உலக அழகி மனுஷி சில்லர் ஹரியானா மாநில அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அறிவித்த இலவச சானிட்டரி பேட் திட்டம்!

0

மிஸ் வேர்ல்ட் மனுஷி சில்லர், ஹரியானா முதலமைச்சர் மனோஹர் லால் கட்டர் மற்றும் உலக அழகி அமைப்பின் தலைவி ஜூலியா மார்லி ஆகியோர் இணைந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி பேட் வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர். மாதவிடாய் குறித்தான ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, ப்ராஜக்ட் சக்தி என்ற பெயரில் மனுஷி சில்லர் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். இதை அவர் தன் சொந்த மாநிலமான ஹரியானாவில் உலக அழகி பட்டம் வெல்வதற்கு முன்பிருந்தே செய்து வருகிறார். 

அண்மையில் நடந்த ஒரு பேட்டியில் தன் பெற்றோர்களுடன் கலந்துகொண்ட மனுஷி,

“ஹரியானா மக்கள் பெண்களை எப்படி போற்றுகிறார்கள் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. தன் வெற்றியால் மேலும் மாற்றமும், பெண்களை ஊக்கப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும்,” என்றார். 

ஹரியானா போன்ற மாநிலத்தில் பெண்களை குறைவாக எண்ணியிருந்த காலம் போய் தற்போது நிலைமை நன்கு மாறியுள்ளது என்றார் மனுஷி. மேலும் தன் வெற்றி எவ்வாறு பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் என்று விளக்கிய அவர்,

“முன்பெல்லாம் அழகிப் போட்டிகளில் கலந்துகொள்ள ஹரியானாவில் இருந்து பெண்கள் வருவது அரிது. ஆனால் இனி பெண்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.”

மனுஷியின் முயற்சிக்கு ஹரியானா அரசு 18 கோடி ரூபாய் செலவிட முன்வந்துள்ளதாக முதலமைச்சர் கட்டர் தெரிவித்தார். 

“எங்கள் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சானிட்டரி பேட்கள் வழங்க முடிவெடுத்துள்ளேன்,” என்றார். 

மேலும் பேசிய அவர் மனுஷி உடன் இணைந்து பெண்களில் அனீமியா பிரச்சனை குறித்தும் பல திட்டங்களை வகுக்க உள்ளோம். 

“இந்தியாவில் சுமார் 61 சதவீத பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இரும்புச்சத்து குறைவாக ஆரோக்கியமற்று இருப்பதால் இதில் முக்கிய கவனம் செலுத்த உள்ளோம்,” என்றார்.

இந்த திட்டத்திற்கும் மனுஷி சில்லர் ப்ராண்ட் அம்பாசிடராக இருக்கப்போவதாக டக்கர் அறிவித்தார்.

கட்டுரை: Think Change India