ஜிஎஸ்டி வரிவிதிப்பை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் சில்லறை வர்த்தகர்கள்!

0

இந்திய ஆன்லைன் சந்தைப்பகுதியான Wydr-ன் புதிய ஆய்வின்படி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் இந்தியா முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் இன்னமும் ஜிஎஸ்டி சார்ந்த சிக்கல்களை சமாளிக்க திணறி வருகின்றனர் என்கிறது.

இந்த ஆய்வின்படி உற்பத்தியாளர்கள், மொத்த உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்களின் பிரதிநிதிகளில் சுமார் 57 சதவீதம் பேர் ஜிஎஸ்டி வரி குறித்து முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. அதே போல் 19 சதவீதம் பேர் ஜிஎஸ்டி வரி குறித்த புரிதல் முற்றிலும் இல்லை என்று கூறினர்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு இவர்களது வணிகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்த கேள்விகள் Wydr ஆய்வில் பங்கேற்ற 130 பேரிடம் கேட்கப்பட்டது.

Wydr நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தேவேஷ் ராய் தெரிவிக்கையில்,

ஜிஎஸ்டி வரிவிதிப்பு மிகப்பெரிய அளவில் அமல் படுத்தப்பட்டது உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. இதனால் முதல் சில மாதங்களில் சில சவால்களும் ஆரம்பகட்ட சிக்கல்களும் முளைத்தன. ஜிஎஸ்டி அறிமுகமானதில் சில குறிப்பிட்ட முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு இந்த வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதில் நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை ஆய்வறிக்கையின் முடிவு தெரிவிக்கிறது.

மேலும் ஆய்வில் பங்கேற்றவர்களில் 53 சதவீதத்தினர் ஜிஎஸ்டி அறிமுகமான பிறகு தங்களது விற்பனையும் வருவாயும் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். 25 சதவீதத்தினர் மட்டுமே ஜிஎஸ்டி அறிமுகமானது அவர்களது விற்பனையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி அறிமுகமான பிறகு தங்களது லாபம் 30% அளவு குறைந்துள்ளதாக 26 சதவீதம் பேர் தெரிவித்தனர். நீண்ட கால அடிப்படையில் ஜிஎஸ்டி தங்களது வணிகத்திற்கு சிறந்ததாக இருக்குமா என்கிற ஐயப்பாடு நிலவுவதாக 55 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

ஆண்டு வருவாய் 1.5 கோடிக்கும் அதிகமாக உள்ள வணிகங்கள் முழுமையான ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் அடங்கும் என்பதால் இந்த வணிகங்கள் ஜிஎஸ்டி வரியினை செலுத்தவேண்டும். இவர்கள் உள்ளீட்டு வரி வரவினை செலுத்தப்படவேண்டிய வரிக்கு ஈடுசெய்துகொள்ளலாம். இதனால் சிக்கல் அதிகரிக்கிறது என்றார் தேவேஷ்.

”நிறுவனங்கள் சரியான விகிதத்தில் ஜிஎஸ்டி வரியை விதிப்பதுடன் தங்களது உள்ளீட்டு வரி வரவு மற்றும் செலுத்தப்படவேண்டிய வரி தொடர்பான பொருள் விவரப் பட்டியலைப் (invoice) பொருத்தி முழுமையான உள்ளீட்டு வரி வரவினை ஈடுசெய்யலாம். இதனால் இந்த செயல்முறைகளுக்கான செலவீனம் அதிகரிக்கிறது. எனினும் இந்த சிக்கலைக் குறைப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. 
இந்த வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகிறது என்பதாலும் அத்துடன் மிகப்பெரிய அளவில் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொள்ளும்போது இது சிறப்பாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது என் கருத்து,” என்றார் தேவேஷ்.

ஜிஎஸ்டி ஒரு எளிமையான வரி அமைப்பு அல்ல என்றும் அது குறித்த புரிதல் வேண்டும் என்றும் 30 சதவீதத்தினர் நம்புகின்றனர். மேலும் ஜிஎஸ்டி சார்ந்த உதவி எளிதாக கிடைக்காத காரணத்தால் அவர்களது வளர்ச்சி தடைபடுவதாகவும் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கருதுகின்றனர்.

எனினும் தங்களது வணிகம் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு விரிவடைய ஜிஎஸ்டி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக Wydr ஆய்வில் பங்கேற்ற ஐம்பது சதவீதத்தினர் தெரிவித்தனர்.

ஆங்கில கட்டுரையாளர் : சம்பத் புட்ரேவு | தமிழில் : ஸ்ரீவித்யா