முகேஷ் அம்பானி' இன் 'ஜியோ திட்டம்' டிஜிட்டல் இந்தியா கனவை அடைய வழிவகுக்குமா? 

2

நேற்று சமூக வலைதளங்கள், செய்தி தளங்கள் என்று எங்கும் ட்ரென்டிங் ஆகிக்கொண்டிருந்தது ரிலையன்ஸ் நிறுவனம் தனது வருடாந்திர பொது கூட்டத்தில் வெளியிட்ட புதிய அறிவிப்பு. ரிலையன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, 'ரிலையன்ஸ் ஜியோ' திட்டத்தை அறிவித்தார். இது, டேட்டா சேவையின் அதிகபட்ச தேவைகளை மக்களுக்கு குறைந்த விலையில் அளிக்கும் திட்டம். இதை வெளியிட்டு பேசிய முகேஷ், பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' கனவை பூர்த்தி செய்யும் விதம், 1.2 பில்லியன் இந்தியர்களை இணைக்கும் திட்டமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கும் என உறுதி அளித்தார். 

வரும் 20 ஆண்டுகளில் நடக்கவிருக்கும் மாற்றங்கள், கடந்த 300 ஆண்டுகளில் நடைப்பெற்ற தொழில்நுட்ப சாதனைகளை காட்டிலும் அதிகமாக இருக்கப்போகிறது என்று அம்பானி கூறினார். இந்தியா தற்போது மொபைல் ப்ராட்பாண்ட்  இன்டெர்நெட் சேவையில் 230 நாடுகளிடையே 155ஆவது இடத்தில் உள்ளது. ஜியோ திட்டம் மூலம், இந்தியா முதல் 10 இடத்தில் விரைவில் இடம் பிடிக்கும் என்றார். 

"டிஜிட்டல் தொழில்நுட்பம் புதிய வாழ்விற்கான கதவுகளை திறக்கும். ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது. இன்று டேட்டா' டிஜிட்டல் வாழ்விற்கான ஆக்சிஜன். எனவே, இந்த ஆக்சிஜனை தொடர்ந்து அளிக்கவேண்டும், அதுவும் மலிவான விலையில்... 'ஜியோ' வின் இலக்கே இதுதான். டேட்டாவின் தேவைக்கேற்ப சேவைகளை வழங்கி அதனை விரிவடையச் செய்வோம்," என்றார் அம்பானி. 

இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பும், விவாதமும் ஆன்லைனில் நடந்து வருவதை பார்க்கின்றோம். ரிலையன்ஸ் ஜியோ பற்றி சில தகவல்களை இதோ...

1. சிறந்த மற்றும் தரமான பிராட்பிராண்ட் சேவை: 4ஜி சேவையை முழுமையாக அளிக்கக்கூடியது 'ஜியோ' மட்டுமே என்றார் அம்பானி. 2ஜி, 3ஜி அளித்துவிட்டு அவ்வப்போது 4 ஜி அளிப்பது போல் இல்லை இது. முற்றிலும் 4ஜி சேவையை இடையூறின்றி தர உள்ளது. வருங்காலத்தில் இது 5ஜி, 6ஜி என்றும் போய்கொண்டே இருக்கும் என்றார். 

2. மலிவான 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் ஐபி கருவி: ரிலையன்ஸ் டிஜிட்டல் தனது மலிவான 4ஜி லைட் ஸ்மார்ட்போன்களை ரிலையன்ஸ் எல்ஒய்எப் பிரான்டின் கீழ் அறிமுகப்படுத்தும். இது ரூ.2,999 தொடக்க விலையில் ஜியோ லைட் மற்றும் ரூ.1,999க்கு ஜியோ ஃபை வயர்லெஸ் ஐபி கருவையை அளிக்கும். அதைதவிர வருடாந்திர சந்தா விலையில் சலுகைகளுடன் சேவைகள் வழங்கப்படும். இது டிசம்பர் 31, 2017 வரை இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். 

3. பயன்பாடு மற்றும் உள்ளடக்கம்: பயனாளிகள் தங்கள் அக்கவுன்டை சரியாக கட்டுப்படுத்தும் விதம், ரிலையன்ஸ் "மைஜியோ' ஆப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு தேவையான சேவைகளை உடனடியாக பெற்று பிற தகவல்களையும் பெறலாம். 

4. மிகச்சிறந்த டிஜிட்டல் சேவை அனுபவம்: ஏற்கனவே வடிவமைத்த ஜியோ முறையை மறுசீரமைத்து தற்போது ஆதார் அடிப்படையில் சேவைக்கு விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார். வரும் 4-6 வாரங்களில் இந்த முறை இந்தியா முழுதும் செயல்பாட்டிற்கு வரும். ஜியோ வாடிக்கையாளர் எவரும் தங்களின் ஆதார் அட்டையை அருகில் உள்ள ஜியோ ஸ்டோரில் காண்பித்து 15 நிமிடங்களில் எங்கள் சேவையில் இணைய முடியும் என்றார். 

5. குறைவான, சுலபமான விலை பட்டியல்: இத்திட்டத்தின் முக்கிய பகுதியான விலைப்பட்டியல் பற்றி விவரிக்கையில், அம்பானி,

"இத்திட்டதில் ஜியோ வாடிக்கையாளர்கள், 'வாய்ஸ் கால்கள்' அனைத்தையும் இலவசமாக செய்ய முடியும். இந்தியா முழுதும் வாய்ஸ் கால் மூலம் எந்த சேவை நிறுவன போன்களுக்கும் எல்லா நேரத்திலும் இலவசமாக பேசமுடியும். இதற்கு ரோமிங் சார்ஜும் இல்லை," என்றார்.  

சந்தையில் உள்ள இதர டேட்டா பேக்குகளில், 1 ஜிபி பெற ரூ.250 செலுத்தவேண்டும், ஆனால் ஜியோ'வில் அதைவிட 5-10 முறை குறைவாக, ரூ.25-50 அளித்து 1 ஜிபி பெறமுடியும். 

ஜியோ திட்டம் மூலம், 4ஜி நெட்வொர்க் 18,000 நகரங்கள், டவுன்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களை சென்றடைய திட்டமுள்ளதாக அம்பானி கூறியுள்ளார். மார்ச் 2017க்குள், 90 சதவீத இந்திய மக்கள் தொகையை தங்களது சேவை சென்றடையும் என்றும் கூறினார். 

மீண்டும் வரலாறு படைக்கப்படுமா? 

அம்பானியின் 45 நிமிட பேச்சு, மொபைல் சேவை நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா போன்ற போட்டியாளர்களின் பங்கு சந்தையில் 8% வீழ்ச்சியை ஏற்படுத்தியது. 2002 இல் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் அறிமுகப்படுத்திய சில புதிய சேவைகளால் போட்டி நிறுவனங்கள் தங்கள் யுக்திகளிலும், கட்டணத்திலும் மாறுதல்களை கொண்டுவரும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதேப்போல் 2016 இல், ரிலியன்ஸ் ஜியோ திட்டமும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி புதிய மாற்றத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்துள்ளது. 

இன்றைய சண்டையில் வெற்றிப்பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ, வரவிருக்கும் யுத்தத்தை சந்தித்து வென்றிடுமா?  

ஆங்கில கட்டுரையாளர்: ஹர்ஷித் மல்லயா | தமிழில்: இந்துஜா ரகுநாதன்