையில் இருப்பு ஏதுமின்றி ஒரு தளத்தை நடத்துவது கடின செயலாக இருந்துவந்துள்ளது. இது ஒரு புதுவித முயற்சி என்பதாலும் சில தடுமாற்றங்கள் இருந்தது. 

வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த சில வழிகளை இவர்கள் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. சிலர் உடனடியாக இவர்களது ஐடியாவிற்கு ஒப்புக்கொண்டனர், சிலர் சந்தேகத்துடன் அணுகினர். 

மிக முக்கியமாக நகை என்று வரும்போது அதை தொட்டு, ரசித்து, அணிந்து பார்த்து தேர்ந்தெடுப்பது நம் வழக்கம். அதை சமாளித்து உரு இல்லாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வைப்பதில் சில பிரச்சனைகள் இருந்தன. இருப்பினும் இதற்கு மாற்றாக இவர்கள், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பிரத்யேக நகை வடிவமைப்பாளரை நியமித்து கலந்து ஆலோசிக்க வைத்தனர். பின்னர் 3டி முறையில் அச்சிடப்பட்ட மாதிரி நகை டிசைன்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அனுப்பி வைத்தனர். இந்த இரண்டும் வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற பேருதவியாக இருந்துள்ளது.  

சமூக ஊடகம் இவர்களுக்கு பெரிதும் கை கொடுத்துள்ளது. வாட்ஸ் அப் பிரபலமடைந்த நேரம் என்பதால் இவர்களது விற்பனையை அதன் மூலம் பெற உதவியுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இவை இரண்டின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நேரடி தொடர்பு ஏற்படுத்தி சந்தைப்படுத்த இவர்களால் முடிந்தது. 

"நாங்கள் வாடிக்கையாளர்களை இணைத்து, ஒரு வாட்ஸ் அப் க்ரூப் தொடங்கினோம். அதில் 1000க்கும் மேற்பட்ட திருமண நகை டிசைன்களை ஷேர் செய்தோம். அதிலிருந்து வாடிக்கையாளர் தங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுத்து, தேவைப்படும் மாற்றங்களையும்  செய்து நகை ஆர்டர் செய்தனர். அப்படித்தான ஒரு மணப்பெண் எங்களுக்கு ரூ.1.62 கோடிக்கான நகை ஆர்டரை வாட்ஸ் அப் மூலம் அளித்தார்," என்றார் கபில். 

2012-13 இல் 3 கோடி வருமானமும், 2013-14 இல் முன்னூறு மடங்கு அதிகரித்து, ரூ.8 கோடி வருமானமும் பெற்று நல்ல ஒரு வளர்ச்சியை இவர்கள் பெற்றுள்ளனர். இவை எல்லாம் வெறும் ஐந்து பேர் கொண்ட குழு சாதித்துள்ளது. 

குழு மற்றும் முதலீடு

வெல்வெட் கேஸ் தொடங்கிய முதல் ஒன்றரை ஆண்டுகள், கபில் மற்றும் ருனித் தங்கள் சுய நிதியில் நடத்தி வந்தனர். 2014 இல் 1மில்லியன் டாலர் முதலீட்டை சென்னை ஏஞ்சல்ஸ் மூலம் பெற்றது இவர்களது வளர்ச்சிக்கான முதல் அடி. 

"ஒரு திறமையுள்ள குழுவை அமைப்பது மிக கடினம். தனித்திறன் கொண்ட, நேர்மையான ஒவ்வொரு ஊழியரையும் நாங்கள் தேடி பணி அமர்த்துகிறோம். எங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து பணியில் வைத்துள்ளோம், அவர்களை எங்களுடன் இருக்கக்கூடிய நீண்ட கால சொத்தாக நினைக்கிறோம்," என்கிறார் கபில். 

2014 இல் இவர்கள் குழு 40 ஆக உயர்ந்து, ரூ.23 கோடி வருமானத்தை ஈட்டியது. அண்மையில் வெல்வெட் கேஸ் தனது இரண்டாம் கட்ட முதலீட்டை பெற்றுள்ளது. 1.5 மில்லியன் டாலர் நிதியை யுனிகோர்ன் வென்ச்சர்ஸ் பண்ட் மற்றும் ஏஞ்சல் முதலீட்டார் குழுவிடம் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வலைத்தளம்: VelvetCase

கட்டுரையாளார்: பிஞ்சல் ஷா | தமிழில்: இந்துஜா ரகுநாதன்