மனதுக்கு செவி சாய்த்ததால் மற்ற பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய அனு அனந்தகிருஷ்ணன்

0

நியூயார்க் நகர கார்ப்பரேட் நிறுவனங்களின் வாயிலை அடைந்தபோதுதான் தனது உள்மனதின் அழைப்பை உணர்ந்தார். தான் விரும்பியவற்றை அடைவதற்கான சாத்தியக் கூறுகளை தெரிந்து வைத்திருந்தாலும் அனு அனந்தக்கிருஷ்ணன் வெறுமையையே உணர்ந்தார். ‘நான் விரும்பியபடியே கணக்கியல் நிறுவனப் பணியைத்தான் செய்கிறேன். ஆனால், இதில் ஏன் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை?’ என்று குழம்பிய அனு, ஆரியா+லேயா உள்ளாடைகள் நிறுவனத்தைத் தொடங்கி பெண்கள் தமது தனித்தன்மையைக் கொண்டாடும்படி செய்துள்ளார்.

மற்றவர்களின் விதிக்கு இணங்கி நடக்காமல், சுயத்தை நம்பி புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொண்டு அதில் வெற்றியையும் கண்டுள்ளார். ஒரேவேளையில் உற்சாகமாகவும், பயங்கரமானதாகவும் இந்தியப் பெண்களுக்கான உள்ளாடை வடிவமைப்பது அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தினசரி அலுவலகம், ஞாயிற்றுக் கிழமைக் கொண்டாட்டம் மீண்டும் திங்கட்கிழமை திண்டாட்டம் என இருந்தாலும், ஒரேமாதிரி தனக்கேற்ற வசதியான இடத்தில் இருப்பதும் சலிப்பாகிப்போனது. புதிய தளத்தில் இறங்கிப் போராட மனம் துடித்தது.

தனது இருபதுகளின் இறுதியில் தோன்றிய இந்தத் தேடல் இன்னும் ஆழமாக அவரை யோசிக்க வைத்தது. ‘எனக்குள் கேட்கும் ஒலியை கவனித்து கேட்க விரும்பினேன். ஏதோ ஒரு பணிபுரிவதை விட எனக்கு என்ன செய்ய வேண்டும்? எனத் தோன்றுகிறது என்று ஆராய்ந்தேன். தோன்றும்போது செய்யாமல் பின்னாளில் எதையோ தவற விட்டுவிட்டோமோ! என வருந்த விரும்பவில்லை’ என்றார் அனு.

தனது எண்ணத்தை கணவரிடமும் குடும்பத்திடமும் பகிர்ந்துகொண்டபோது கிடைத்த ஊக்கம், இளம்பருவத்தில் அவர் வளர்ந்த மும்பைக்கு செல்லத் தயாராக்கியது. என்ன செய்வது? என்று உணர்ந்துகொள்வதற்காக பயணிக்கத் தொடங்கிய அவர் நிறைய புதிய மனிதர்களைச் சந்தித்தார். தியானம் செய்யத் தொடங்கினார். நிறைய வாசிக்க ஆரம்பித்தார். தனது பணி அர்த்தமுள்ளதாகவும், மற்றவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்கு மனம் தேடியது மும்பை நகரைப் போன்ற ஒரு அர்த்தமுள்ள ஆன்மாவைக் கொண்ட இடத்தைத்தான்.

மும்பையை அடைந்த ஒரு ஆண்டின் இறுதியில் மும்பையை அடித்தளமாகக் கொண்டு, பெண்களுடன் பணியாற்ற முடிவு செய்தார். கணவரும், குடும்பத்தாரும் வெளிநாட்டில் வசித்துவந்த நிலையில் இது அவருக்கு எளிதான முடிவாக இருந்திடவில்லை.

தனது லட்சியத்தை அடைய விரும்பும் அதேவேளையில் குடும்பத்தினரையும் இழக்க விரும்பவில்லை. மூன்று வார காலம் மும்பையில் தனது பணிக்காகவும், மூன்று வார காலம் கணவர் வசிக்கும் ஹாங் காங் நகருக்கும் பயணிக்க முடிவு செய்தார். ‘என் கணவர் நாம் இருவரும் வளரத் தயங்கினால், ஒன்றாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்க இயலாது. ஆகவே, நமக்கு தனித்தனியே மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைச் செய்தாலும், உறவு மேம்படுவதற்கான வழியையும் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும் என அடிக்கடி கூறுவார்.’

அனுவுக்கும் எல்லா தொழில்முனைவோரையும் போல ஆரம்ப கட்டம் கொஞ்சம் கடினமானதாகவே இருந்தது. ஒவ்வொரு காலையும் நாம் நமக்காக மட்டுமே அணியும் உள்ளாடைகள் மீது திடீரென ஒரு ஈர்ப்பு அதிகரித்தது. இந்தியா வந்த பின்னர் பொருத்தமான உள்ளாடைகளே அவரது கண்ணில் படவில்லை. இங்கே விற்பனை செய்யப்பட்ட ஓல்ட் பேஷன் உள்ளாடைகள் அல்லது கவர்ச்சியான அணியத் தகுதியில்லாதவையாகவே உள்ளன. உள்ளாடைக்கான ஷாப்பிங் செல்லும்போதெல்லாம் அளவுகளைப் பற்றி தெளிவில்லாத விற்பனையாளர்களைச் சந்தித்தது மோசமான அனுபவமாக அமைந்தது. ஒருமுறை தனது தோழிகளுடன் இதுபற்றி பேசியபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர்களும் பகிர்ந்துகொண்டனர்.

‘உள்ளாடைகளை தயாரிக்க முடிவு செய்தபோது, அதைப் பற்றிய ஒவ்வொரு தகவலையும் தேடித்தேடித் தெரிந்துகொண்டேன். மேலும், இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த வடிவமைப்பாளருடன் இணைந்து சரியான துணி வகைகளைத் தேர்வு செய்து தயாரிக்கத் தொடங்கினோம்.’

இப்படித்தான் தொடங்கியது ஆரியா+லேயா (ARIA+LEYA), உயர் ரக துணியைக் கொண்டு தயாரிக்கப்பட்டு ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வீடு தேடிவரும் தினசரி பயன்பாட்டுக்கான உள்ளாடைகள். அதுவும் சராசரி விலையில் விற்பனை செய்கின்றோம். ‘இந்தியப் பெண்களின் உடலமைப்பை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுதான் ஆரியா+லேயாவின் தனித்துவம்.

‘துணிவுடன் இரு. உண்மையாக இரு. நீயாக இரு.’ என்பது இவர்களின் உள்ளாடை விற்பனைக்கான தாரகமந்திரம் மட்டுமல்ல. இந்த நிறுவனத்தின் விளம்பர உத்திகள், படங்கள் என எல்லாமே இன்றைய இந்திய பெண்ணின் சூழலை முன்நிறுத்தியதாகவே உள்ளது. ‘ஒரு பொருத்தமான உள்ளாடையை அணிந்துகொள்வது நமது நாளை மேன்மேலும் சிறப்பாக்கும் என நம்புபவள் நான். நமது வெற்றியின் உச்சம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். அந்த பாதைக்கு செல்ல நாம் ஆதரிக்கப்படுவதும், ஆதரவு தர வேண்டியதும் அத்தியாவசியம்’ என்கிறார் அனு.

ஆணின் பார்வைக்கு அப்பாற்பட்ட ஒரு உள்ளாடையை வடிவமைக்கின்றார் அனு. உள்ளாடைகள் விற்பனையைப் பற்றி பின்னோக்கிப் பார்த்தால் ஆரம்பம் முதலே பாலினம் சார்பாகவே சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், ஆரியா+லேயா உள்ளாடைகள் சந்தையில் ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த உள்ளாடைகளின் அறிமுக விழாவிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்மணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெண்களின் மேம்பாடு தொடர்பானதாகவே இதன் விழாக்கால கேம்பெய்னும் அமைந்திருந்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நோக்கத்தைப் பரப்ப அழுத்தமான சமூகம் அமைக்கப்பட்டுள்ளது. 

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறு உந்துசக்தியாக இயங்கும் தனது தொழில் திங்கள்கிழமைகளை திணரல் இல்லாத உற்சாகம் மிகுந்த நாட்களாக மாற்றியது. ‘எனது தோழிகளுடன் நேரத்தைக் கழிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் ஒன்றுகூடினாலே கதைகளைப் பரிமாறிக்கொள்வதும், மற்றவரது கனவை ஊக்குவிப்பதும் என சின்ன அதிசயங்கள் நடந்துகொண்டே இருக்கும்.’ பெண்கள் தமது யோசனைகள் மற்றும் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும் மாற்றம், உண்மையான அழகு மற்றும் பாதிப்பு போன்றவற்றை பகிர இந்த சமூக அமைப்பு செயல்படும்.

கொல்கத்தாவின் ‘ரெட் லைட்’ மாவட்ட பெண்களுக்கு துணிப்பை செய்யக் கற்றுத்தரும் அரசு சாரா அமைப்பு ஒன்றுடன் இணைந்து ஆரியா+லேயா பேக்கிங் செய்யத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் நிதியியல் சுதந்திரத்தை வழங்கி பெண்கள் மேம்பாட்டுக்கு இது உதவி வருகின்றது.

பெண்களான நாம் நமது இனிஷியலைக்கூட ஒரு கட்டத்தில் தியாகம் செய்தாக வேண்டும் என சமூகம் கூறுகின்றது. ஆயினும், நமது கதையை மாற்றி எழுத விரும்பினால் எழுதுவது நம் கையில்தான் உள்ளது. அனுவின் வாழ்க்கை, நம்மைச் சூழ்ந்துள்ள உலகத்தை மாற்ற விரும்பினால் அதை நம்மில் இருந்து துவங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. தனது கதை ஆழமாகவும், உண்மையாகவும் ஒன்றை சாதிக்க விரும்பினால், மலைகளையும் நகர்த்த முடியும் என்ற நம்பிக்கையளிப்பதாக இருக்க வேண்டும் என விரும்புகின்றார்.

ஆக்கம்: நீபா ஆஷரம்| தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஆடை வடிவமைப்பில் சிகரம் தொட்ட ஜ்யோதி சச்தேவ் ஐயர்!

இயற்கை மருத்துவத்தை நாடு முழுதும் பரப்ப கனவு காணும் கோவை பெண்!