குடிசைப் பகுதிகளில் தண்ணீர் தொழில்முனைவை ஊக்குவிக்கும் யுரேகா ஃபோர்ப்ஸ்

0

குடிசைப் பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், தண்ணீர் சார்ந்த தொழில்முனைவுகளை ஊக்கப்படுத்தவும் 'யுரேகா ஃபோர்ப்ஸ்' நிறுவனம் சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பற்ற தண்ணீராலாலும், சுகாதார சீர்கேட்டினாலும் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், தனது சமூக சேவை பிரிவின் கீழ் இந்நிறுவனம் முன்முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தண்ணீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உள்ளூர்வாசிகளுக்கு தண்ணீர் கடைகள் வடிவமைத்துத் தரப்படுகிறது. இதன்மூலம் உள்ளூர்வாசிகளை பங்குதாரர்களாக உயர்த்தி ஊக்குவிப்பதுடன், நாடு முழுவதும் சுத்தமான குடிநீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகுக்கப்படுகிறது. குறிப்பாக, வறுமை சூழ்ந்த பகுதிகளில் தங்களது குடிநீர் பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண வகை செய்யப்படுகிறது.

படம்: Shutterstock
படம்: Shutterstock

கிராமப்புறங்களில் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கும், மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவுமே யுரேகா ஃபோர்ப்ஸ் வடிவமைத்துள்ள இந்தத் தண்ணீர் கடைகளின் முக்கிய நோக்கம். எளிமையான முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்ப வசதிகளை மட்டும் அளிக்காமல், லிட்டருக்கு 10 முதல் 15 பைசா வரையில் மட்டுமே ஆகக் கூடிய மிகக் குறைந்த விலையில் தரமான குடிநீர் வழங்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்படும் குடிநீர், உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள அனைத்து விதமான தர நிர்ணய வரம்புக்குள் உட்பட்டது என்பது மற்றொரு சிறப்பு. இந்த மாதிரித் திட்டத்துக்கு உயர் ரக தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளில் பின்பற்றப்படும் தவறான வழிமுறைகளால் ஏற்படும் பாதக விளைவுகள், தண்ணீர் மாஃபியாவின் அட்டகாசங்கள் முற்றிலுமாக மட்டுப்படுத்தப்படுகிறது.

ஒரு பகுதியில் தண்ணீர் கடைகளுக்கான வேலைகள் தொடங்குவதற்காக அங்கு குறிப்பிட்ட சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு முன்பாக, தண்ணீர் விஞ்ஞானிகள் மற்றும் கள நிபுணர்கள் மூலம் அந்தப் பகுதியின் நீர்நிலைகள் குறித்து பரிசோதிக்கப்படுகிறது. இந்தியாவில் 17 விதமான தன்மைகள் கொண்ட நீர் நிலைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு ஏற்ற 7 தனித்துவ தொழில்நுட்பங்களை யுரேகே ஃபோர்ப்ஸ் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. சமூக தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளிலும் இதுபோன்ற தொழில்நுட்ப முறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த ஆலைகளில் இருந்து 24 மணி நேரமும் தங்களது பிரத்யேக அடையாள அட்டையை (வாட்டர் கார்டு) காட்டி குடிநீரை வாங்கிச் செல்லலாம்.

கிராமப் பஞ்சாயத்துக்கள், மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டிணைப்பில் இந்த மாதிரித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் தொழில்முனைவுகளை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கம். தண்ணீர் கடைகள் மூலம் கிராம மக்கள் ஆலைகளை நடத்துவதற்கு மட்டுமின்றி, நகர்புற விநியோகஸ்தர்கள், மாநில மற்றும் மத்திய அரசுடன் நெருக்கமாக இணைந்து தண்ணீர் விற்பனைத் தொழிலை நடத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது.

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே முழுக்க முழுக்க தன்னிச்சையாக இயங்கக் கூடிய தண்ணீர் கடைகளை யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 100 ஆலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வேர்ல்டு விஷன் உடன் இணைந்து 100 கம்யூனிட்டி ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம்: ஒய்.எஸ். டீம் | தமிழில்: கீட்சவன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்