சதுரங்க வீராங்கனை க்ருத்திகா நாதிக் தொழில்முனைவர் ஆன கதை!

0

சதுரங்க விளையாட்டும் சுய தொழிலும் எங்காவது சம்பந்தப்படுமா?

ஆம் என்கிறார் சதுரங்க விளையாட்டுத் தேசிய வெற்றியாளரும், ஐடியா மில்லின் நிறுவனரும் இயக்குனருமான க்ருத்திகா. ஐடியா மில், பகுதி நேர பணியாளர்களுக்கும், தொடக்க நிறுவன தொழில்முனைவோர்க்கும் பணிபுரியும் இடத்தைப் புனேவில் வழங்குகிறது.

ஒரு இறுக்கமான அலுவலகச் சூழலுக்கும், கவனச் சிதறல்கள் நிறைந்த வீட்டுச் சூழலுக்கும் இடைப்பட்ட இடமாக தனது அலுவலக இடம் இருக்கும் என்கிறார் க்ருத்திகா. “அந்த இரு உலகங்களின் சிறந்த விஷயங்களை ஒன்று சேர்த்து நவீன மேஜைகளும், அதிவேக இணையத்துடன் கூடிய நூலகமும், கலகலப்பான பால்கனியும் இங்கு உண்டு” என்கிறார்.

கூட்டுப் பணியிடங்கள் இன்றைய சூழலுக்குத் தேவையான ஒன்றுதான். தன் வாழ்வின் இருபதுகளில் அடியெடுத்து வைக்கையில் இன்னும் விரிவான உலகப் பார்வையும், மேலும் பல திறன்களையும் பெற வேண்டும் என்னும் வேட்கை இருந்திருக்கிறது இவருக்கு. ஒரு பயணி, எழுத்தாளர், புத்தகப்புழு, தேசிய சதுரங்க வீராங்கனை என்று ஒரு கலவையாக இருந்தாலும், தொடக்கத்தில் இருந்தே தனித்து எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

என் ஏழு வயதில், முதல் தனி விமானப் பயணம் நிகழ்ந்தது. வயது ஆக ஆக தனிமை தந்த ஆனந்தம் அதிகரித்தது. மேலும் அந்த போட்டிமிக்க விளையாட்டிலும் தேசிய அளவில் சில வெற்றிகள் பெற்றேன் என நினைவு கூர்கிறார்.

ஒரு பகுதி நேர பணியாளராக கூட்டுப் பணியிடங்கள் உபயோகமாய் இருக்கின்றன

ஆசிய இதழியல் கல்லூரியின் விடுதியில் தங்கி தன் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அங்குதான் கதைகள் எழுதக் கற்றுக் கொள்கிறார். அங்குதான் அவர் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தார். பின்னர் சிலகாலம் எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் பணியாற்றினார். அதீத பயண ஆர்வலரான க்ருத்திகா, சதுரங்கப் போட்டிகளுக்காகவும், 'லோன்லி ப்ளாணட்' பத்திரிக்கைக்கு பயணக்கட்டுரை எழுதுவதற்காகவும் இதுவரை சுமார் 25 நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.

“சில மாதங்களுக்கு முன் உலகெங்கும் உள்ள கூட்டுப் பணியிடங்கள் பற்றிய ஒரு இணையக் கட்டுரையைப் படித்தேன். அதைப்பற்றி நான் அதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. ஆனால் ஒரு பகுதி நேர பணியாளராய் வீட்டிலிருந்து பணிபுரியும் சிக்கல்கள் தனக்கு தெரியுமென்பதால் இது நல்ல யோசனையாகப் பட்டது என்கிறார். இந்த யோசனையை வைத்து அதை ஒரு நிறுவனமாக மாற்றி பணம் ஈட்டவும், என் நகரமான புனேவில் ஒரு மாற்றம் கொண்டு வரவும் நினைத்தேன்” என்கிறார்.

பல மணி நேர ஆராய்ச்சி மற்றும் நீண்ட உரையாடல்களுக்குப் பிறகு அவருக்கு இதில் உடன்பாடு ஏற்பட்டது. வீடு போன்று சிக்கலும், அலுவலகம் போன்ற அந்நியத்தன்மையும் இல்லாத சமூகப் பணியிடங்களின் தேவையை உணர்ந்தார்.

அதனால் சமீபத்தில் 16 பேர் வேலை செய்யக்கூடிய ஒரு கூட்டுப்பணியிடத்தைத் துவக்கியிருக்கிறார். அந்த இடம் நல்ல வெளிச்சமாக மரங்களால் சூழப்பட்டு அதே நேரம் ஒரு நவீன அலுவலகக் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது.

ஐடியா மில்லின் வடிவமைப்பும் தோற்றமும்

க்ருத்திகா குடும்பத்தினருக்கு புனேயில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஒரு வீடு இருந்திருக்கிறது. சிலகாலம் வாடகைக்கு விடப்பட்டிருந்த அந்த இடத்தை அவர் முழுவதும் புணரமைத்துத் தன் பணியிடமாக மாற்றியிருக்கிறார்.

தற்போது வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த இடம் அனைவருக்காகவும் திறந்திருக்கிறது. சில நாட்களுக்குப் பின் இருவர் வேறு வேறு நேரத்தில் ஒரே மேஜையை பயன்படுத்தும் திட்டம் ஒன்றையும் துவக்க எண்ணியிருக்கிறார்.

“என் எண்ணமானது, பேருக்கு ஏற்றாற்போல் ஐடியா மில்லை எல்லா கருத்துப்பரிமாற்றத்திற்கும் கற்றலுக்கும் ஏற்ற இடமாக ஆக்குதல்ஆகும் . இதன் உறுப்பினர்கள் இங்கு உரையாடல்கள், சிறிய அளவில் ஊர்சுற்றல்கள், படம் திரையிடல், கற்றல் பட்டறைகள் என வேலை தவிர்த்த நேரங்களில் எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஐடியா மில்லின் நோக்கம் தொழில்முனைவோர், கலைஞர்கள் மற்றும் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் போன்றோருக்கு ஏற்ற இடவசதியை செய்து தருதலே ஆகும்.” என்கிறார். 

அவரின் பணியிடம் தற்போது தனி நபர்கள் மற்றும் ஆறுபேர் வரை கொண்ட சிறு குழு வரை இடமளிக்க ஏற்றதாக இருக்கிறது.

க்ருத்திகாவின் நண்பர் ஒருவர் ஒரு கஃபேவில் அமர்ந்து நாவல் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். புகைபிடிப்பதற்காக வெளியில் வந்த சில நிமிடங்களுக்குள் அவருடைய லேப்டாப்பை யாரோ சேதப்படுத்தி இருக்கின்றனர். ஐடியா மில் ஒரு பாதுகாப்பான, உளைச்சல் இல்லாத அதே சமயம் மலிவான இடம் தேடும் நபர்களுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சாக இருக்கும் என்கிறார்.

அதனால் தன் சேமிப்பு அனைத்தையும் இதில் போட்டு, துவங்குவதற்கு இரண்டு மாதங்கள் சமூக வலைதளங்களிலும் வாய் வார்த்தையாகவும் இதை விளம்பரப்படுத்தி இருக்கிறார்

கல்வியாளர்களான அவரின் பெற்றோர்கள் க்ருத்திகாவிற்கும் அவரது கனவுகளுக்கும் குறுக்கே நின்றது இல்லை. முறையே கல்வி மற்றும் மேலாண்மை பின்புலம் உடைய அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் புனேவில் ஷிக்க்ஷங்கன் என்னும் கல்வி தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அவருடைய சகோதரி பெங்களூருவில் ட்விஸ்ட் ஓபன் என்னும் வடிவமைப்பு நிலையம் வைத்திருக்கிறார்,

“இந்த முயற்சியை திட்டமிடலின் போது நான் அவர்களிடம் இருந்து நிறைய தெரிந்துகொண்டேன். என்னிடம் இப்போது ஒரு புத்தகம் நிறைய திட்டங்களும், சில பாதுகாப்புத் திட்டங்களும் உள்ளது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என் நேரத்தை ஐடியா மில்லை வளர்த்தெடுக்கவும் ஒரு சிறந்த அனுபவமாக மாற்றவும் செலவிடுகிறேன்.” என்கிறார்.

மிகச்சரியான சமநிலை

ஆரம்பத்திலிருந்தே சதுரங்கத்தைத் தவிர தான் விருப்பப்பட்ட ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஒரு துடிப்பான ஆட்டக்காரராக இருந்தாலும் இப்போதெல்லாம் முன்பைப்போல் அடிக்கடி விளையாடுவதில்லை. எனக்கு எதையும் முழுமையாக விட்டு மற்றொன்றை நோக்கிச் செல்வதில் நம்பிக்கையில்லை. சதுரங்கப் பாதையும் எனக்கு முன் இருக்கிறது. நான் நினைத்தால் இரண்டு மாத பயிற்சியில் என்னால் பழைய மாதிரி விளையாட முடியும். சதுரங்கம், புத்தியைப் பயன்படுத்தும் ஒரு வயது வரம்பில்லா விளையாட்டுதானே என விடைபெறுகிறார்.

ஆக்கம்: சாஷ்வதி முகர்ஜி | தமிழில்: சௌம்யா சங்கரன்