நுகர்வோர் மற்றும் வர்த்தகத்துக்கான லாஜிஸ்டிக்ஸ் சேவை அளிக்கும் 'டி4டெலிவரி'

0

ஸ்டார்ட் அப்களுக்கு நிதி கிடைப்பதில் சில வழக்கமான வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நண்பர்கள் ஒன்று சேரும் போது நிகழ்வதாகும். இப்படி தான் நுகர்வோர் மற்றும் வர்த்தக உரிமையாளர்களுக்கு நகரங்களுக்கு இடையிலான லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்கும் சேவை நிறுவனமான டி4டி டெலிவரி ரிடைல் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் (D4Delivery Retail And Logistics Services) நிறுவனத்திற்கும் நிதி கிடைத்தது. அபிராம் சுரேஷ், ஐஸ்வர்யா ராகவன் மற்றும் மிர்னாள் மோகன்தாஸ் ஆகிய நண்பர்கள் சொந்தமாக நிறுவனம் துவக்குவது பற்றி பேசிக்கொண்டிருந்த போது அபிராம் லாஜிஸ்டிக்ஸ் தொழில்முயற்சி பற்றி தெரிவித்தார்.

டி4டெலிவரி நிறுவனர்கள்
டி4டெலிவரி நிறுவனர்கள்

ஆரம்ப தடைகள்

டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவை நிறுவனம் துவக்குவதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து இந்த மூவரும் தீவிரமாக விவாதித்தனர். இதே துறையில் செயல்பட்டு வந்த தொடக்க நிறுவனங்களை ஆய்வு செய்தவர்கள் முதலில் திருவனந்தபுரத்தில் உள்ள மூன்று உணவு மையங்களில் இருந்து சோதனை முறையில் ஆர்டர் பெற்று செயல்படுத்த தீர்மானித்தனர்.

இது தான் சோதனை செய்து பார்ப்பதற்கான காலம் என்றும் தீர்மானித்தனர். திரும்பி வருவதற்கான நேரம், சேவையை மாற்றிவிடும் திறன் மற்றும் பணிச்சுமை சமன் ஆகியவற்றை சோதித்துப்பார்க்க முற்பட்டனர். இந்த முயற்சியின் போது தான் மையத்தில் இருந்து விரிவடையும் ஹப் அண்ட் ஸ்போக் முறை சரியாக செயல்படும் என முடிவுக்கு வந்தனர்.

இந்தக்குழு பின்னர் மளிகை, பேக்கரி மற்றும் எழுதுபொருள் ஆகிய சேவைகளுக்கும் விரிவாக்கம் செய்து கொண்டனர். 2014 ஜுலையில் நுகர்வோர் சேவையை முறையாக அறிமுகம் செய்தனர்.

செயல்பாடு

டி4டெலிவரி பல அளவிலான வாகனங்களை கொண்டிருக்கிறது. இவற்றை நுகர்வோர் மற்றும் வென்டர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். “நுகர்வோர் இந்த சேவையை சுற்றுப்புறத்தில் இருந்து தங்கள் வீட்டுக்கு பொருட்களை தருவிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். வர்த்தக உரிமையாளர்கள் தங்கள் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம்” என்கிறார் அபிராம்.

கிளவுட் முறையிலான கால் செண்டர் மற்றும் இணையதளம் மூலம் நுகர்வோர் சேவைக்கான ஆர்டரை அளிக்கலாம். இது தவிர டிரைவர்களுக்காக என்று உள்ள செயலி ஆர்டர், பாதைகள் ஆகியவற்றை காட்டுவதோடு ஆர்டர் நிலையை அப்டேட் செய்யவும் உதவுகிறது. வர்த்தக உரிமையாளர்களும் இணையதளம் அல்லது வாட்ஸ் அப் மூலம் ஆர்டரை சமர்பிக்கலாம்.

ஆரம்பத்தில் இந்த மூவருமே டெலிவரி சேவை வழங்கினர். மூன்று மாத பரிசோதனை கட்டத்திற்குப்பிறகு வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த ஆர்டர்கள் அதிகரித்ததால் இதற்கு தனியே ஆட்களை நியமித்தனர். "குவிக்கர் மற்றும் ஓ.எல்.எக்ஸ் தளங்களில் விளம்பரம் செய்தோம். அடுத்த நகருக்கு விரிவாக்கம் செய்யும் நிலையை அடைய 15 மாதங்கள் ஆயிற்று. அதன் பிறகு தீவிரமாக விரிவாக்கம் செய்தோம். இப்போது கொச்சி, திருச்சூர், கோழிக்கோட்டில் செயல்படுகிறோம். விரைவில் பெங்களூருவிலும் செயல்பட உள்ளோம்” என்று கூறுகிறார் அபிராம்.

வரவேற்பும் எதிர்கால திட்டமும்

மாந்தாந்திர அடிப்படையில் 15 முதல் 17.5 சதவீத வளர்ச்சி காண்பதாக இந்த குழு தெரிவிக்கிறது. ரூ.10,000 மாத வருவாயில் துவங்கி இப்போது ரூ.5.5 லட்சத்தை எட்டியிருப்பதாகவும் கூறுகின்றனர். தினமும் 180 முத்ல் 220 ஆர்டர்கள் நிறைவேற்றப்படுகிறது.

”இப்போது நகரங்களுக்கு இடையிலான லாஜிஸ்டிக்ஸ் சேவையில் தான் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த ஆறு மாதங்களில் நகரத்துக்குள் லாஜிஸ்டிக்ஸ் சேவையை அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த காலாண்டுக்குள் படிப்படியாக எல்லா நகரங்களிலும் எங்கள் செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம்” என்கிறார் அபிராம்.

சந்தையின் நிலை

மாறிவரும் நுகர்வோர் பழக்கங்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ளூர் டெலிவரி சேவைக்கான தேவையை உயரச்செய்துள்ளது. இந்த வளர்ச்சி பல ஸ்டார்ட் அப்களை ஈர்த்துள்ளதுடன் முதலீட்டாளர்களையும் கவர்ந்துள்ளது. யுவர்ஸ்டோரி ஏற்கனவே தெரிவித்தபடி உள்ளூர் சேவை தொடக்க நிறுவனங்களை கடந்த 10 மாதங்களில் 200 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

ஆனால், கடந்த மாதம் உள்ளூர் சேவை நிறுவனங்களுக்கு குறிப்பாக உணவு ஸ்டார்ட் அப்களுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. டேசோ மற்றும் ஸ்பூன் ஜாய் மூடப்பட்டன.

டைனிஅவுல் (TinyOwl) நிறுவனம் ஆட்குறைப்பு செய்ய இருப்பதும் அதன் விளைவாக ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் இடையே மோதல் ஏற்பட்டதும் ஸ்டார்ட் அப் உலகை உலுக்கியது. டீல்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் 18 ஸ்டார்ட் அப்கள் நிதி திரட்டிய விவரங்களை அறிவித்துள்ளன.

இணையதள முகவரி: D4Delivery

ஆக்கம்: Sindhu Kashyap | தமிழில்: சைபர் சிம்மன்