உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப்களை அடையாளம் காட்டிய 'பாஷா' திருவிழா

0

டிஜிட்டல் பரப்பில் நமது பிராந்திய மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தொழில்முனைவோர், வல்லுனர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் வகையில் 'பாஷா' திருவிழா இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்றது. இதன் சிறப்பம்சமாக உள்ளூர் மொழிகளை டிஜிட்டல் பரப்பில் முன்னிலைக்கு கொண்டு வரும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 14 ஸ்டார்ட் அப்கள் அடையாளம் காணப்பட்டன.

கலாச்சார அமைச்சக ஆதரவுடன், ரெவரி டெக்னாலஜிஸ் (Reverie Language Technologies ) நிறுவனத்துடன் இணைந்து யுவர்ஸ்டோரி, மார்ச் 11 ம் தேதி முதல் முறையாக இந்திய மொழிகளுக்கான டிஜிட்டல் விழாவான பாஷாவை நடத்தியது. இந்தத் துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப்களுக்கான மேடையாக இது அமைந்தது.

இதில் பங்கேற்ற 14 ஸ்டார்ட் அப்கள் வருமாறு; பிலிடியூட்டர், இரெலிகோ, இண்டஸ் ஓஎஸ், இந்தியன் டிடிஎஸ், லிபிகா, லிங்குவாவிஸ்டா, மேக்டப் இன்னவேஷன் லேப்ச் லிட், மாத்ருபாரதி, பிளானட் கோகோ, பிரதலிபி, ஷப்தனகரி, ஷ்ரத்ஞ்ஜலி, டைட் லார்னிங்.

இந்த ஸ்டார்ட் அப்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம்:

பிலிடியூட்டர் (BiliTutor): மின்னூல் வாசிக்கும் சாதனமான கிண்டில் மற்றும் இணையம் வழி மொழி கற்றல் சேவையான டுவாலிங்கோ ஆகிய இரண்டையும் இணைத்து புதிய மொழி கற்பதை சுவாரஸ்யமாக்குகிறது இந்த சேவை. இதன் நிறுவனர் அமர்ஷ் ஆனந்த் சீனாவில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்.

இரெலிகோ (eRelego): இது ஒரு டிஜிட்டல் சந்தை. இந்த இ-காமர்ஸ் மேடையில் உள்ளூர் மொழி பதிப்பாளர்கள் உள்ளிட்ட பதிப்பாளர்கள் தங்கள் வெளியீடுகளை விற்பனை செய்யலாம். புத்தகங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள் ஆகியவற்றை புது யுக வாசகர்களுக்காக இணையம் மூலம் விற்பனை செய்கிறது.

இண்டஸ் ஓஎஸ் (Indus OS): டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய சவாலான சமூக நோக்கில், பொருளாதார மற்றும் பிராந்திய நோக்கில் பலவகையாக இருக்கும் சமூகத்திற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் இது. ஸ்மார்ட்போன் மூலமாக மக்களை டிஜிட்டல் உலகுடன் இணைக்க முயற்சிக்கிறது. பிராந்திய மொழி பயனாளிகளுக்கான முதல் பிராந்திய மொழி மொபைல் இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் மத்திய மின்னணு மற்றும் ஐடி அமைச்சகத்துடன் உள்நாட்டுக்கான இயங்குதளத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. டெக்ஸ்ட் டு ஸ்பீச் வசதியையும் இது பெற்றிருக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனம் ஓமிட்யார் நெட்வொர்க்கிடம் இருந்து 5 மில்லியன் ஏ சுற்று நிதியை பெற்றது. ஏஞ்சல் முதலீட்டாளர்களான ஸ்னேப்டீலின் இணை நிறுவனர்கள் ரோகித் பன்சல் மற்றும் குணால் பஹல், குவிக்கர் நிறுவனர் பிரனாய் சுலேட், இன்மொபி இணை நிறுவனர்கள் நவீன் திவாரி, அமீத் குப்தா, டேமாசேக்கின் ஹரி பத்மனாபன் மற்றும் மானக் நிங் ஆகியோரின் முதலீட்டையும் பெற்றுள்ளது.

இந்தியன் டிடிஎஸ் (Indian TTS): இந்திய மொழிகளுக்கான டெக்ஸ்ட் டு ஸ்பீச் தொழில்நுட்பம் இது. மொழிகளின் இயல்பான உச்சரிப்புக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளது. இந்திய குரல் உச்சரிப்பை வழங்குகிறது. எல்லா வகையான இயந்திரங்கள் மற்றும் மொபைல்களில் ஐவிஆர் சாப்ட்வேருடன் பயன்படுத்தக்கூடிய இந்தி டிடிஎஸ் ஏபிஐயை உருவாக்கியது. அதற்கு முன்னர் ஐவிஆர் சாப்ட்வேர் முன்பதிவு ஒலியை இடையூறுடன் கொண்டிருந்தது. இவர்களின் தீர்வு குரலை இயல்பாக்கியது. எனவே இந்திய அல்லது உள்ளூர் மொழிகளில் உச்சரிப்பை நேர்த்தியாகிறது.

லிபிகார் (Lipikaar): அனைத்து இந்திய மொழிகளிலும் டைப் செய்வதை எளிதாக்கும் காப்புரிமைய பெற்ற தீர்வு. இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 18 மொழிகளில் செயல்படுகிறது. விண்டோஸ் பிசிக்கான பல மொழி எடிட்டிங் சாப்ட்வேர், ஆண்ட்ராய்டு போன்களுக்கான கீபோர்ட் செயலி, பிரவுசர் பிளகின் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் டைப்பிங் முறை எளிதானது. வழக்கமான முறை போல் இதை பயன்படுத்த பயனாளிகள் ஆங்கிலத்தில் அதிக பரிட்சயம் கொண்டிருக்கத்தேவையில்லை. தங்கள் மொழியிலேயே யோசித்து செயல்படலாம்.

லிங்குவாவிஸ்டா (Linguavista): நவீன மொழி தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை சிறந்த மொழிச்சேவைகளுடன் இணைத்து உலக நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் வர்த்தைகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அபிஷேக் சக்ரவர்த்தி இந்நிறுவனத்தை துவக்கினார். 20 வயதில் நிறுவனத்தை துவக்கியவர் இந்தியா தவிர சீனா மற்றும் ஜப்பானில் விரிவாக்கம் செய்துள்ளார்.

மேக்டப் இன்னவேஷன் லாபஸ் லிட் (Megdap Innovation Labs Pvt Ltd.): டிஜிட்டல் இடைவெளியை நிரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட நிறுவனம். அனைத்து பங்குதாரர்களுக்கும் பயன் அளிக்கக் கூடிய வகையிலான வர்த்தக மாதிரியை உள்ளூர் தன்மையுடன் இணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பல மொழிகளின் உடனடி உள்ளடக்கத்தை அளிக்கும் தொழில்நுட்ப வசதியை உருவாக்கியுள்ளது. மற்ற நிறுவனங்களுக்காக மொழி தொழில்நுட்ப மேடையான டெக்ஸ்லாங்கை அளிக்கிறது. மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், இ-காமர்ஸ், கல்வி மற்றும் சுற்றுலா துறைகளுக்கான உள்ளடக்கத்தை உள்ளூருக்கு ஏற்ப தயார் செய்ய உதவுகிறது. நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் தொடர்பை உள்ளூர் மொழியில் மேற்கொள்ள இது வழிகாட்டுகிறது.

மாத்ருபாரதி (Matrubharti): இது எழுத்தாளர்களுக்கான சுய பதிப்பு சேவை. வாசகர்கள் தங்கள் மொழிகளில் மின்னூல்களை வாசிக்கலாம். கடந்த ஆண்டு 35,000 வாசகர்கள், 900 எழுத்தாளர்கள், 3300 மின்னூல்கள் மற்றும் 3.6 லட்சம் டவுண்லோடை பெற்றிருந்தது. 22 மாநிலங்கள் மற்றும் 42 நாடுகளில் பயனாளிகளை பெற்றுள்ளது.

பிரதிலிபி (Pratilipi): இந்திய மொழி இலக்கியங்களுக்கான வேகமாக வளரும் சுய பதிப்பு சேவை. 18 மாதங்களில் ஆறு மொழிகளில் 2700 எழுத்தாளர்களை ஈர்த்துள்ளது. சாகித்ய அகாடமி மற்றும் ஞான்பீட விருது பெற்றவர்களும் இதில் அடங்கும்.

பிளாண்ட்கோகோ (Planet GoGo:): குர்காவ்னை சேர்ந்த பிளானட்கோகோ லாக்ஸ்கிரின் செயலி. ஆண்ட்ராய்டு பயனாளிகள் உள்ளூர் மொழியில் தகவல் மற்றும் செய்திகளை கண்டறிய உதவுகிறது. இதில் கிடைக்கும் கோகோ புள்ளிகளை பயனாளிகள் பிரி டாக்டைம் உள்ளிட்ட விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஷப்தநகரி (Shabdanagari): ஐஐடி கான்பூரில் உருவாக்கப்பட்ட முதல் இந்தி மொழி சமூக வலைப்பின்னல் சேவை. உள்ளூர் மொழியில் உள்ளடக்கம் உருவாக்கப்பட உதவுகிறது. ஒராண்டுக்கு முன்னர் அறிமுகமான சேவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஷ்ரத்தாஞ்ஜலி (Shradhanjali): இந்த தளம் மக்கள் தங்கள் முன்னோர்கள் நினைவுகளை பாதுகாக்க உதவுகிறது. பயனாளிகள் சரிதைகள், புகைப்படங்கள், வீடியோக்கள், இரங்கல் குறிப்புகளை இதில் பல மொழிகளில் இடம்பெறச்செய்யலாம். பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் குறிப்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். 9 மொழிகளில் சேவை அளிக்கிறது.

ஸ்வென் (SWEN): நியூசின் தலை கிழ் உச்சரிப்பு. செய்திகள் மட்டும் அல்ல உள்ளூர் மொழிகளில் பல பிரிவுகளில் உள்ளடக்கத்தை அளிக்கிறது.

டைட் லர்னிங் (Tidelearning): உலகம் முழுவதும் ஏழை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் அனுபவத்தை அளிக்க கூடிய தொழில்நுட்பம் சார்ந்த வழிகளை உருவாக்கித்தருவது இதன் நோக்கம். கற்கும் ஆர்வம் கொண்ட மாணவர்கள் மற்றும் ஈடுபாடுள்ள ஆசிரியர்களை டெக்னாலஜி டெவல்ப்மண்ட் ஆப் எஜுகேஷன் (டைட்) இணைக்கிறது. அதே நேரத்தில் வகுப்பறை சூழலை உள்ளூர் கலாசாரம், மொழி மற்றும் மரபுகளுடன் இணைக்கிறது. பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்குவது மூலம் ஆசிரியர்களுக்கு உதவுவதோடு மாணவர்களின் முன்னேற்றத்தை அறியவும் வழி செய்கிறது. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக கொண்ட செயலியையும் உருவாக்கியுள்ளது.

தொடர்பு கட்டுரை:

யுவர்ஸ்டோரியின் 'பாஷா'- இந்திய மொழிகளின் டிஜிட்டல் திருவிழா தொடங்கியது!