சென்னையில் நடைப்பெற உள்ள 'இளைஞர் உரையாற்று மாநாடு 2018' 

0

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகமும், ’நலந்தாவே’ அமைப்பும் இணைந்து, இளைஞர் உரையாற்று மாநாடு 2018 (Youth Speak Summit)-ஐ நடத்துகின்றனர். இரண்டு நாள் நிகழ்வான இந்த மாநாடு பல்வேறு நடை இளைஞர்களை கற்கவும், பகிரவும், மாற்றங்களை உருவாக்கவும் ஒன்று திரட்டுகிறது. 

வருகின்ற டிசம்பர் 1, 2 ஆம் தேதி, சென்னை அண்ணா சாலையில் இருக்கும் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் செண்டரில் நடைபெறும்.

இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளம் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில்; விவாதங்கள், பயிற்சி முகாம்கள், போட்டிகள் மற்றும் கலை கண்காட்சியும் நடக்கும். டிசம்பர் 1 ஆம் தேதி இயக்குநர் பா ரஞ்சித் உரையாற்றுகிறார். நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடவும், வழிகாட்டிகளோடு தொடர்பை உண்டாக்கிக் கொள்ளவும் மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்வுகளையும், இசை நிகழ்ச்சிகளையும் ரசிக்க இந்த மாநாடு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.

அமெரிக்க தூதரகத்தின் லாரன் லவ்லேஸ் இந்த மாநாட்டை குறித்து பேசுகையில், 

“இந்தியாவும், அமெரிக்காவும் முறையே உலகின் மூத்த மற்றும் பெரிய ஜனநாயகங்கள் எனும் பெருமையை உடையவை. நம் எதிர்காலம் நம்முடைய இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது. நம் சமூகங்களில் சிறந்து நிற்பவர்களை எல்லாம் மேலும் வலிமையாக்கவே இந்த இளைஞர் உரையாற்று மாநாடு 2018,” என்கிறார்.

மாநாட்டின் முதன்மை செயல்பாடுகள் :

சமூக தொழில்முனைவு பிட்ச் ஃபெஸ்ட்:

இளைஞர் உரையாற்று மாநாடு, அசோகா யூத் வென்ச்சரோடு இணைந்து ‘பிட்ச் ஃபெஸ்ட்’ நடத்துகிறது. 18 முதல் 30 வயது வரையுள்ள தொழில்முனைவோர் சமூக நலனை கருத்தில் கொண்டு உருவாக்கிய ஐடியாவை பிட்ச் செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் 5 சிறந்த ஐடியாக்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பரிசாக அளிக்கப்படும். 

இவர்கள் தங்களுடைய யோசனையை மூன்று மாதத்திற்குள் நடத்திக் காட்டவும் திட்டம் வைத்திருக்க வேண்டும். மூத்த சமூக தொழில்முனைவோரின் அறிவுரையும் வழிகாட்டுதலும் இவர்களுக்கும் கிடைக்கும்.

மனித நூலகம்:

மாநாட்டில் இருக்கும் மனித நூலகம் எனும் செயல்பாடு, பங்கேற்பாளர்கள் மனித புத்தகத்துடன் பேசி, கதைகள் கேட்டு, உரையாடல்களில் ஈடுபட ஒரு முயற்சி. கட்டமைக்கப்பட்ட முன்முடிவுகளை தகர்க்கவும், சமூக சகிப்புத்தன்மையை வளர்க்கவும் ஒரு வாய்ப்பை இது உண்டாக்கும். யார் வேண்டுமானாலும் 45 நிமிடங்களுக்கு ஒரு மனித புத்தகத்தை கடன் வாங்கிக் கொள்ளலாம்.

திறன் பகிர்வு கார்டன்:

இங்கே பங்கேற்பாளர்கள் தங்களிடம் இருக்கும் திறனை இன்னொருவருக்கு கற்றுக் கொடுத்து, அவரிடம் இருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக் கொள்ளலாம். ஆரிகாமியில் இருந்து எழுதுவது, வரைவது, களிமண்ணில் பொருள் செய்வது என உற்சாகமான ஒரு அனுபவமாக இருக்கும்.

சமூக மாற்றத்திற்கான கதைகள்:

கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள், புதுமை செய்பவர்கள், தொழில் முனைவோர் என பலரும் கதை சொல்லும் நிகழ்வு. தங்களுடைய நோக்கை எப்படி ஒரு அர்த்தமுள்ள செயலாக மாற்றினார்கள் என்பதை பேச்சாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

பானியனின் மனநல ஆலோசனை, பியாண்ட் ஃபில்டர் எனும் புகைப்படக் கண்காட்சி (சென்னை ஃபோட்டீ பியென்னெல்லுடன் இணைந்து நடத்தப்படுவது) மற்றும் பங்கேற்பாளர்கள் வரைய க்ரஃபிட்டில் வால் ஆகிய நிகழ்வுகளும் இருக்கின்றன.

இளைஞர் உரையாற்று மாநாட்டை குறித்து பேசிய நலந்தாவே பவுண்டேஷனின் ஸ்ரீராம், 

”இளைஞர்களிடம் நல்ல யோசனைகள் இருக்கின்றன, அவற்றை நாம் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்கிறார்.

நலந்தாவே பவுண்டேஷன் :

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவு Nalandaway Foundation கலையை பயன்படுத்துகிறது. கற்றல் திறனை மேம்படுத்தி, நேர்மறையான நடத்தையை சொல்லிக் கொடுத்து, கற்பனை திறனை பயன்படுத்தச் செய்து, கலை வழியே அதை வெளிக் கொண்டு வந்து - அதன் வழியே குழந்தைகளை மேம்படுத்துவது தான் இந்த அமைப்பின் நோக்கம். மேலும் விவரங்களுக்கு - www.nalandaway.org

அசோகா :

உலகின் முதன்மை சமூக தொழில்முனைவோரின் இணையம் தான் அசோகா. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், சமூக சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் புதுமையான தொழில் முனைவு முயற்சிகளுக்கு நிதி உதவி செய்கிறது. இப்படி மாற்றத்தை உருவாக்கும் சிந்தனையாளர்களை ஒரு இடத்தில் திரட்டும் இணையமாக அசோகா இந்தியா இயங்குகிறது.