என்னை வாங்க விருப்பமா? ஃப்ளிப்கார்ட்டுக்கு அசத்தல் ரெஸ்யூம் அனுப்பி  கவனம் ஈர்த்த இளைஞர்!

0

எங்கே வேலைத் தேடுவது, எப்படி வேலை தேடுவது, எங்கெல்லாம் ரெஸ்யுமேவை அனுப்புவது என குழம்பித்தவிக்கும் இளைஞர்கள் மத்தியில் ஐஐடி பட்டதாரியான ஆகாஷ் நீரஜ் மிட்டல், இப்படியும் வேலை தேடலாம் என புதிய பாதை காட்டி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் வேலை வாய்ப்பை பெற அவர் கையாண்ட வித்தியாசமான வழி இணைய உலகம் முழுவதும் அவரை பிரபலமாக்கி இருக்கிறது.

ஐஐடி கரக்பூர் பட்டதாரியும், 'இட் வாசண்ட் ஹெர் பால்ட்' (It was't her fault) எனும் நாவலை எழுதிவருமான ஆகாஷ் மிட்டல், தனது கனவு இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் வேலை இருப்பதாக நம்பினார். அந்த வேலையை பெற தீவிரமாக முயற்சிக்கவும் தீர்மானித்தார்.

விரும்பிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்றால் அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்து அதனுடன் ரெஸ்யூமையும் அனுப்பி வைத்து காத்திருப்பார்கள் அல்லவா? ரெஸ்யூமில் தங்கள் திறமைகளையும், தகுதிகளையும் பட்டியலிட்டு அது கவனத்தை ஈர்க்கும் என்று நம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் ஆகாஷ், இப்படி வழக்கமாக எல்லோரும் பின்பற்றும் வழியை கடைபிடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட்டார்.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஃபிளிப்கார்ட் தளத்தில் தன்னை விற்பனை செய்வதாக அறிவித்தார். அதாவது ஃபிளிப்கார்ட் தளத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போலவே, தன்னை விற்பனை பொருளாக மாற்றிக்கொள்ளும் வகையில் விளம்பரம் செய்திருந்தார். அதாவது அவரது ரெஸ்யூமையே ஃபிளிப்கார்ட் தளத்தின் விற்பனை பக்கம் போல அமைத்திருந்தார்.

அந்த பக்கத்தில் பொருளுக்கான விவரங்களுக்கு பதிலாக, ஆகாஷ் மிட்டல் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அவரது பெயர், கல்வித்தகுதி, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே விற்பனை பொருளுக்கான விவரங்கள் பாணியிலேயே அமைந்திருந்தது.

ஆகாஷ் மிட்டல், இட் வாசண்ட் ஹெர் ஃபால்ட் நாவல் ஆசிரியர், பிராடக்ட் மேலாளராக விரும்புபவர் எனும் தலைப்பின் கீழே, தான் விற்பனை செய்யப்பட்ட இடம் என குறிப்பிட்டு, தான் படித்த கல்வி நிறுவனத்தைக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பொருள் விளக்கம் வடிவிலேயே அவரது திறமைகள் மற்றும் தனிச்சிறப்புகளை பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த புதுமையான ரெஸ்யூம் வடிவை ஃபிளிப்கார்ட் டிவிட்டர் பக்கம் மூலம் சமர்பித்திருந்தார். பின்னர் இது பற்றி தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களிலும் குறிப்பிட்டிருந்தார். போட்டி மிகுந்த சூழலில் கவனத்தை ஈர்க்க வழக்கமான முறையில் இருந்து மாறுபட்டு சிந்திப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முயற்சியால் அவருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவில்லை என்றாலும், இணையவெளி முழுவதும் அவரை பிரபலமாக்கி இருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்தியாவில் மிகவும் சுவாரஸ்யமான முறையில் வேலைவாய்ப்புக்கான ரெஸ்யூமை உருவாக்கிவர் என நண்பர் ஒருவர் கேள்வி பதில் தளமான குவோராவில் அவரைப்பற்றிய விவரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இளைஞர்கள் கொஞ்சம் வித்தியாசமாக படைப்பாற்றைலை வெளிப்படுத்தும் வகையில் யோசித்து செயல்பட்டால் கூட்டத்தில் இருந்து விலகி தனித்து நிற்கலாம் என்பதற்கான அழகான உதாரணமாக அவர் திகழ்கிறார்!

ஆகாஷின் டிவிட்டர் பக்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்