'சர்வதேச யோகா தினம்'- உலகெங்கும் உற்சாக கொண்டாட்டம்!

அடுத்த ஆண்டுமுதல் யோகா தின விருதுகள் அறிவிப்பு! அதிக யோகா ஆசிரியர்களை இந்தியா உருவாக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.!

0

ஜூன் 21 ஆம் தேதியை 'சர்வதேச யோகா தினம்' ஆக ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு, இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை உலகம் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறது.

இந்தியாவில், பிரதமர் மோடி சண்டிகரில் யோகா தினத்தை தொடங்கிவைத்து தாமும் கடந்த ஆண்டு போலவே இந்த முறையும் யோகா பயிற்சிகளில் பங்கேற்றார். நிகழ்சியில் உரையாற்றிய பிரதமர்,

"யோகா நாட்டை ஒன்றிணைக்கக் கூடிய பயிற்சி. யோகா மதம் சார்ந்தது அல்ல. நம்பிக்கை உள்ளவர்களுக்கும், அல்லாதவர்களுக்கும் பயன்தரும் பயிற்சி. மொபைல் தொலைபேசி போன்று யோகாவையும் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும். இந்தியா தரமான யோகா ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இரண்டு விருதுகளை இந்தியா வழங்கும் " என்று அறிவித்தார்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முரசு ஒலித்து யோகா தினத்தை தொடங்கி வைத்தார். அங்குள்ள பல அதிகாரிகள், அலுவலர்கள் குடும்பத்துடன் யோகாவில் பங்கேற்றனர்.

கேரளாவில் ஆளுனர் சதாசிவம், மேகலாயாவில் ஷண்முக நாதன், புதுவையில் கிரண் பேடி உள்ளிட்ட பல மாநில ஆளுநர்களும் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், ஸ்மிர்தி இராணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் யோகா தினத்தை கொண்டாடினர். மத்திய அமைச்சகத்தின் சுகாதார துறையான ஆயுஷ் மட்டுமல்லாது, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளும், யோகா பயிற்றுவிக்கும் மத்திய அரசின் மொராஜி தேசாய் யோகா மையம், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, பாபா ராம் தேவின் பதஞ்சலி யோகா மற்றும் பல அமைப்புக்கள் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் காலையிலேயே சிறப்பு யோகா பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இப்படி நாடுமுழுதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

ஐ.நா தலைமையகம், நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கம், பிரான்ஸின் ஈபில் கோபுரம், சீனாவின் கண்ணாடி பாலம் உள்ளிட்ட பல நகரங்களிலும், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 135 க்கு மேற்பட்ட நாடுகளில் பொதுமக்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். அந்த புகைப்படங்கள் கண்களுக்கு விருந்தாக அமைத்துள்ளன. அவற்றில் சில இங்கே யுவர் ஸ்டோரி வாசகர்களுக்காக..!