கோவை டூ காஷ்மீர் 3352 கிமீ தூர நடைப்பயணம் மேற்கொண்ட குமரி இளைஞர்!  

‘சோலோ அட்வென்சரர்’ நிகின் பினிஷ் இந்தியா முழுதும் 11 ஆயிரம் கிமி தூரம் நடை, சைக்கிளிங் ஹிட்ச்-ஹைக்கிங் பயணம் மூலம் சமூக விஷயங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

1

கடினமான பாதையை கடந்து வருபவர்களே சாதனையாளர்கள் ஆகிறார்கள். ட்ரிப் போவோம் என திட்டமிட்டு கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு எதாவதொரு ரிசார்ட்டில் தங்கியிருந்து ஊர் சுற்றிப் பார்ப்பவர்களாகத் தானே பெரும்பாலானோர் இருக்கிறோம்? ஆனால், நிகின் போன்ற சில பயண ஆர்வலர்கள், பணமோ உணவோ பிற கவசங்களோ இல்லாமல், சமூக விழிப்புணர்வுக்காக செயல்பட்டுக் கொண்டே பயணிப்பவர்களாக இருக்கிறார்கள். 

அண்மையில் கோவையில் இருந்து காஷ்மீர் வரை 3,352 கிமீ தூரம் நடந்தே சென்று, வழியில் பதினோரு மாநிலங்களை கடந்து, உணவு வீணாக்குவதை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த 25 வயதான நிகின் பினிஷ். நடைப் பயணம் சைக்கிளிங், ஹிட்ச்-ஹைக்கிங் என வெவ்வேறு முறையில் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்க அவர் இதுவரை பயணித்த தூரம் ஏறத்தாழ 11 ஆயிரம் கிலோ மீட்டர்.

நிகின் பினிஷ் என்ற பெயரை பார்த்ததும், வட-கிழக்கு மாநிலங்களில் இருந்து யாரோ தான் இப்படி நடையாய் நடக்கிறார் என நினைத்தேன். ஆனால், கன்னியாகுமரியில் இருக்கும் அழகிய மீனவ கிராமமான தூத்தூரில், ஆழ்கடலில் மீன்பிடித்து தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் நிகின் பினிஷ். தமிழ்நாட்டில், பிள்ளைகளுக்கு விநோத விநோதமாக பெயர் வைப்பதில் கன்னியாகுமரி பெற்றோர்களைவிட வேறு யாரும் அடித்துக் கொள்ள முடியாது.

தன்னை ‘சோலோ அட்வென்சரர்’ என விவரிக்கும் நிகின் பினிஷ், தூத்தூரில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னை சத்யபாமா கல்லூரியில் பொறியியல் முடித்திருக்கிறார். பிறகு ‘கேட்’ பரீட்சை எழுதி கோவையில் இருக்கும் பி.எஸ்.ஜி கல்லூரியில் மேல்நிலை பட்டப்படிப்பு படிக்கத் தொடங்கியிருக்கிறார். 

மேல்நிலை படிப்பு தொடங்கிய போதிலிருந்தே தான் பயணிக்கத் தொடங்கிவிட்டதாக சொல்லும் நிகின், மேற்படிப்பின் இரண்டாம் வருடத்தோடு கல்லூரியில் இருந்து விலக வேண்டிய நிலைமை உண்டாகியிருக்கிறது.

“சென்னையில இருந்து தூத்தூர் வரை போக ஒரு பதிமூணு பதினாலு மணி நேரம் ஆகும். அந்த ட்ராவல் எனக்கு பிடிச்சதே இல்ல. கோயம்புத்தூர் வந்த பிறகு தான் எனக்கு ட்ராவலிங் மேல இண்டிரஸ்ட் வந்துச்சு,” என்கிறார்.

சிறு வயதிலிருந்தே ஃபுட்பால் மீது ஆர்வம் கொண்டிருந்த நிகின், கோவையிலும் ஃபுட்பால் விளையாடத் தொடங்கியிருக்கிறார். விளையாட்டில் ஒரு இடைவெளி உண்டான போது, சைக்கிளிங் பக்கம் திரும்பியிருக்கிறார். சைக்கிளிங் செய்யத் தொடங்கிய போது பலரும் இதில் ஆர்வம் காட்ட ஒரு சைக்கிளிங் கிளப்பை ஆரம்பித்திருக்கிறார். அது இப்போது பி.எஸ்.ஜி டெக் சைக்கிளிங் கிளப் எனும் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கோவையின் தட்பவெப்பம் சைக்கிளிங் செய்ய சாதகமாக இருப்பதாக உணர்ந்த நிகின் தமிழகத்தில் இருக்கும் பத்து மாவட்டங்களுக்கு சைக்கிளில் பயணித்திருக்கிறார்.

இப்படியான ஒரு பயணத்தில்,தொட்டபெட்டாவில் நிகின் சந்தித்த ஒரு நபர் பெரும் தாக்கமாக அமைந்திருக்கிறார்.

“மலேசியாவில இருந்து வந்திருந்த அவர், நிறைய நாடுகளுக்கு ட்ராவல் பண்ணிருக்கார். அவர் ஒரு சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தோடு பயணம் பண்ணிட்டு இருந்தாரு. அவரை பார்த்த பிறகு தான் இப்படியும் டிராவல் பண்ணலாம்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன்.”

அதன் பிறகு, தன்னுடைய பயணங்களை எல்லாம் நீட்டிக்க தொடங்கிய நிகின், நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு உண்டாக்க சைக்கிளில் கோவையில் இருந்து கொச்சின் சென்று, கொச்சினில் இருந்து கன்னியாகுமரி சென்றிருக்கிறார்.

சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்த போது, வாசிப்பு குறித்து விழிப்புணர்வு உண்டாக்க கோவையில் இருந்து சென்னை சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது புதுச்சேரி முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பு பல கிராமங்களை அழித்து வருவதை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒரு பயணம் சென்றிருக்கிறார்.

கோவை டூ காஷ்மீர் ஓர் நடைப்பயணம்

கோவையில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை 182 நாட்களில் நடந்தே கடந்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி கோவையில் இருந்து கிளம்பிய நிகின் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கோவா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களை 3,352 கிமீ தூரம் நடந்தே சென்று 2018 பிப்ரவரி மாதம் இருபத்து ஒன்றாம் தேதி  காஷ்மீரை சென்றடைந்திருக்கிறார்.

கையில் காசு எதுவுமே இல்லாம தான் போனேன். உணவை வீணாக்காதீர்கள் அப்படிங்குற பிரச்சாரத்தோட தான் அந்த பயணம்.

என் கிட்ட காசு இருந்துச்சுன்னா தெரியாதவங்க கிட்ட போய் பேச எனக்கு ஒரு காரணமும் இருக்காது. காசு இல்லாதப்போ தான் நான் என்னோட ‘கம்ஃபொர்ட் ஸோன்ல’ இருந்து வெளிய வருவேன். யார்கிட்டயாவது ஃப்ரெண்ட்ஸ் ஆகிடுவேன். அவங்க எனக்கு எதாவது ஹெல்ப் பண்ணனும்னு என்ன வேணும்னு கேக்குறப்போ சாப்பாடு வாங்கி தரச் சொல்லுவேன்.

”முழுக்க முழுக்க மக்களோட கருணைய நம்பி தான் நான் பயணிக்குறேன். என்கிட்ட ஒரு பேக்பேக் மட்டும் தான் இருக்கும், அதுல ஸ்லீப்பிங் பேக், டெண்ட் மாதிரி எனக்கு தேவையான எல்லா பொருளும் இருக்கும்,” என்கிறார்.

அந்த பையின் எடையே இருப்பத்தைந்து கிலோ இருக்குமாம். காஷ்மீரை சென்றடைந்ததும் அங்கிருந்து, தன்னுடைய அடுத்த பயணத்தை தொடங்கியிருக்கிறார். ஆனால் இம்முறை சைக்கிளிலோ, நடந்தோ செல்லவில்லை. சாலையை கடக்கிறவர்களிடம் ‘லிஃப்ட்’ கேட்டு பயணிக்கும் ‘ஹிட்ச்-ஹைக்கிங்’ (hitch-hiking) முறையில் பயணித்திருக்கிறார். காஷ்மீரில் இருந்து பஞ்சாப் சென்று, பஞ்சாப்பில் இருந்து உத்திரகாண்ட் வழியாக நேபாளம் சென்றிருக்கிறார்.

பயணங்களின் வழியே பல அனுபவங்களை சேமித்து வைத்திருக்கும் எந்த இடையூறுகளையும் பொருட்படுத்தாமலே முன்னேறிச் சென்றிருக்கிறார். கருப்பாய் உயரமாய் இருப்பதாலும் ஹிந்தி பேசத் தெரியாத காரணத்தாலும் பலரும் நிகினை வெளிநாட்டவரா என சந்தேகித்திருக்கின்றனராம்.

ராஜஸ்தானில் குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்காது, ராஜஸ்தான் குஜராத் மாநிலங்களில் அசைவ உணவு கிடைக்காது, சில நேரம் தாங்க முடியாத அளவு குளிரில் உடல் உறைந்து போகும் என்றாலும் மேற் கொண்டு நடந்து கொண்டே இருந்திருக்கிறார்.

தற்போது ஃப்ரீலான்ஸ் மோடிவேஷனல் ஸ்பீக்கராகவும் செயல்படும் நிகின், தனியே பயணிக்க ஆசைப்படும் பலருக்கும் அறிவுரையாளராகவும் இருக்கிறார். கடல்களை குப்பைத் தொட்டிகளாக்கி அவை முழுக்க பிளாஸ்டிக்கால் நிரப்பியிருப்பது எப்படி ஆபத்தானது என்பதை குறித்த விழிப்புணர்வு உண்டாக்கவே தன்னுடைய அடுத்த பயணத்தை தொடங்கவிருக்கிறார். 2019 ஆம் ஆண்டில் இந்த பயணத்தை தொடங்குகிறார்.

“முன் அறிமுகம் இல்லாதவங்க கிட்ட பேசக் கூடாது பழகக் கூடாதுன்னு சொல்லுவாங்க இல்லையா? நான் சொல்றேன்... முன் அறிமுகம் இல்லாதவங்கக் கிட்ட பேசுங்க. நான் மனிதத்தை நம்புறேன், அதனால தான் இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணவும் முடிஞ்சுது,” என நிறைவு செய்கிறார். 

நிகின் பினிஷ் பயணம் மற்றும் படங்களுக்கு: Travel with Nigin

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha