தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ்!

1

பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ்’க்கு கடந்த வாரம் பெரியார் மணியம்மை பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்துள்ளது. 

நர்த்தகி நடராஜ் மூன்றாம் பாலினத்தை சார்ந்தவர். 10 வயதில் தன்னுள் மாற்றங்களை உணர்ந்த நடராஜாக பிறந்த இவர், சிறுவயதிலேயே நாட்டியத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார். மதுரையில் பிறந்த நர்த்தகி, திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடி பார்த்து மகிழ்வார். நடிகைகள் வைஜெயந்திமாலா, பத்மினி ஆடும் நடனங்களை வீட்டில் அதே போல் ஆடிப்பார்ப்பாராம். 

உடலளவிலும், மனதளவிலும் மாற்றத்தை உணர்ந்த நடராஜ், சிறுவயதில் பல ஏளனங்களை சந்தித்ததாலும், நடனக்கலையை தொடரவும் மதுரை ஏற்ற இடமில்லை என நடராஜ் மற்றும் அவரது நண்பர் சக்தியும் முடிவெடுத்து தஞ்சாவூருக்கு சென்றனர். 1984 இல் தஞ்சையை அடைந்த நர்த்தகி , தஞ்சாவூர் பாணி பரதநாட்டிய ஜாம்பவான் கேபி.கிட்டப்பா பிள்ளையின் நேரடி சிஷ்யரிடம் நடனம் பயில ஆரம்பித்தார். 1999 வரை அவரிடம் பரதநாட்டியத்தை பயின்ற நர்த்தகி, ஆங்காங்கே கச்சேரிகளையும் செய்து வந்தார். பின் கிட்டப்பா பிள்ளையுடன் தமிழ் பல்கலைகழகத்தில் 4 ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கிட்டப்பா பிள்ளையின் மறைவுக்கு பின் தஞ்சையில் இருந்து சென்னைக்கு நர்த்தகியும், அவரது நண்பர் சக்தியும் குடிபெயர்ந்தனர். பின் வெள்ளியம்பளம் நடனப்பள்ளியை சென்னையில் தொடங்கினார் அவர். நடனம் ஆடுவதை தவிர நர்த்தகி அக்கலை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை நாடெங்கும் கருத்தரங்குகளில் வெளியிட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நர்த்தகி நடராஜை பேட்டி எடுத்த பெண் பத்திரிகையாளரை பார்த்து,

“ஓ... நீங்கள் நகைகள் எதுவும் அணியவில்லையே??  ஆம் நீங்கள் பெண்ணாக பிறந்ததால் உங்களுக்கு அது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் எங்களை போன்று போராடும் திருநங்கைகள், எங்களை பெண்ணாக வெளிப்படுத்திக் கொள்ள இதுபோன்ற சிறு சிறு விஷயங்களைக் கூட ஆனந்தத்தோடு செய்வோம். நகை அணிவதும் கூட ஒருவித உற்சாக உணர்வை எங்களுக்கு தரும்,” 

என்று கூறி இருந்ததாக டிடி நெக்ஸ்ட் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நர்த்தகியை பொருத்தவரை, பரதம் என்பது பெண்மையை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலை, பல சமூக போராட்டங்களுக்கு இடையில் அக்கலையை செவ்வனே பயின்று, அதில் சிறப்பிடம் பிடித்து இன்று அதற்காக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது ஒரு சாதரண சாதனை இல்லை. 

பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் நர்த்தகி நடராஜ் பெற்றிருந்தாலும், சமூக காரணங்களால் 12ஆம் வகுப்பை பாதியில் விட்ட அவருக்கு டாக்டர் பட்டம் என்பது ஒரு சிறந்த அங்கீகாரம். இதைப்பற்றி அவர் கூறுகையில்,

“கல்விக்கூடம் அளிக்கும் இந்த டாக்டர் பட்டம் என் வாழ்க்கையின் அர்தத்தையும், எனக்குரிய அங்கீகாரத்தையும் தந்துள்ளது. குறிப்பாக எங்கு தொடங்கினேனோ அதாவது தஞ்சாவூரில் இதை நான் பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.