சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் எதிர்பார்ப்பு!

அடுத்த வருடம் சென்னையில் நடைப்பெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை எதிர்ப்பார்ப்பதாக அரசு அறிவித்துள்ளது.

0

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் மற்றும் ஊரகத்துறை அமைச்சர் பி.பென்ஜமின், அடுத்த ஆண்டு சென்னையில் நடக்கவிருக்கும் ’சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) சுமார் 3000 கோடி ரூபாய் வரை முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டை முன்னிட்டு, இரண்டு அமைச்சர்களும் கோவையில் உள்ள வர்த்தக கண்காட்சி ஒன்றில் உரையாற்றியப்போது மாநிலத்தின் தொழில்துறை மற்றும் முதலீட்டு காலநிலை குறித்த தகவலை பகிர்ந்து கொண்டதாக  அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, தைவான், தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட பல நாடுகளுக்குச் சென்று வந்த அமைச்சர் சம்பத், இந்த நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்பம், வன்பொருள், மென்பொருள், ஆட்டோமொபைல்ஸ், பெட்ரோகெமிக்கல்ஸ், வேளாண் வணிகம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் முதலீடுகளை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

“அண்மையில் அகமதாபாத்திற்கு பயணம் மேற்கொண்டபொழுது அங்கிருந்த தொழில்முனைவர்கள் தமிழ்நாட்டில் 20000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்,” என்று அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மாநிலத்தின் மாறிவரும் தொழிற்துறை மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர் நட்புறவு போன்ற செயல்கள், வணிகச் செயலாக்கச் சட்டம் மற்றும் விதிகள் 2018ன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

இந்த முயற்சியால் 137 MSME நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடிந்தது என்றும் மேலும் டெண்டர் வெளிப்படை சட்டத்தில் உள்ள மாற்றங்களை பேசுவதன் மூலம் இவர்களின் வணிகத்தையும் ஊக்குவிக்க முடிகிறது என விளக்கினார் அமைச்சர். இதன் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் ஆகியவை MSME களில் இருந்து தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு குறைந்தபட்சம் 25% கொள்முதல் செய்யவேண்டும்.

“நாங்கள் MSME-க்காக ஒரு வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறையை அமைப்போம்," என்றார்.

மேலும் அந்நிகழ்வில் பேசிய அமைச்சர் பெஞ்சமின், மாநிலத்தின் வரலாற்றின் தகவல்களைப் பகிர்ந்தார். அதாவது, கடந்த ஏழு ஆண்டுகளில் 12,000 க்கும் அதிகமான தொழில் முதலீட்டாளர்களுக்கு 687 கோடி ரூபாய்க்கும் அதிகமான மூலதன மானியம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்