பிஞ்சுகளின் உயிர் காக்க தாய்பால் தானம் தரும் தன்னலமற்ற தாய்!

2

இந்தியாவில் ஒரு வருடத்தில் சுமார் 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கிறது, ஆனால் தாய் பால் வங்கிகள் 14 மட்டுமே நாடு முழுதும் உள்ளது. பிறந்த குழந்தைகள் பல இன்றும் சத்துக்குறைப்பாட்டால் உயிரிழக்கின்றன. பெரும்பாலோருக்கு தாய் பால் வங்கியை பற்றிய புரிதலோ, விழிப்புணர்வோ இல்லை. தாய் பாலே பிறந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்தை தரக்கூடியது என்று WHO உட்பட பல அமைப்புகளும் மருத்துவர்களும் கூறி வருகின்றனர். அதனால் தாய் பால் குறைபாடுள்ள தாய்மார்கள் தாய்பால் வங்கிகள் மூலம் தங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கமுடியும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.

சென்னையைச் சேர்ந்த சரண்யா கோவிந்தராஜுலு, தாய்பால் குறித்த விழிப்புணர்வால் கவரப்பட்டு, தானும் இம்முயற்சிக்கு கைக்கோக்க முடிவெடுத்தார். இரண்டாவது முறை கர்பமான சரண்யா, தன்னிடம் இருக்கும் தாய் பாலை தானமாக அளிக்க முடிவெடுத்தார். காஞ்சி காமகோட்டி சைல்ட் ட்ரஸ்ட் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக தாய்பால் தானம் செய்து வருகிறார். 

சரண்யா குடும்பத்துடன்
சரண்யா குடும்பத்துடன்

அது குறித்து பெட்டர் இந்தியா பேட்டியில் கூறிய சரண்யா,

“நான் இரண்டாவது முறை கர்பமான போது, ஃபேஸ்புக்கில் குழந்தை வளர்ப்பு குழு ஒன்றில் இணைந்தேன். அதில் தாய்பால் குறித்த முக்கியத்துவம் மற்றும் மகத்துவம் பற்றியும் தெரிந்து கொண்டேன். குழந்தை பிறந்து 6 மாதம் வரை அதற்கு தாய்பாலின் அவசியம் பற்றியும் நன்கு உணர்ந்தேன்,” என்றார்.

தனக்கு குழந்தை பிறந்தவுடன் அதற்கு தாய்பால் கொடுக்கத் தொடங்கிய சரண்யா, மற்றொரு முக்கிய முடிவையும் எடுத்தார். தொடக்கத்தில் சில தயக்கங்கள் இருப்பினும், கணவர் மற்றும் குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு தாய்பால் தானம் செய்ய முடிவெடுத்தார்.

தன்னுடைய இரண்டு குழந்தைகளை கவனித்து கொண்டே தொழிலும் செய்கிறார் சரண்யா. தாய்பால் குறித்த விழிப்புணர்வு தன் முதல் குழந்தை பிறந்தபோது இல்லாததால் அப்போது தாய்பாலை முழுவதுமாக கொடுக்க தவறியதாக கூறிய அவர், தற்போது 6 மாதங்கள் அதை நிச்சயம் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளார். 

“இரண்டாவது குழந்தை பிறந்தபோது எனக்கு பல விஷயங்கள் புரிந்திருந்தது. மேலும் தாய் பால் வங்கிகள் குறித்தும் தெரிந்து கொண்டேன். என் நண்பர் வஹிதா சதீஷ் குமாரும் தாய்பால் தானம் செய்து அதன் மகத்துவத்தை எனக்கு புரியவைத்தார். அதுவே என்னையும் அந்த உன்னத செயலை செய்ய உந்துதலாக இருந்தது,” என்கிறார்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அதற்கு தாய்பால் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொண்ட சரண்யா, தன்னால் மேலும் தாய்பால் தானம் செய்யமுடியும் என்பதை உணர்ந்தார். 

“என் கணவர் வழக்கமாக ரத்தத்தானம் செய்வார். எனக்கு தாய்பால் தானம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல பிஞ்சு குழந்தைகளை காப்பாற்ற உதவுகிறது என்று நினைக்கையில் எனக்கு மனநிறைவை தருகிறது.”

பிறந்த குழந்தைகளில் சிலவற்றுக்கு சுவாசப் பிரச்சனை, ஊட்டச்சத்து கோளாறு என்று பலவகை குறைபாடுடன் உள்ள குழந்தைகளுக்கு தாய்பாலை மருத்துவ கண்காணிப்பில் வைத்து பாட்டில் மூலமோ, குழாய் மூலமோ தருவது வழக்கம். மேலும் அது போன்ற குழந்தைகளின் தாய்க்கு தாய்பால் சுறக்காமல் இருக்கும் சமயம் குழந்தையின் உயிருக்கே ஆபத்தில் முடிகிறது. இது போன்ற இக்கட்டான சூழல்களில் தாய்பால் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பாலை அக்குழந்தைகளுக்கு மருத்துவர்கள் வழங்குகின்றனர். சில சமயம் தாய்பால் தானம் செய்பவரிடம் இருந்து நேரடியாகவும் மருத்துவமனைகள் பெறுகிறது. 

இருப்பினும் தேவைக்கு சமமான தாய்பாலின் அளவு வங்கிகள் இருப்பதில்லை. தாய்பால் தானத்திற்கான விழிப்புணர்வு அதிக அளவில் செய்யப்பட்டால் மட்டுமே இதை செய்ய இளம் தாய்மார்கள் முன் வருவார்கள். தாய்பால் கொண்டு தான் பெற்ற குழந்தையை வளர்ப்பதுடன், முகம் தெரியாத பல பிஞ்சு உயிர்களையும் காக்கமுடியும் என்றால் இதை செய்வதால் கிடைக்கும் ஈடில்லா மகிழ்ச்சி எதற்கும் இணையாகாது.