பொருட்காட்சி கருவியாகிய உயிர் காக்கும் கண்டுபிடிப்புகளின் அங்கீகாரத்திற்குக் காத்திருக்கும் தமிழர்!

0

இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் வாழ்வில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். சிலர் தங்கள் கனவை அடைய தங்களுக்கு ஏற்ற பாதையை தேர்ந்தெடுப்பர் ஆனால் பலர் சூழ்நிலை காராணமாக வாழ்க்கை எடுத்து செல்லும் வழியில் செல்வர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் வசிக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த செங்குட்டுவன், தனக்குப் பிடித்த பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து உயிர் காக்கும் பல புதிய கருவிகள் கண்டுபிடிதுள்ளார். ஐ.டி.ஐ. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடியோ, டிவி தொழில்நுட்பத்தில் டிப்ளோமா முடித்த இவர் தன் சொந்த செலவில் இக்கருவிகளை கண்டுபிடித்துள்ளார். சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் மூன்று உயிர் காக்கும் கருவிகளை கண்டுபிடித்தும், உரிய அங்கீகாரமும், அரசின் ஆதரவும் இல்லாததால் அவை தற்போது பயன்படுத்தப்படாமல் இருப்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். 

2014-ல், 26 பள்ளி குழைந்தைகள் ஏற்றி சென்ற பேருந்து ஆள் இல்லா ரயில் பாதையை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தனர். இந்த துயர சம்பவத்துக்கு பிறகு செங்குட்டுவன் ஆள் இல்லா ரயில் பாதையில் ஏதேனும் எச்சரிக்கை வசதி செய்ய முடிவு செய்தார். ரேடியோ அதிர்வெண் மூலம் ரயில் வருவதை 10கிமீ முன்னே ரயில் கடக்கும் பாதையில் ஒலி அல்லது ஒளி மூலம் எச்சரிக்கை செய்யும் ஒரு அமைப்பை கண்டுபிடித்தார்.

"இது போன்ற துயர சம்பவம் வருங்காலத்தில் நடக்கக் கூடாது என்பதற்காகவே இதை கண்டு பிடித்தேன். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காதலால் நடைமுறைப்படுத்த முடியவில்லை," என வருந்துகிறார் செங்குட்டுவன்.

செங்குட்டுவனின் இந்த கண்டுபிடிப்பு நல்ல வரவேற்பை கொடுத்தது. பல ரயில்வே அதிகாரிகள் பார்த்து சென்றனர், ஆனால் அரசின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் பண வசதி இல்லாததாலும் அடுத்த கட்டத்துக்கு இத்திட்டத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை.

அதே ஆண்டில் ஆந்திர பிரதேஷில் நிலத்தடி எரிவாயு கசிந்து GAIL குழாய் வெடித்து நகரம் என்னும் கிராமமே எரிந்தது, 20-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். எரிவாயு கசிவை கண்டறிய சூரிய ஆற்றலில் செயல்படும் எச்சரிக்கை அமைப்பை கண்டு பிடித்தார்.

“இது போன்ற கண்டுபிடிப்பு மக்கள் உயிரை காக்கும், எந்த நாட்டிலும் இது போன்ற கண்டுபிடிப்பு இன்னும் வர வில்லை. பல தேசிய செய்தித்தாளும் இதை அங்கீகரித்தனர். அரசு நிதி உதவி கிடைத்தால் இதை நடைமுறைப்படுத்தலாம்,” என்கிறார்.

இது போன்று எ.டி.எம் திருட்டை கட்டுப்படுத்தவும் ஒரு கருவியைக் கண்டறிந்தார். ஆனால் திறமை இருந்த போதிலும் போதிய பண பலமும் செல்வாக்கும் இல்லாத காரணத்தினால் இவை யாவும் பொருட்காட்சியில் வைக்கும் கண்டுபிடிப்புகளாகவே இருந்துவிட்டன.

“ஒரே வருடத்தில் மக்களின் நலனுக்காக 3 புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினேன். அதிகம் போராடியும் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியவில்லை. அதனால் என் முயற்சிகளை கைவிட்டேன். பொதியே வசதிகள் இருந்தால் இன்னும் நிறைய செய்வேன்” என்றார் செங்குட்டுவன்.

தற்போது சுயமாக சி.சி.டி.வி சரிபார்த்தல் போன்ற தொழில்நுட்ப வேலைகளை செய்து, தன் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம் வருங்காலத்தில் ஒரு நாள் வரும் என காத்திருக்கிறார் செங்குட்டுவன்.