பெண்களை காக்கும் ஆண்ட்ராய்டு செயலி 'SAFER'

0

பெண்களின் மீதான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் தொழில்நுட்பமும் இதற்கு ஏதேனும் செய்யவேண்டிய அவசியமாகிறது. SAFER என்ற ஆண்ட்ராய்டு செயலி இதற்கு உதவுகிறது. இது ஒரு பாதுகாப்பு கருவியும் கூட. கூகிள் ப்ளே ஸ்டோரில் பாதுகாப்பிற்காக எவ்வளவோ செயலிகள் கொட்டிக்கிடந்தாலும் இந்த செயலியோடு கூடவே வரும் கருவியும் இதனை தனித்து காட்டுகிறது.

இது மொத்தம் மூன்று முக்கிய அம்சங்களை கொண்டது, saferwalk, notifications மற்றும் selfies. சேஃபர்வாக் என்பது மேப்போடு செயல்படக்கூடிய ஒன்றாகும். நாம் எங்கெல்லாம் செல்கிறோம் என நமது பாதுகாவலருக்கு காட்டும். நாம் பாதுகாப்பான வழியில் தான் செல்கிறோமா? தவறான ஒரு வழியில் சென்றுவிட்டால் நமக்கு உடனே அதைச் சுட்டிக்காட்டும்.

நோட்டிஃபிகேஷன்; முக்கியமான செய்திகளை நமக்குக் காட்ட பயன்படுகிறது. இதன்மூலம் எல்லாத் தகவலும் விட்டுபட்டுவிடாமல் எல்லாமே நமக்கு தெரியப்படுத்தப்படும். சேஃபர் செல்ஃபி என்பது செல்ஃபி எடுக்க உதவும் ஒரு அம்சமாகும். குழுவாக செல்ஃபி எடுக்கும்பொழுது யாரும் விடுபட்டுவிடாமல் இது பார்த்துக்கொள்கிறது. ஒரே க்ளிக் போதும் இதை எடுக்க.

இந்தக் கருவியை அணிகலன் போல கழுத்தில் அணிந்துகொள்ளலாம். இதன் விலை 3,500 ரூபாய் மட்டுமே. leafwearables என்ற நிறுவனத்தின் மூலம் இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. அவினாஷ் பன்சால், ஆயுஷ் பன்கா, சிராங் கபில், மாணிக் மேஹ்தா மற்றும் பரஸ் பத்ரா என்ற பொறியியல் வல்லுனர்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

துபாயில் நடந்த ஜிடெக்ஸ் தொழில்நுட்ப வாரத்தில் "உலக சாம்பியன்” என இந்த செயலிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இந்தியாவின் தலைசிறந்த பத்து கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக இதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2015ல் இந்திய - அமெரிக்க புதுநிறுவனங்களுக்கான கூட்டம் சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடந்த போது பிரதமர் நரேந்திரமோடியுடன் இந்த நிறுவனத்தின் பொறியாளர் குழுவும் உடன் சென்றிருக்கிறார்கள்.

"மனித இனம் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய மிகச்சவாலான ஒன்றை சரி செய்திருக்கிறோம். எல்லோரும் பாதுகாப்பாக இருக்கக்கூடிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அணிந்து கொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே லீஃப்வியரபிள்ஸ் முதன்மையான ஒன்று ஆகும். 2017க்குள் ஒரு மில்லியன் குடும்பத்தை சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் இலக்கு”, 

என்கிறார் இந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், வணிக ஆய்வு இயக்குனருமான மாணிக் மேதா.

ஃபிப்ரவரி 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் டிசம்பர் வரை நிதி திரட்டியிருக்கிறார்கள். தற்போது வரை 2,50,000 டாலர் வரை நிதி திரட்டியிருக்கிறார்கள். மும்பை ஏஞ்சல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தொடர் தொழில்முனைவோரான அஜீத் குரானா, ஆம்னிவோர் வென்ச்சர்ஸின் நிறுவன பங்குதாரரான ஜினேஷ் ஷா, எய்ட் கேபிடல் நிறுவனத்தின் இணை நிறுவனரான விக்ரம் சச்ரா, சாலிடாரிடி நிறுவன இயக்குனரான டாக்டர் அனிருதா மல்பனி மற்றும் டாப்டி நிறுவனத்தின் இணை நிறுவனரும், இயக்குனருமான விஜய் டல்ரேஜா ஆகியோரிடமிருந்து இந்த நிதி திரட்டப்பட்டிருக்கிறது.

முன்விற்பனை மூலமாகவும் நிதி திரட்டும் திட்டத்தில் இருக்கிறார்கள். இந்த பணத்தை கொண்டு தொழில்நுட்பக் குழு மற்றும் அணிகலனை மேலும் அழகூட்ட முடியும் என நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் புதிய ஆஃபர்களையும் அளிக்க உள்ளனர். அதிக அளவிலானோர் இதை வாங்கும் பொழுது விலை இன்னும் குறையும் என மானிக் தெரிவித்தார். உலகம் முழுவதும் விற்கும் திட்டம் இருந்தாலும் இப்போதைக்கு இந்தியாவை மட்டுமே குறி வைத்திருக்கிறார்கள்.

இப்போதைக்கு கூகிள் ப்ளேஸ்டோரில் இது கிடைக்கிறது. மற்றவற்றில் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1500 கருவிகள் விற்கபட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தை நிலவரம்

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் படி 2013ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றம் 3,09,546 நடந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2009ம் ஆண்டு 9.2 சதவீதமும், 2013ம் ஆண்டு 11.2 சதவீதமும் அதிகரித்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கி வருகிறார்கள் என்பது கூறிப்பிடத்தக்கது. உதாரணமாக விது(vithU), ரக்‌ஷா, பிசேஃப், புகார் மற்றும் சேஃப்டிபின் போன்ற செயலிகள். சில செயலிகள் ஜிபிஎஸ் பிந்தொடர்தல், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளை மேப்பில் காட்டுதல், அவசர எண்களுக்கு எச்சரிக்கை அனுப்புதல் மற்றும் சப்தமெழுப்புதல் போன்ற சேவைகளை மட்டும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அரசாங்கம் “ஹிம்மத்” என்ற செயலியை வெளியிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் செல்போனின் பவர் பொத்தானை குலுக்கினாலோ இரண்டு முறை அழுத்தினாலோ காவல்துறைக்கு எச்சரிக்கைச் செல்லும்.

தங்கள் தொழில்நுட்பம் 7 பில்லியன் மக்களில் எல்லோருக்கும் பொருந்தும் என மாணிக் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் வெறுமனே செயலியை மட்டும் வெளியிடவில்லை, கூடவே கருவியையும் அளிக்கிறார்கள் என்பதால் எந்தவிதமான தொழில்நுட்பக் கோளாறும் இல்லாமல் கச்சிதமாக வேலை செய்வதாக மாணிக் தெரிவிக்கிறார்.

இணையதள முகவரி : leafwearables

ஆங்கிலத்தில் : Tausif Alam | தமிழில் : Swara Vaithee