உறைய வைக்கும் கடும் பனியில் ராணுவ வீரர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள நீரில்லா தொழில்நுட்பம்! 

0

டெல்லியைச் சேர்ந்த க்ளென்ஸ்டா இண்டர்நேஷனல் (Clensta International) என்கிற ஸ்டார்ட் அப் புனீத் குப்தாவால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பயோடெக் பிரிவில் செயல்படும் இந்நிறுவனம் ராணுவ வீரர்கள் தண்ணீர் இல்லாமல் தங்களை சுத்தப்படுத்திக்கொள்ள உதவுகிறது. க்ளென்ஸ்டா 5,00,000 டாலர் நிதி உயர்த்தியுள்ளது. இந்த நிதித்தொகையை அளித்த முதலீட்டாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.

நாட்டைப் பாதுகாக்க உறைய வைக்கும் குளிரில் தொடர்ந்து எல்லையில் காவல் இருப்பது மட்டுமே இந்திய ராணுவ வீரர்கள் வாழ்க்கையில் நிதர்சனம் அல்ல. உறைநிலைக்கும் கீழ் இருக்கும் வெப்பநிலை குளிப்பது போன்ற சாதாரண பணிகளையும் சாத்தியமற்றதாக மாற்றிவிடுகிறது. ராணுவ வீரர்கள் நீண்ட நாட்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள முடியாமல் பணியைத் தொடரவேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் சரும பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்தப் பகுதியில் வணிக வாய்ப்பைக் கண்டார் புனீத் குப்தா. நாட்டின் சில கடுமையான பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களை சந்தித்தார். அவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அடிவாரத்தில் இருக்கும் முகாமிற்கு சென்றால் மட்டுமே அவர்களால் தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள முடிந்தது. மற்ற நேரங்களில் குளிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததைக் கண்டார்.


இதுவே க்ளென்ஸ்டா இண்டர்நேஷனல் என்கிற பயோடெக்னாலஜி நிறுவனத்தைத் துவங்க உந்துதலாக அமைந்தது. 2016-ம் ஆண்டு நிறுவப்பட்ட க்ளென்ஸ்டா இண்டர்நேஷனல் ஐஐடி டெல்லியால் இன்குபேட் செய்யப்பட்டது. இந்நிறுவனம் ஐஐடி டெல்லியில் உள்ள பயோடெக்னாலஜி பிசினஸ் இன்குபேஷன் ஃபெசிலிட்டியில் அமைந்துள்ளது.

தண்ணீரைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து அன்றாட சுகாதார பிரச்சனைகளுக்கு எளிமையான புதுமையான தீர்வுகளை வழங்கவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். 

இந்நிறுவனம் பயனாளிக்களுக்கு உகந்த இதன் தயாரிப்புகளை 2017-ம் ஆண்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. ராணுவத்திற்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தற்போது இதன் தீர்வுகள் நுகர்வோர் விற்பனைக்குத் தயாராகி வருகிறது. வீடு மற்றும் சுகாதார பராமரிப்பு பிரிவுகளிலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் விற்பனை செய்யத் தயாராகி வருகிறது. புனீத் க்ளென்ஸ்டாவை ’தண்ணீரில்லா தொழில்நுட்பம்’ சார்ந்த பொருட்களின் நிறுவனம் என்கிறார்.

வாய்ப்புகள்

"தண்ணீரில் குளிக்க முடியாத நிலை ஏற்படாமல் ராணுவ வீரர்களும் சிறப்பான சுகாதாரத்துடன் இருப்பதை உறுதிசெய்வதே என்னுடைய நோக்கம். இந்தத் தயாரிப்புகள் முன்னுரிமை துறைக்கும் கொடுக்கப்படலாம்,” என புனீத் விவரித்தார். கார்கில், சியாசின், திராஸ் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்தபோதுதான் இந்த திட்டம் அவர் மனதில் வேரூன்றத் துவங்கியது.


க்ளென்ஸ்டா வாட்டர்லெஸ் பாடி பாத் மற்றும் க்ளென்ஸ்டா வாட்டர்லெஸ் ஷாம்பூ அழுக்கு, தூசி மற்றும் எண்ணைய் பசையை சருமம் மற்றும் தலையிலிருந்து அகற்றி சருமத்தையும் தலைமுடியையும் ஈரப்பதத்துடன் வைக்கிறது. இந்தத் தயாரிப்புகள் தண்ணீர் இன்றி சுகாதாரத்தை வழங்குவதற்கான மருத்துவ ரீதியான தீர்வாகும். தலைமுடி ஈரப்பதத்தை அடையும் வரை ஷாம்பூவைத் தடவவேண்டும். தலையின் மேற்பகுதியில் மெல்ல மசாஜ் செய்து சுத்தமான துண்டினால் துடைத்துவிடவேண்டும். பாடி வாஷை கைகளில் எடுத்துக்கொண்டு உடலில் தடவி மசாஜ் செய்து பின்னர் துண்டினால் துடைத்துவிடவேண்டும்.

க்ளென்ஸ்டாவின் ஷாம்பூ அல்லது பாடி வாஷ் 100 மி.லி பாட்டில் 300 லிட்டருக்கும் அதிகாமான தண்ணீரை சேமிப்பதாக தெரிவித்தார் புனீத்.

வணிகம்

புனீத் டெல்லியில் பிறந்தார். பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் கொல்கத்தா இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் முன்னாள் மாணவராவார். 2011-ம் ஆண்டு எம்பிஏ முடித்த பிறகு 2015-ம் ஆண்டு யூகேவில் இருந்து கௌரவ பட்டம் பெற்றார். கடந்த பத்தாண்டுகளில் டிஆர்டிஓ மற்றும் ஹனிவெல் நிறுவனத்தில் பொறியியல் சேவைகளில் பணியாற்றியுள்ளார்.

2011 – 2015 இடைப்பட்ட காலத்தை வணிகம் குறித்து ஆய்வு செய்வதிலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துவதிலும் புனீத் செலவிட்டார். இவர் 5,00,000 டாலர் சீட் நிதிச்சுற்றுடன் உருவாக்கப்பட்ட க்ளென்ஸ்டா நிறுவனத்தின் தீர்வுகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடனும் ஐஐடி-யின் ஆதரவுடனும் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகளவிலும் வழங்க விரும்புகிறார். சில்லறை வர்த்தக சந்தையில் தயாரிப்பை விநியோகிக்க இந்நிறுவனம் பல்வேறு விநியோக நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.


”தற்சமயம் பி2பி சந்தையில் ஈடுபட்டுள்ளோம். தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இந்திய, அமெரிக்க, டச்சு மற்றும் ஸ்பானிஷ் பாதுகாப்புத் துறையுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். பல கிளைகளைக் கொண்ட பல்வேறு மருத்துவமனைகளிலும் பேசி வருகிறோம். அத்துடன் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடனும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது,” என்றார் புனீத்.

ஆர் & டி-யில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் க்ளென்ஸ்டா இதுவரை லாபமோ நஷ்டமோ இல்லாத சமநிலையை எட்டவில்லை. இந்நிறுவனம் கீழ்கண்ட சந்தைகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

• பாதுகாப்புப் படைகள் : சுத்தமான தண்ணீர் கிடைப்பது கடினமாக இருக்கக்கூடிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள ராணுவ வீர்ர்களுக்காக இந்தப் பிரிவில் கவனம் செலுத்தப்படுகிறது

• மருத்துவ பராமரிப்பு : தீவிர நோய்தாக்கம் காரணமாக குளிக்கமுடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்காக இந்தப் பிரிவில் கவனம் செலுத்தப்படுகிறது.

• நீர் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றான விண்வெளி பயணங்களுக்காக விண்வெளி ஏஜென்சிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

• பயணம் மற்றும் சாகசம் : காடு, மலை உச்சி போன்ற தண்ணீர் கிடைக்காத பகுதிகளில் சாகச பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்காக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிறுவனம் ஏற்கெனவே உலகளாவிய செயல்பாடுகளைத் துவங்கி நெதர்லாண்டில் கால்பதித்துள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.

”ஒழுங்குமுறை இணக்கம் இருப்பது பயோடெக் தயாரிப்புகளில் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். பயோடெக் மற்றும் காஸ்மெடிக் பொருட்களுக்கான விதிமுறைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டிருக்கும். எனவே ஆரம்ப கட்டத்தில் மூலப்பொருட்களுக்கான தேர்வு உலகளவிலான தரநிலைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யவேண்டியது மிகவும் அவசியமானதாகும்,” என்றார் புனீத்.

”உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ளது. இந்த நிறுவனங்கள் விரைவாக வளர்ச்சியடைய வேண்டும்,” என்றார் ஐஐஎஸ்சி முன்னாள் பேராசிரியர் மற்றும் லேப்டுமார்கெட் என்கிற புதுமை சார்ந்த நிறுவனத்தின் தற்போதைய இணை நிறுவனர் சுதீர் குமார் சின்ஹா.

2030-ம் ஆண்டிற்கான யூஎன்டிபி இலக்குகளில் 17 இலக்குகள் உள்ளன. இதில் வறுமையை ஒழிக்கவேண்டும் என்கிற இலக்கும் அடங்கும். அரசாங்கமும் மக்களும் நீர் இருப்பையும், பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்யவேண்டும் என்பதே இந்த இலக்கு எண்ணிக்கையில் ஆறாம் இடத்தில் இடப்பெற்றுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கும் க்ளென்ஸ்டா இந்த இலக்கை எட்ட உதவும் முன்னணி நிறுவனமாக மாறுவதை பொருத்திருந்து பார்ப்போம்.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL