கொச்சினை சேர்ந்த ஆறு வயது செஃப்- யூட்யூப் மூலம் மக்கள் மனதை கொள்ளை அடித்துள்ள கிச்சா!

1

கிச்சா என்று அழைக்கப்படும் நிஹல் ராஜ் இந்தியாவின் இளம் சமையல்கலை நிபுணராவார். ஆறு வயதே நிரம்பிய இந்த குழந்தை மேதை கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர். கிச்சாட்யூப் ஹெச்டி எனும் இவரது யூட்யூப் சேனல் 14,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. 

குறிப்பிட்டு சொல்லும்படியான இவரது அடையாள டிஷ்ஷான ‘மிக்கி மவுஸ் மேங்கோ ஐஸ்க்ரீமை’ சமீபத்தில் ஃபேஸ்புக் 2000 டாலர் கொடுத்து பிரத்தேயமாக அல்லாத உரிமையை பெற்றுள்ளது. ஆசிரியர் ’பாபா ப்ளாக் ஷீப்…” எனத் தொடங்கும் பாடலை பாடும்போது குழந்தை மேதையான கிச்சா, “பை நிறைய கம்பளியை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்? என்று ஆசிரியரிடம் கேட்டார்.

நர்சரி ரைம்ஸ் கேட்டுவிட்டு அதிலிருந்து கூட கேள்வி கேட்கும் குழந்தைகளை எத்தனை முறை நாம் சந்தித்திருப்போம்? கிச்சா என்று அழைக்கப்படும் நிஹல் ராஜின் இந்த அசாதாரண ஆர்வம்தான் அவரை இந்தியாவின் இளம் செஃப்பாக மாற்றியுள்ளது. சமையலில் அவரது அதீத ஆர்வம், அறிவு தாகம், எப்போதும் உறுதுணையாக இருக்கும் குடும்பம் என அனைத்தும் சேர்ந்து ஆறு வயதான மேதையை உலகின் பலரது மனதில் இடம் பிடிக்கச் செய்துள்ளது. 

கிச்சாவுக்கு மூன்றரை வயது இருக்கும்போது இது தொடங்கியது. இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தால் கவரப்பட்டு கூகுள் தளத்தில் பல மணி நேரம் செலவிடுவார். அவ்வளவு சிறிய வயதில் வார்த்தைகளைக் கூட டைப் செய்ய முடியாதே என்று நாம் வியக்கலாம். அதற்காக அவர் பயன்படுத்தியது கூகுள் வாய்ஸ்.

ஒன்பது வயதான இவான் என்பவர் தனது தந்தையுடன் இணைந்து இவாண்ட்யூப் எனும் யூட்யூப் சேனலில் பொம்மைகள் குறித்த விமர்சனம் வெளியிட்டிருப்பதை கிச்சா பார்த்தார். அதே போன்ற ஒரு சேனலை தனக்கு உருவாக்கித் தரும்படி விளம்பரத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அவரது தந்தை ராஜகோபால் கிருஷ்ணனிடம் கேட்டார்.

பேக்கிங் தொழிலில் ஈடுபட்டிருந்த கிச்சாவின் தாய் ரூபி ராஜகோபால் கிச்சாவிற்கு சமையலில் இருக்கும் ஆர்வத்தை கவனித்தார். அழகாக அலங்கரிக்கப்பட்ட கேக்களை ரூபி தயாரிக்கும்போது கிச்சா அதை உற்று நோக்கி பல சுவாரஸ்யமான கேள்விகளை கேட்பார். ஒரு நாள் பாப்சிகிள்ஸ் (popsicles) தயார் செய்கையில் அவரது தந்தையிடம் அதை படமாக்கச் சொன்னார். 

”என் தந்தை என் வீடியோவை பதிவேற்றம் செய்வார் என்று எனக்குத் தெரியும் ஏனெனில் அதை நான் தயார் செய்தேன்...” என்றார் கிச்சா பெருமையாக. 

”அவன் விரும்பிச் சமைத்து அவை அனைத்தையும் ரசித்து சாப்பிடுவான். அதனால் அவன் சமைப்பது நிச்சயம் ருசியாகத்தான் இருக்கும்,” என்று அவரது பெற்றோர் அன்புடன் குறிப்பிட்டனர்.

ஒரே ஒரு வீடியோவாகத் தொடங்கி பின் பத்து வீடியோவாக மாறி இறுதியில் கிச்சாட்யூப் ஹெச்டி என்ற பெயரில் ஒரு பிரத்யேக யூட்யூப் சேனல் உருவாகி இன்று 14,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ஓட்மீல் குக்கீஸ், ஐஸ்க்ரீம் கேக்ஸ், தேங்காய் பாயசம், ரெயின்போ இட்லி பொன்ற சுவைக்கத் தூண்டும் ரெசிபிகளை தயாரிப்பது மட்டுமல்லாமல் அதை உற்சாகமாக தனிப்பட்ட முறையில் வழங்கும் விதம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

”ஒரு நாள் US-ஐ சேர்ந்த கேஸ்டிங் நிறுவனம் மிக்கி மவுஸ் மேங்கோ ஐஸ்க்ரீம் ரெசிபிக்கான உரிமையைக் கோரி மெயில் அனுப்பியது. இதனால் 2000 டாலரை ஃபேஸ்புக் பிரத்யேகமாக அல்லாத உரிமையை இந்த வீடியோவிற்காக செலுத்தியது.” என்றார் ராஜகோபால்.

கிச்சா இந்த தொகையிலிருந்து ஒரு பகுதியை ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக நன்கொடை அளித்தார். ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் கிச்சா. The Ellen DeGeneres Show எனும் புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கிச்சாவை அழைத்தது அவரது அடுத்த மைல்கல்லாகும். இது கிச்சாவுக்கு ஒரு மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாக அமைந்தது. ’புட்டு’ என்கிற கேரளாவின் பாரம்பரிய உணவை எல்லனுக்கு சமைக்க கற்றுக்கொடுத்தார். இந்த டிஷ்ஷை தயாரிக்க உதவும் பாத்திரமான ‘புட்டு குட்டி’ என்கிற பெயரை உச்சரிக்கவும் எல்லன் கற்றுக்கொண்டார்.

கேரளாவின் கொச்சிஸ் சாய்ஸ் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவனான கிச்சாவுக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவரை கிச்சா அன்புடன் டிடா என்று அழைக்கிறார். என் அப்பா வீடியோ எடுப்பார். என் அம்மா இயக்குநர். நான்தான் ஹாலிவுட் நட்சத்திரம். நான் எதையும் தவறாக செய்து குழப்பிவிடாமல் டிடா பார்த்துக்கொள்வார். அப்படி நான் ஏதாவது செய்துவிட்டால் உடனே அவர் ஓடி வந்து அதை சரிசெய்து விடுவார் என்றார் விளையாட்டாக.

பள்ளி, விளையாட்டு, யூட்யூப் சேனல் என தனது நேரத்தை முறையாக நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறார். வீடியோ தயாரிப்பில் ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேல் நேரம் செலவிடாமல் அவரது பெற்றோர் பார்த்துக்கொள்கின்றனர். இவ்வளவு பிரபலமானதும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தும் கிச்சா தனது யூட்யூப் சேனலிலேயே கவனம் செலுத்தி வருகிறார். 

அவரது அடுத்த யூட்யூப் சேனல் ‘குக் வித் கிச்சா’. இதில் யார் வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட டிஷ்ஷை தனக்காக சமைத்துக் காட்ட கோரி விண்ணப்பிக்கலாம். யாருக்காவது அர்பணிக்கலாம். ‘இன் சேர்ச் ஆஃப் புட்டு’ என்கிற மற்றொரு சேனலும் அறிமுகமாக உள்ளது. உலகெங்குமுள்ளவர்களுக்கு இது ஒரு தனிப்பட்ட சேனலாக இருக்கப்போகிறது.

இத்துடன் முடியவில்லை. ’டபுள் ஹார்ஸ் ஸ்னாக்ஸ்’ ப்ராண்ட் பிரதிநிதியான கிச்சா UK வில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சி ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ளதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கனவை நிறைவேற்ற திறமையுள்ள குழந்தைகளுக்கு நிஹல் ராஜ் உத்வேகம் அளிக்கிறார். தங்களது குழந்தைகள் அவர்களது கனவை நோக்கி சிறகை விரித்து பறக்கத் தொடங்க இது சரியான நேரமா என்று தயங்கும் பெற்றோர்களுக்கு ராஜகோபால் மற்றும் ரூபி தம்பதி முன்மாதிரியாக விளங்குகின்றனர்.

இந்த ஆறு வயதான குழந்தையின் ரெசிபிக்களை நாம் ரசித்துக்கொண்டிருக்கும் அதே நேரம் அவர் தெரிவிக்க விரும்புவதெல்லாம் இதுதான் – ”கிச்சாட்யூப் எச்டியை பார்க்கத் தவறிவிடாதீர்கள். பதிவு செய்யுங்கள், லைக் போடுங்கள், ஃபேஸ்புக், யூட்யூப் மற்றும் ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்கள்!”

ஆங்கில கட்டுரையாளர்: சாரிகா நாயர்