18 மாதங்களில் 21 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டிய வடிவமைப்பு தொடக்க நிறுவனம்!

0

மும்பையைச் சேர்ந்த Houseome என்கிற ஸ்டார்ட் அப் பிரதீப் சிங்வியால் 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது. உட்புற வடிவமைப்புத் துறையில் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப் 50 லட்ச ரூபாய் நிதி உயர்த்தியுள்ளது.

பிரதீப் சிங்வி 2010-ம் ஆண்டு மும்பையில் ஒரு புதிய பிளாட் வாங்கினார். உட்புற வடிவமைப்பிறகு ஒரு நபரை நியமித்தார். அவர்களிடம் விலையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை தெரிந்துகொண்டார். வடிவமைப்பிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்த முழுமையான தகவல்களையும் வழங்கவில்லை. இந்த பிரச்சனைக்கு தானே தீர்வு காண தீர்மானித்த பிரதீப் ஸ்டார்ட் அப் துவங்க திட்டமிட்டார்.

தற்போது 30 வயதாகும் பிரதீப், சரியான பின்னணி உடையவர். ஜோத்பூரை சேர்ந்த இவர் ஸ்டார் பஜார் நிறுவனத்தின் வணிக திட்டமிடல் மற்றும் பட்ஜெடிங் பிரிவிற்கு தலைமை வகித்தார். பட்டயக் கணக்காளரான இவர் டைம்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க், கேப்ஜெமினி, ரேமண்ட் அப்பாரல் உள்ளிட்ட நிதி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிதித் துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு awesome home கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இவரது ஸ்டார்ட் அப்பிற்கு Houseome என பெயரிட்டு 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

"சிறப்பான வடிவமைப்பு, வெளிப்படையான கட்டண முறை, ஏற்றுக்கொண்ட ப்ராஜெக்ட் முடிப்பதற்கான உத்தரவாதம் போன்றவற்றுடன் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தொழில்சார் நிபுணத்துவத்தை செயல்பாடுகளில் இணைத்துள்ளோம். இந்த அம்சம் இந்தப் பகுதியில் இதுவரை இல்லாத ஒன்றாகும். வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வீடுகள் இருப்பதை உறுதிசெய்கிறோம்,”

என பிரதீப் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டார்.

தொழில்நுட்பம் அனைத்தையும் சிறப்பாக்குகிறது

துவக்க நாட்களில் தனது தனிப்பட்ட சேமிப்பில் இருந்து ஆரம்பகட்டமாக 15 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். இந்தத் தொகை வலைதளம் உருவாக்குதல், மனிதவளம், மார்கெட்டிங் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது. ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடு பெறப்பட்டு தற்போது இவர்களது மொத்த நிதி 50 லட்ச ரூபாயாக உள்ளது. இந்தத் தொகை மெய்நிகர் உண்மை (VR) டூல் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மும்மையைச் சேர்ந்தவர்கள் புதிய சிந்தனைகளை வரவேற்பதாக பிரதீப் கருதுகிறார்.

”வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டின் உட்புறத்தை 3டி சூழலில் பார்க்க உதவக்கூடிய புதிய மெய்நிகர் உண்மை டூல் ஒன்றுடன் வாடிக்கையாளர்களை அணுகியபோது அது பெரும் வரவேற்பைப் பெற்றது,” என பிரதீப் நினைவுகூர்ந்தார். 

சிறப்பான விளைவுகளைப் பெற மெய்நிகர் உண்மை டூலில் கூடுதல் அம்சங்களை இணைக்கும் பணியிலும் மெய்நிகர் லைப்ரரி உருவாக்கும் பணியிலும் இந்த ஸ்டார்ட் அப் ஈடுபட்டுள்ளது.

சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதிசெய்வதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் தளத்தில் உட்புறத்தின் மாதிரி காட்டப்படும். அவர்கள் தங்களது பரிந்துரைகளையும் இணைத்துக்கொண்ட பிறகு வடிவமைப்பு இறுதியாக தீர்மானிக்கப்படும்.

”இது அவர்களது தேவைகளை சரியான நேரத்தில் நிறைவுசெய்யவும் செயல்பாடுகளை விரைவுப்படுத்தவும் உதவும்,” என்றார் பிரதீப்.

சிறப்பான வாடிக்கையாளர் அனுபவம்

இந்தியாவில் உட்புற வடிவமைப்பு ஒழுங்குப்படுத்தப்படாத பிரிவாக இருப்பதால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தச்சர்கள் தரப்பில் இருந்து தொழில்சார்ந்த நிபுணத்துவம் இல்லாதது Houseome நிறுவனத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது. அவர்கள் பணிகளை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்களிடம் முறையான திறன் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களின் தேவை முறையாக பூர்த்திசெய்யப்படாமல் போகும் என்றார் பிரதீப்.

"Houseome நிறுவனத்தில் எங்களது முதல் பணியே வாடிக்கையாளர்களின் தேவையை முறையாகப் புரிந்துகொள்வதுதான். அவர்களுக்கு உண்மையான செலவுகளின் மதிப்பீட்டையும் ப்ராஜெக்ட் முடிப்பதற்கான காலகெடுவையும் வழங்கி ஒப்புதல் பெற்றதும் வடிவமைப்புப் பணி துவங்கும். மெய்நிகர் தளத்தில் முழுமையான வடிவமைப்பு காட்டப்பட்டு ஒப்புதல் பெற்றதும் அவற்றை செயல்படுத்தும் பணி துவங்கப்படும்,” என்றார்.

Houseome நிறுவனத்தினுள் கட்டிடக்கலைஞர்கள் உட்புற வடிவமைப்பாளர்கள் அடங்கிய குழு உள்ளது. இவர்கள் வாடிக்கையாளர்கள், தொழிற்சாலை, ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் பணியாற்றுகின்றனர். இந்தக் குழுவில் மும்பையில் ஆறு கட்டிடக்கலைஞர்கள் மற்றும் உட்புற வடிவமைப்பாளர்களும் புனேவில் இரண்டு கட்டிடக்கலைஞர்கள் மற்றும் உட்புற வடிவமைப்பாளர்களும் உள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் பணியை மேற்கொள்ள உதவும் வகையில் ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களை முறையாக நிர்வகிக்கின்றனர்.

வடிவமைப்பாளர்கள் வாடிக்கையாளர்களை முதல் முறையாக சந்திக்கும்போது அவர்களிடமிருந்து ஆன்லைனில் கருத்துக்களை பெறுவோம். இது எங்களது வடிவமைப்பாளர் வாடிக்கையாளர்களின் தேவையை சரிவர புரிந்துகொண்டுள்ளார்களா என்பதை தெரிந்துகொண்டு சரியான பரிந்துரைகளை வழங்க உதவும். இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முறையில் சேவையளிக்க உதவும்,” என்றார் பிரதீப்.

படைப்பாற்றலுடன் கூடிய செயல்முறையில் இவர்கள் moodboards, mockups, 2டி லேஅவுட்கள், 3டி இமேஜ்கள் போன்றவற்றை உருவாக்கி வாடிக்கையாளர்கள் தங்களது கனவு இல்லத்தை காட்சிப்படுத்திப் பார்க்க உதவுகின்றனர். 

“வாடிக்கையாளர்கள் காட்சிப்படுத்திப் பார்க்க உதவும் வகையில் உரிமை பெறப்பட்ட மெய்நிகர் உண்மை டூல் பயன்படுத்துகிறோம். வடிவமைப்பு முடிவுசெய்யப்பட்டதும் பொருட்களின் விவரங்களுடன் பணியின் முழுமையான மதிப்பீடுகளை பகிர்ந்துகொள்வோம்,” என்றார் பிரதீப்.

பார்ட்னர்ஷிப்புடன் தரத்தை உறுதிசெய்தல்

Houseome இடத்தை இலவசமாக ஆய்வு செய்து வாடிக்கையாளருக்கு மதிப்பீடு வழங்குகின்றனர். 2 படுக்கை அறை வசதி கொண்ட வீட்டின் வடிவமைப்பிற்கான கட்டணம் 8 லட்ச ரூபாயில் துவங்குகிறது. ஆனால் இது வாடிக்கையாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டது. இவர்களது ப்ராஜெக்டின் சராசரி தொகை 15 லட்ச ரூபாயாகும். குறிப்பிட்ட கால அளவிற்குள் பணிகள் நிறைவடைவதை Houseome நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சராசரியாக 6-8 வாரங்கள் ஆகும்.

நிலையான தரத்தை உறுதிசெய்ய அனைத்து ப்ராண்டட் பொருட்களையும் பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து இந்த ஸ்டார்ட் அப் பெறுகிறது. இவர்களது வளர்ச்சி காரணமாக பொருட்கள் சிறப்பான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இவர்களது மாடுலர் கிச்சன் மும்பையின் ஒரு தொழிற்சாலியில் இருந்து பெறப்படுகிறது. இதை விநியோகிப்பதற்கு ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளனர். மற்ற ஃபர்னிச்சர்கள் வாடிக்கையாளர்களின் இடத்திலேயே அவர்களது தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது.

பணியை செய்து முடிக்க தரமான தயாரிப்புகளையே பயன்படுத்துவதாக பிரதீப் தெரிவித்தார். “உதாரணத்திற்கு பெயிண்டிங் பணிக்கு ஏசியன் பெயிண்ட்ஸ், ஃபால்ஸ் சீலிங் பணிக்கு செயிண்ட் கோபெயின், ஹெட்டிக் ஹார்டுவேர் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இது தரத்தை உறுதி செய்கிறது. ஓராண்டு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தமும் ஃபர்னிச்சர் பொருட்களுக்கு மூன்றாண்டு உத்தரவாதமும் வழங்க உதவுகிறது,” என்றார்.

துவங்கியது முதல் வளர்ச்சி

அறிமுகமாகி ஓராண்டிற்குள் Houseome 7.8 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஒன்பது ப்ராஜெக்டுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்நிறுவனம் 20 வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்துள்ளனர். தற்போது 15 வாடிக்கையாளர்களுடன் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு வருவாய் 14 மில்லியன் ரூபாயை எட்டும் என மதிப்பிடப்படுகிறது.

”துவங்கப்பட்ட ஆண்டுடன் (2016-17) ஒப்பிடுகையில் 80 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளோம். நிதியாண்டு 2019-ல் சிறப்பான லாபத்துடன் 150 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். ஏற்கெனவே புனே சந்தையில் செயல்படத் துவங்கியுள்ளோம். சூரத் மற்றும் அஹமதாபாத் பகுதிகளில் விரிவடைய விரும்புகிறோம்,” என்றார் பிரதீப். 

லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையை நிதியாண்டு 2018-ல் அடைந்ததாகவும் அடுத்த நிதியாண்டில் லாபகரமாக செயல்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நிறுவனம் அறிமுகமாகி 18 மாதத்திற்குள்ளாகவே 21 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளோம். எங்களது வளர்ச்சி விகிதம் சுமார் 100 சதவீதம். இது மிகப்பெரிய சாதனையாகும். நாங்கள் சிறப்பான நிதியுடன் செயல்படும் ஸ்டார்ட் அப்களுடன் போட்டியிட்டு எங்களுக்குச் சொந்தமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளோம். இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இராண்டாண்டுகளிலேயே லாபகரமாக செயல்பட்டது ஸ்டார்ட் அப் கண்ணோட்டத்தில் மிகப்பெரிய வெற்றியாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா