மும்பை டூ ஆஸ்கார்: 8 வயது சன்னி பவாரின் அபார நடிப்புப் பயணம்!

0

89-வது அகாடமி அவார்ட்ஸ் இந்த ஆண்டு நிறைவு பெற்றிருந்தாலும் அதில் கலந்து கொண்ட 8 வயது சிறுவன் சன்னி பவாரை பங்கேற்பாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எல்லாரையும் கவர்ந்த இந்திய குழந்தை நடிகர் சன்னி பவார். லயன் என்ற ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கில படத்தில் தேவ் படேல் மற்றும் நிகோல் கிட்மனுடன் நடித்துள்ளார் சன்னி. ஆஸ்கார் விருதுகள் விழாவின் அறிவிப்பாளர் சன்னியை தூக்கிக் கொண்டார். 

சரூ ப்ரெயர்லி என்ற கதாப்பாத்திரத்தில், ஸ்லம்டாக் மில்லினியர் படப்புகழ் தேவ் படேல் நடித்த லயன் படத்தில் அவரின் குழந்தைப் பருவ வேடத்தில் நடத்திருக்கிறார் சன்னி. ஆஸ்கார் மேடையில் தேவ் படேல் உடன் வந்தார் சன்னி. ஒரு குழந்தை தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து படும் கஷ்டத்தையும், பின்னர் அவனை ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் எப்படி தத்தெடுத்து வளர்க்கிறார்கள் என்பது லயன் படம் ஆகும். வளர்ந்து பெரியவனான உடன் அவன் கூகிள் எர்த் உதவியுடன் தன் பெற்றோர்களை இந்தியாவில் தேடுவதே கதையாகும். 

சன்னிக்கு ஹிந்தி மட்டுமே பேசத் தெரிந்ததால், போனடிக்ஸ் மூலம் ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டுள்ளான். ஆரம்பத்தில், இயக்குனர் கார்த் கேவிஸ், சன்னியிடம் பேசி நடிக்கவைக்க சிரமப்பட்டுள்ளார், ஆனால் பின்னர் அவனின் கடின உழைப்பால் அவன் நன்றாக நடித்துவிட்டான். இயக்குனர் கார்த் மற்றும் நடிகர்களை தேர்வு செய்யும் க்ரிஸ்டி, சுமார் 2000 டேப்புகள் அடங்கிய சிறுவர்களின் நடிப்பு மாதிரியில் இருந்து சன்னியை தேர்வு செய்தனர். ஒரு பேட்டியில் இதைப் பற்றி பேசிய கார்த்,

“நான் பார்த்த குழந்தைகளில் யார் என் மனதை தொட்டு, என்னுடன் நெருக்கமாகிறார்கள் என்று பார்த்தேன். பல நாட்கள் தேடலில், ஒரு நாள் சன்னி என்னை என் அறையில் வந்து சந்தித்த போது, இவன் தான் நான் தேடிக் கொண்டிருந்த பையன் என்று உடனே என் மனதில் பட்டுவிட்டது...” என்றார். 

டெய்லி டெலிகிராப் பேட்டியில் பேசிய தேவ் படேல், 

“அவன் எங்கள் படத்தின் குட்டி தேவன். அவன் இதற்கு முன் ப்ளேனில் சென்றதில்லை, ஹாலிவுட் படம் ஒன்றைக் கூட பார்த்ததில்லை, ஆனால் இத்தனை பெரிய படத்தில் அவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளான். அவனின் வெகுளியான நடிப்பைக் காண அழகாக, அற்புதமாக இருக்கும். அவனும் அதை உற்சாகத்தோடு செய்தான்.” 

சன்னி நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாலும், அவனுக்கு ஐபிஎஸ் ஆகவேண்டும் என்ற கனவும் உள்ளது. ஐபிஎஸ் முடித்துவிட்டு மும்பை காவல்துறையில் சேர அவனுக்கு விருப்பமாம். அவனுக்கு WWE என்றால் ரொம்ப பிடிப்பதால் அந்த போட்டியை காணப் போகிறார். தூங்கவும், சாப்பிடவும் ரொம்ப இஷ்டம் என்று சுட்டிப் பையன் சன்னி கூறியுள்ளான்.

8 வயதாகும் சன்னிக்கு ஹ்ரித்திக் ரோஷனின் க்ருஷ் படம் என்றால் உயிர். அவரைப் போல ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க ஆசையாம்.  அவர் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறாரோ இல்லையோ இப்பொழுதே ஆஸ்கார் விருதின் சிவப்பு கம்பள வரவேற்போடு, மேடை வரை வந்து இந்திய குட்டி ஹீரோ ஆகிவிட்டார் சன்னி. 

கட்டுரை: Think Change India