நாசா போட்டியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று பெங்களூரு மாணவி!

0

வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே. இதை முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறார் 15 வயது நிதி மயூரிகா. பெங்களூருவில் உள்ள நாராயணா ஒலிம்பியாட் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியான இவர் நாசாவின் ஏம்ஸ் ஸ்பேஸ் செட்டில்மெண்ட் போட்டியில் தொடர்ந்து 2016-ம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வருகிறார்.

மூன்று முறை வெற்றி பெற்ற இவருக்கு விண்வெளி மற்றும் அதன் கூறுகள் மீது ஆர்வம் இருந்ததால் பிரபஞ்சவியலாளராகி சர்வதேச தளத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே இவரது விரும்பம்.

நிதி ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே நட்சத்திரங்கள் மீது ஆர்வம் கொண்டார். Edex Live-உடனான நேர்காணலில் அவர் குறிப்பிடுகையில்,

“நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளி அளவில் நடத்தப்படும் அறிவியல் போட்டிகளில் பங்கேற்பேன். என்னுடைய ஆர்வத்தைக் கண்ட என்னுடைய பள்ளி முதல்வர் நாசா ஏம்ஸ் ஸ்பேஸ் செட்டில்மெண்ட் போட்டி (ASSC) குறித்து என்னிடம் கூறினார்,” என்றார்.

அவரது புதுமையும் கடின உழைப்புமே வெற்றிக்கு வழிவகுத்தது. இதற்கென நிதி தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் இரண்டு மணி நேரம் செலவிட்டார். 2016-ம் ஆண்டு அவர் போட்டிக்காக முதல் முறையாக பதிவுசெய்தபோது ’மெய்நிகர் விண்வெளி குடியேற்றம்’ என்பதே போட்டிக்கான தலைப்பாக இருந்தது. இதற்கு அவரது இயற்பியல் ஆசிரியர் உதவியுள்ளார். அத்துடன் எடின்பர்க் பல்கலைக்கழகம், பாஸ்டன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் போன்றவற்றின் ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக வான் உயிரியல் குறித்து தெரிந்துகொண்டார்.

சைகதம் (Saikatam) என்பது பூமி-நிலவு லாக்ரேன்ஞ் பாயிண்ட் 5-ல் 3,85,000 கிலோமீட்டரில் உள்ள மூன்று அடுக்ககளைக் கொண்ட விண்வெளி குடியேற்றம். இது மனிதர்கள் உயிர்வாழவும் தங்களை சுயமாக பராமரித்துக்கொள்ளவும் ஏற்ற விண்வெளி குடியேற்றமாகும். இங்கு பூமியில் இருப்பது போன்றே சுவாசிக்கத் தேவையான் காற்று, செயற்கை ஈர்ப்பு, தண்ணீர், உணவு அனைத்தும் காணப்படும்.  

செயற்கைக்கோளில் இருந்து செயற்கைக்கோளை ஏவுவதற்கு 2017-ம் ஆண்டு ’சோஹம்’ (Soham) என்கிற கருத்தை முன்வைத்தார். இது செயற்கைக்கோளை உருவாக்கி ஏவுவதற்காக பூமியில் இருந்து 350 கிலோமீட்டர் தொலையில் LEO-வில் அமைந்துள்ள விண்வெளி குடியேற்றமாகும்.

இந்த ஆண்டு ஸ்வஸ்திகம் (Swastikam) என்கிற மூன்றாவது ப்ராஜெக்டில் பணியாற்றியுள்ளார். இது செயற்கையாக வடிவமைக்கப்பட்ட உயிரினங்கள் புதிய சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக்கொண்டு தனிச்சையாக செயல்பட உருவாக்கப்பட்ட விண்வெளி குடியேற்றமாகும். கதிர்வீச்சு, வெப்பம், தொடர் பகல்வெளிச்சம், ஈர்ப்பு இல்லாத நிலை போன்றவற்றிற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை சீரமைத்துக்கொள்ள உதவும்.

மூன்று முறை போட்டியில் பங்கேற்றதற்கான காரணத்தை கேட்டபோது அவர்,

”இந்த போட்டியில் கலந்துகொள்ள இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில் என்னையும் விண்வெளி மற்றும் அதன் கூறுகள் குறித்து என்னுடைய சிந்தனைகளையும் வெளிப்படுத்த இது ஒரு தளமாக இருந்தது. என்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்பதே இரண்டாவது காரணம். இந்தியர்களான நாம் அணுவின் கோட்பாடு, சூரிய குடும்பம் என பல கோட்பாடுகளை கற்பனை சக்தியினாலேயே நிரூபித்துள்ளோம்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL