தனிப்பட்ட வாழ்க்கையோடு தொழில் முனைவிலும் பார்ட்னர்களாக சிறப்பிக்கும் தம்பதிகள்!

தங்களது தொழில்முனைவுக் கனவுகளுக்காக அடுக்குமாடி குடியிருப்பை விற்பது, வசதியான பணியை விட்டு விலகுவது என இந்தத் தம்பதிகள் ஒருவர் மற்றவரின் தொழில்முனைவு ஆர்வத்திற்குத் துணைபோயினர்.

0

வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் ஒத்திசைந்து வாழ்வதே திருமணம் என்பது பொதுவான கருத்தாகும். இது பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கும் பொருந்தும் அல்லவா? இன்றைய நவீன வாழ்க்கையானது பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிடையே ஒரு தடுப்புச் சுவரை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஸ்டார்ட் அப் இந்தியா பல விதங்களில் இந்தச் சுவரை தகர்த்தெறிந்துவிடுகிறது.

தொழில்முனைவில் தம்பதிகள் ஈடுபடுவது புதிதல்ல. ஈவண்ட்ப்ரைட், ModCloth, பாப்சுகர், ஸ்லைட்ஷேர், ஹவுஸ்ட்ரிப், Knok போன்ற நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதை நாம் அறிவோம். ஆனால் தற்போதைய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் ஒரு புதிய சூழலைக் காணமுடிகிறது. இதில் தம்பதிகள் நிறுவனர்களாக மாறி தினமும் ஒன்றாக இணைந்து பணிபுரிகின்றனர். ஒன்றாகவே வீடு திரும்புகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்க்கைத் துணையாக இருக்கும் தம்பதிகள் வணிகத்திலும் பார்ட்னராக செயல்படும் போக்கானது முதலீட்டாளர்கள் மத்தியில் சாதகமாக அமையவில்லை. ஆனால் தொழில்முனைவில் ஈடுபட்டுள்ள இந்தத் தம்பதிகள் எவ்வாறு தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில்முறை வாழ்க்கையையும் வெற்றிகரமாக நடத்திக்காட்ட முடியும் என்பதை நமக்கு உணர்த்துகின்றனர்.

கேஷ்கரோ (CashKaro)

ரோஹனும் சுவாதி பார்கவாவும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே நல்ல நண்பர்கள். பல நாடுகளில் கேஷ்பேக் பிரிவு வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து இந்தத் தம்பதி முதலில் PouringPound என்கிற நிறுவனத்தைத் துவங்கினர். இந்த முயற்சியை இந்தியாவில் செயல்படுத்துவது குறித்து இருவரும் சிந்தித்தனர். ஆனால் அவர்கள் PouringPound அறிமுகப்படுத்தியபோது மின்வணிகப் பிரிவில் போதுமான முதிர்ச்சி இல்லை. 

இறுதியாக யூகே முதலீட்டாளர்களிடமிருந்து 750000 டாலர் நிதி உயர்த்திய பிறகு இவர்கள் இந்தியாவில் குர்கானைச் சேர்ந்த கேஷ்கரோ (CashKaro) என்கிற நிறுவனத்தை 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தினர். கேஷ்கரோ இதுவரை 4.6 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளதாக க்ரன்ச்பேஸ் தெரிவிக்கிறது.

சம்பக் (Chumbak)

பெங்களூருவைச் சேர்ந்த வடிவமைப்பு நிறுவனமான சம்பக், விவேக் பிரபாகர் மற்றும் சுப்ரா சட்டா தம்பதியால் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் தற்போது அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் பொருட்களை வழங்கி வருகிறது. சமோசா சிங் நிறுவனர்களைப் போலவே 2010-ம் ஆண்டு துவங்கப்பட்ட இவர்களது நிறுவனத்தின் நிதித்தேவைக்காக பெங்களூருவில் இருந்த இவர்களது அடுக்குமாடி குடியிருப்பை விற்பனை செய்தனர். இந்திய தீம்களை அடிப்படையாகக் கொண்டு நினைவுப் பொருட்களை வழங்கத் துவங்கினர்.

விரைவில் மொபைல் கேஸ், நகை பெட்டிகள், லேப்டாப் ஸ்லீவ்ஸ், சமையலறை பொருட்கள் என பல்வேறு பொருட்களுடன் விரிவடைந்தனர். கடந்த நவம்பர் மாதம் இந்நிறுவனம் கஜா கேப்பிடலின் நிதிச்சுற்று வாயிலாக 85 கோடி ரூபாய் நிதி உயர்த்தியதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை 28.9 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளதாக க்ரன்ச்பேஸ் தெரிவிக்கிறது. 

சமோசா சிங்

சிக்கர் சிங் 2009-ம் ஆண்டு பயோகான் (Biocon) நிறுவனத்தில் விஞ்ஞானியாக சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து நிதியை திருமணம் செய்துகொண்டார். இந்திய நொறுக்குத் தீனி வகையில் தலைசிறந்ததாக கருதப்படும் சமோசாக்கள் சார்ந்த வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்பது குறித்த உரையாடல்கள் எப்போதும் இவரது வீட்டில் இடம்பெற்றிருந்தது. பெங்களூருவில் இவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த வீட்டில் ஒரே ஒரு நாள் மட்டுமே இவர்கள் தங்கினார்கள். அடுத்த நாளே பெங்களூருவைச் சேர்ந்த சமோசா ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்வதற்காக அந்தக் குடியிருப்பை விற்றுவிட்டனர். 

தற்போது இவர்களது நிறுவனமான சமோசா சிங் நிறுவனமானது நாள் ஒன்றிற்கு 10,000 சமோசாக்களை தயாரிக்கும் அளவிற்கு உயர்தர தானியங்கி சமையலறையுடன் இயங்கி வருவதாக யுவர் ஸ்டோரி அறிக்கை தெரிவிக்கிறது.

ஆப்காபெயிண்டர் (AapkaPainter)

பெங்களூருவைச் சேர்ந்த ஆப்காபெயிண்டர் நிறுவனம் வீட்டு உரிமையாளர்களையும் வடிவமைப்பு ஆலோசகர்கள் மற்றும் பெயிண்டர்களையும் ஒன்றிணைக்கிறது. வீடுகளையும் அலுவலகங்களையும் பெயிண்ட் செய்யும் அனுபவத்தை சிக்கலில்லாமல் மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. என்ஐடி முன்னாள் மாணவர் அனுபம் சிங் சௌஹன் மற்றும் என்ஐடி ராய்ப்பூரைச் சேர்ந்த திவ்யா ராகவன் இருவரும் கல்லூரியில் நடைபெற்ற தொழில்துறை பயிற்சி திட்டத்தின்போது சந்தித்துக்கொண்டனர். 

பூனாவில் திவ்யாவின் வீட்டை பெயிண்ட் செய்தபோது அவர் பெரும் சிக்கல்களைச் சந்தித்தார். இந்த அனுபவமே இந்த ஸ்டார்ட் அப் துவங்கிவதற்கான விதையை அனுபமின் மனதில் விதைத்தது. இவ்விருவரும் 2015-ம் ஆண்டு தங்களது தொழில்முனைவுப் பயணத்தைத் துவங்கினர். 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது வணிகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றனர்.

கிக்ஸ்டார்ட் (Gigstart)

மும்பையைச் சேர்ந்த கிக்ஸ்டார்ட் (Gigstart) பார்ட்டி திட்டமிடுபவர்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கை மூலம் மகிழ்விப்பவர்களுக்கான சந்தைப்பகுதியாக செயல்படுகிறது. இந்நிறுவனம் அதித் ஜெயின் மற்றும் மதுலிகா பாண்டே ஆகியோரால் நிறுவப்பட்டது. உணவகங்கள், திரைப்படங்கள், சிறு தூர சுற்றுலா பகுதிகள் போன்றவற்றை மதிப்பிடும் சமூகமான ‘தி வீக்எண்ட் கன்சல்டண்ட்’ (TWC) நிறுவனத்தில் இருவரும் பணியாற்றியபோது சந்தித்துக்கொண்டனர். TWC-க்கான வருவாய் மாதிரியை விவரிப்பதற்கு அதிகம் போராடினார்கள். இருவரும் கிக்ஸ்டார்ட் அறிமுகப்படுத்த தீர்மானித்தனர். 

இந்த ஆன்லைன் சந்தைப்பகுதியானது பொழுதுபோது நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் பார்ட்டி திட்டமிடுபவர்களுக்கும் இடையே வெளிப்படையான இணைப்பு ஏற்பட உதவுகிறது. இத்தகைய சேவை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை உறுதிசெய்ய அனைத்து கலைஞர்களின் தகவல்களும் சரிபார்க்கப்பட்டு மதிப்பிடப்படுவதாகவும் நிறுவனர்கள் தெரிவித்தனர். 16 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 4,000-க்கும் அதிகமான கலைஞர்கள் இணைந்திருப்பதாக கிக்ஸ்டார்ட் தெரிவிக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் இதுவரை 210000 டாலர் நிதி உயர்த்தியிருப்பதாக க்ரன்ச்பேஸ் தெரிவிக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சமீர் ரஞ்சன் | தமிழில் : ஸ்ரீவித்யா