சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஒரு புத்தகக் கோட்டை! 

0

சென்னை ஆர்.ஏ புரத்தில் இருக்கும் கோவிந்தராஜுவின் கராஜுக்குள் நுழையும் போது, ஒவ்வொரு புத்தகப்புழுவுக்கும் பழக்கமான அந்த பூசம் பிடித்த புத்தக வாசம் வீசும்.

அரிதினும் அரிதான புத்தகங்களை தேடிப்படிக்க இது ஒரு அருமையான இடம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு பழமையான புத்தகங்கள் கூட இங்கு கிடைக்கும். புத்தகப் பிரியர்களுக்கு பெரும் விருந்தாக அமைகிறது கோவிந்தராஜூவின் புத்தக களஞ்சியம்.

‘இங்கே நீங்கள் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் பார்க்க முடியும்,’ என நம்பிக்கையாக சிரித்துக் கொண்டே சொல்கிறார் கோவிந்தராஜு.

தற்போது 82 வயதாகியிருக்கும் கோவிந்தராஜூ, கடந்த அறுபது வருடங்களாக புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். தீவிர வாசிப்பாளரான கோவிந்தராஜூவின் அப்பா, அவருக்கு தான் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களை கொடுத்த போதிலிருந்து தான் இந்த வேட்கை உருவானது.

‘இன்று நான் நானாக இருப்பது என் அப்பாவால் மட்டும் தான்’ என்கிறார். ‘ 

என் அப்பா நிறைய புத்தகங்களை படித்து, அவற்றை பாதுகாத்து வைப்பார். காலப் போக்கில் அவர் அதை என்னிடம் கொடுத்த போது நானும் அவற்றை எல்லாம் பாதுகாக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

Image Courtesy: The Indian Express
Image Courtesy: The Indian Express

ஆனால், இளமையில் கோவிந்தராஜு புத்தக விரும்பியாக இருந்திருக்கவில்லை. ‘எனக்கு விளையாட்டில் தான் ஆர்வம் இருந்தது. நிறைய டென்னிஸ் விளையாடினேன். எனக்கு விருப்பமான விளையாட்டுகளில் க்ரிக்கெட்டும் ஒன்று’ எனும் கோவிந்தராஜூவை அவருடைய அப்பா தான் வாசிப்புப் பக்கம் திருப்பியிருக்கிறார்.கோவிந்தராஜுவுக்கும் புத்தகங்கள் மீது மெதுவாக ஆர்வம் உண்டாகத் தொடங்கியது.

கல்லூரி படிப்பை முடித்ததும், அவருக்கு ஒரு வேலை கிடைத்திருக்கிறது. இந்த பொழுதில் தான் அவரது வாசிப்பும் கூட அதிகரித்திருக்கிறது. மெட்ராஸின் வீதிகள் ஒவ்வொன்றிலும் அலைந்து மிகச் சிறப்பான பத்திரிக்கைகளையும், நாவல்களையும் வாங்கியிருக்கிறார்.

‘நான் பார்க்கும் ஒவ்வொரு புத்தகக் கடையில் இருந்தும், எனக்கு புத்தகங்களை விற்க தயாராக இருந்தவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் நான் புத்தகங்களை வாங்கினேன்,’ என்கிறார்.

1970 களில் வெளியான நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிக்கைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை காண்பிக்கிறார். ஒரு காகிதத்தில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் முதல் முறை வெளியான லக்ஸ் விளம்பரத்தை காண்பிக்கிறார். அது 1941 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படி கடந்த காலத்திற்கு சாட்சியமாக நிற்கும் பழங்கால விளம்பரங்களையும், கட்டுரைத் துண்டுகளையும் அவர் சேகரித்து வைத்திருக்கிறார். கவனமாக அவற்றை வெட்டியெடுத்து, லேமினேட் செய்து வைக்கிறார். ஒரு ஸ்டூலின் மீது ‘ந்யூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ்’ தொகுப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

கோவிந்தராஜுவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, மூன்று பார்வையாளர்கள் வருகிறார்கள். கடும் உழைப்பால் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கு நடுவே கவனமாக ஆராய்கிறார்கள். உடனேயே, கோவிந்தராஜு அவர்கள் நிறைய காலமாக பழகிய நண்பர்கள் போல பேசத் தொடங்கிவிடுகிறார்.

பதின்பருவத்தில் இருக்கும் சிறுவன் ஒருவன் என்ன பத்திரிக்கை வாசிக்கலாம் என அறிவுரை கேட்க, அவனுக்கு ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்கிறார். இணைய புத்தகங்கள் வாசிக்க முயற்சி செய்ததுண்டா என கேட்ட போது, ’பெரிதாக இல்லை’ என பதிலளிக்கிறார்.

பிறகு, இணைய புத்தகங்கள் குறித்து பேசும் போது, 

“என்ன வடிவில் புத்தகத்தை வாசிக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. வாசிப்பனுபவம் உண்டாகும் வரைக்கும் நல்லது.தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் தான் இங்கு இணைய-புத்தகங்கள் இருக்கின்றன,” என்கிறார்.

இன்னமும் நிறைய புத்தகங்கள் சேகரிக்க வேண்டுமென்பதே கோவிந்தராஜுவின் ஆசை. ‘ என் புத்தகங்களை மதித்து வாசிப்பவர்களுக்கு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்’ என்கிறார். 9941132756 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம். 

(இக்கட்டுரை மைலாப்பூர் டாக் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையில் வெளியான கட்டுரை.  தற்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது). 

ஆங்கிலத்தில் - மொஹமது ரயான் | தமிழில் - ஸ்னேஹா