12 அந்நிய மொழி உச்சரிப்புகளில் தேர்ச்சி பெற்ற 14 வயது சிறுமி... 

இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார், மற்றும் பல திறமைகளையும் கொண்டவர்!

0

2016-ம் ஆண்டு ஆனந்த்குமாரின் பிரபலமான சூப்பர் 30 பயிற்சியில் பங்கேற்க ஜானவி பன்வார் தேர்வானபோது அவரது சொந்த பகுதியான பானிபட் பகுதியே மிகப்பெரியளவில் கொண்டாடியது. அப்போது அவரது வயது 12. இந்த பயிற்சி நிறுவனத்தில் தேர்வான இளம் வயதினர் இவர்தான். 

இன்று இரண்டாண்டுகள் கடந்த நிலையில் ஜானவி தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து வருகிறது. இவர் 12 அந்நிய மொழிகளை உச்சரிப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது 14 வயதாகும் இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

ஜானவி கல்லூரியின் இரண்டாவது ஆண்டு படிக்கும்போதே பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இந்தியாவின் எட்டு மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் ஊக்கமளிக்கும் விதத்தில் உரையாற்றியுள்ளார். ஜானவி இளம் வயதிலேயே புதிய மொழிகளைக் கற்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். அவரது அப்பா பிரிஜ் மோகன் பன்வார் தன்னுடைய மகளை ஊக்கப்படுத்த தேவையான முயற்சிகளை அனைத்தையும் மேற்கொண்டார்.

’தி பெட்டர் இண்டியா’ உடனான உரையாடலில் அவர் கூறுகையில்,

”ஜானவிக்கு ஒரு வயது இருக்கும்போதே அவர் 500-550 ஆங்கில வார்த்தைகளை தெரிந்து வைத்திருந்தார். பல விஷயங்களை எளிதாக கற்றுக்கொண்டதால் அவருக்கு மூன்று வயதாகும் போது நர்சரி பள்ளியில் சேர்க்காமல் நேரடியாக சீனியர் கிண்டர்கார்டனில் சேர்க்கப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து பள்ளி நிர்வாகத்திடம் பேசியபோது அவரது திறனை உணர்ந்து ஒரே அண்டில் இரண்டு வகுப்புகள் படித்து முடிக்க சிறப்பு அனுமதி வழங்கினார்கள்.

சாதாரண குடும்பப் பின்னணி கொண்ட ஜானவியின் அம்மாவும் அப்பாவும் அதிகம் படிக்கவில்லை. அவரது அப்பா ஆசிரியராக இருப்பினும் ஆங்கில மொழியை சிறப்பாகக் கற்றறியவில்லை. ஹிந்தி, ஹரியானாவி ஆகிய மொழிகளையே பேசி வந்தார். எனினும் ஜானவி செங்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பேசி வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொண்டார். 

பன்னிரண்டு வயதில் பிரெஞ்சு, ஜப்பானிய மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைக் கற்றறிந்திருந்தார். மேலும் இணையம் வாயிலாக ஆங்கில மொழியின் பிரிட்டிஷ், அமெரிக்க உச்சரிப்புகளையும் கற்றார். அவர் இவ்வாறு பல்வேறு மொழிகளுக்கு அறிமுகமானது குறித்து அவரது அப்பா கூறுகையில், 

“ஒரே ஒரு முறை கேட்டால் அதே போல் உச்சரிப்பார். அந்த நேரத்தில்தான் நான் பிபிசி செய்தி வீடியோக்களை பதிவிறக்கம் செய்யத் துவங்கினேன். ஒரு மணி நேர செய்தி வாசிப்பை கேட்டு முடித்ததும் சற்றும் தாமதிக்காமல் செய்தி வாசிப்பாளரின் அதே உச்சரிப்பை இவரும் பின்பற்றுவார். இதை ஊக்குவிக்க வேண்டும் என நினைத்தேன்,” என்றார்.

இந்த சமயத்தில்தான் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் யூபிஎஸ்சி, ஐஐடி மற்றும் பிற முன்னணி கல்வி நிறுவனங்களில் இணைய பயிற்சியளிக்கும் நிறுவனமான சூப்பர் 30 நிறுவனர் குருகிராமில் உள்ள ஹரியானா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனில் ஜானவியை சந்தித்தார். அவரிடம் இருக்கும் திறனைக் கண்டறிந்தார். நுழைவுத் தேர்வு கட்டாயமாக கருதப்படும் கல்வி நிறுவனத்தில் நுழைவுத் தேர்வின்றி ஜானவியை சேர்த்தார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA