ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் போக்கை இந்திய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியதன் அவசியம்!

0

இன்றைய காலகட்டத்தில் வாழ்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இன்று செயல்படும் நிறுவனங்களைப் பொருத்தவரை ஊழியர்கள் அலுவலகத்திலிருந்துதான் பணிபுரியவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நன்மை பயக்காது. வீட்டிலிருந்தே பணிபுரிவது அல்லது தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு பணிபுரியும் போக்கு அதிகரித்திருப்பது உலக பொருளாதாரத்தை புதுப்பித்து வருகிறது.

இன்றைய கார்ப்பரேட் உலகில் உலகளவிலான தொழிலாளர்களில் கணிசமான சதவீதத்தினர் வீட்டிலிருந்து பணிபுரிவதை விரும்புகின்றனர். ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் திறம்பட பணிபுரியமுடியும் என்பதை கார்ப்பரேட்கள் உணர்ந்துள்ளன. இதன் காரணமாக சிறந்த இணைய இணைப்புடன் நேர மண்டலங்களில் கவனம் செலுத்தி தொலை தொடர்பு தேர்வுகளை வழங்குகின்றனர்.

உலகளவில் சுமார் 3.9 மில்லியன் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதாகவும் 2005-ம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை 115 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் க்ளோபல் வொர்க்ப்ளேஸ் அனாலிடிக்ஸ் 2017-ம் ஆண்டு பதிவுசெய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கும் முதலாளிகளின் எண்ணிக்கையும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொலைதொடர்பு சாதனங்கள் உதவியுடன் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையானது இந்திய ஆண்களையும் பெண்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. 7,500 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 53 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி புரியவிரும்புவதாகவும் 47 சதவீதம் பேர் தினமும் அலுவலகம் செல்வதையே விரும்புவதாகவும் மனிதவள சேவை வழங்கும் நிறுவனமான Randstad ஆய்வு தெரிவிக்கிறது.

வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதியுடன்கூடிய நிறுவனங்களுக்கான தேவை

ஒரு நபர் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே பயணிக்க நாள் ஒன்றிற்கு சுமார் 3-4 மணி நேரம் வரை செலவிட நேரும். அதாவது ஒரு வாரத்திற்கு 15-20 மணி நேரம் ஆகும். இதனால் மனிதனின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. 

இத்துடன் மன அழுத்தமும் சேர்கிறது. இந்தியாவில் கார்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பொதுப் போக்குவரத்தும் முழுவீச்சுடன் இயங்குகிறது. தொலைதூரப் பகுதிகளில் வேலை வாய்ப்புகள் உருவானால் உற்பத்தித் திறனும் படைப்பாற்றலும் அதிகரிக்கும். ஆனால் ஊழியர்கள் பணிபுரியும் நேரத்தை எவ்வாறு கணக்கிடுவது?

தொழில்நுட்பத்தின் பங்கு

இந்த விதத்தில் பணிபுரிவது தொழில்நுட்பத்தால் சாத்தியமாகிறது. அலுவலகம் பணியிடப்பகுதியைத் தாண்டி விரிவடைவதில் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

கான்ஃப்ரன்ஸ் அழைப்பு, வீடியோ கான்ஃப்ரன்சிங், க்ரூப்வேர், வாய்ஸ்-ஓவர்-ஐபி சேவைகள் (VoIP), விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க்ஸ் (VPN), நேரத்தை கண்காணிக்கும் செயலிகள் போன்ற எண்ணற்ற மென்பொருள் செயலிகளும் தொடர்புகொள்ளும் சாதனங்களும் உயர்மட்ட குழு சந்திப்புகளையும் மெய்நிகர் சந்திப்புகளாக 13 அங்குல லாப்டாப்பில் மாற்றியுள்ளது. பாரம்பரியமாக அனைவரையும் நேரில் ஒன்றிணைக்கும் சந்திப்புகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

உணவருந்தியவாறே கற்றுக்கொள்ளும் அமர்வுகளும் அதிகம் பிரபலமாகி வருகிறது. ஏனெனில் யோசனைகளை உருவாக்குவது, திட்டமிடல், குழுவிவாதங்கள் போன்றவை திறம்பட நடைபெறுவதற்கு இது போன்ற சூழல் உகந்ததாகும்.

செலவுகள் குறையும்

இந்த மாதிரி ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஊழியர்கள் பயணத்திற்காக நேரத்தை வீணாக்காமல் திறம்பட செலவிடமுடியும். பயணத்தில் நேரம் செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் குறைந்து சிந்திக்க அதிக நேரம் கிடைக்கும். வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் தங்களது க்ளையண்டிற்கு சிறப்பாகச் சேவையளிக்க படைப்பாற்றலுடன்கூடிய யோசனைகளை முன்வைப்பார்கள். வீட்டிலிருந்தே ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம் பணிபுரிந்தாலும் வேலையையும் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக சமன்படுத்துகின்றனர். அத்துடன் வீட்டிலிருந்து பணிபுரிவதால் மிகப்பெரிய தொகையை சேமிக்கமுடியும். 

ஊழியர்கள் பொது போக்குவரத்திற்கு செலவிடும் தொகை, வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, ட்ரைக்ளீன் செய்யும் செலவு என அனைத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு ஆண்டில் மிகப்பெரிய தொகை மிச்சமாகும்.
வழக்கமான பணியிடத்திற்கான வாடகைத்தொகை மிச்சமாகும். குறைவான ஊழியர்கள் இருக்கும் பட்சத்தில் பணியிடங்களை பகிர்ந்துகொள்ளும் முறையையும் பின்பற்றலாம். செயல்பாட்டுகள், நிர்வாகம் போன்றவை தொடர்பான செலவுகளும் மிகக்குறைவானதாகவே இருக்கும். இந்த சொற்ப தொகையையும் சேமிக்க சில முதலாளிகள் வீட்டிலிருந்தே செயல்படுகின்றனர்.

நடைமுறைப்படுத்துதல்

இன்று வீட்டிலிருந்து பணிபுரிவது முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு தொடர்ந்தால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் நலமடையும். தற்போதுள்ள நிறுவனங்கள் ஊழியர்களுக்கான நிலையான முக்கிய செயல்திறன் சுட்டிக்காட்டிகளை ((KPIs) உருவாக்குவதில் திருத்தங்கள் கொண்டுவரவேண்டும். செயல்திறனையும் நேரத்தையும் மென்பொருள் செயலிகள் வாயிலாக கண்காணிக்கவேண்டும். ஸ்டார்ட் அப்களே இந்த மாதிரியின் முன்னோடிகளாக திகழும் நிலையில் மற்றவர்களும் இதைப் பின்பற்றுவாரக்ள்

கட்டுரையாளர் : சஃபேக் காக்டி அஃசல். இவர் Pressmate PR நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர். இந்நிறுவனம் தனித்துவமான வணிக மாதிரியுடன் சேவையளிக்கும் PR ஏஜென்சி ஆகும்.

தமிழில் : ஸ்ரீவித்யா

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிப்பவை அல்ல.)