100 கோடி ரூபாய் மாத வருவாயுடன் லாபலரமாக மாறிய பைஜுஸ் 

0

பெங்களூருவைச்சேர்ந்த கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜுஸ், கடந்த மாதம் ரூ.100 கோடி மாந்தந்திர வருவாயை கடந்ததை அடுத்து லாபகரமாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளது. 

ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் மாதாந்திர அடிப்படையில் 20 சதவீத வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை ஏற்கனவே ரூ.1,300 கோடி என்பதில் இருந்து ரூ.1,400 கோடியாக மாற்றி அமைத்துள்ளது.
பைஜு நிறுவனர் பைஜு ரவீந்தரன் 
பைஜு நிறுவனர் பைஜு ரவீந்தரன் 

டென்செண்ட், சேன் ஜக்கர்பர்க் பவுண்டேஷன், செக்கோஷியா கேபிடல், லைட்ஸ்பீட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து நிறுவனம் 244 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. ஆர்.ஓ.சி தகவல் படி 2017 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.247 கோடியாகவும் நஷ்டம் ரூ.59 கோடியாகவும் இருந்தது.

இந்தியாவில் உள்ள 15 யூனிகார்ன் ஸ்டார்ட் அப்களில் இன்மொபி மட்டுமே லாபகரமாக இயங்குகிறது. அண்மையில், அமெரிக்காவின் வால்மார்ட்டால் வாங்கப்பட்ட நாட்டின் பிரபலமான யூனிகார்ன் நிறுவனமான ஃபிளிப்கார்ட் இன்னமும் லாபகரமாக மாறவில்லை.

20 மில்லியன் பதிவு செய்த மாணவர்கள் மற்றும் 1.26 மில்லியன் வருடாந்திர கட்டண உறுப்பினர்களை பெற்றிருப்பதாக பைஜூஸ் தெரிவிக்கிறது. மாதந்தோறும் 1.5 மில்லியன் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். 2015 ல் துவங்கியது முதல் நிறுவனம் 100 சதவீத ஆண்டு வளர்ச்சியை கண்டு வருகிறது. 85 சதவீத உறுப்பினர்கள் பதிவை புதுப்பிப்பது இதற்கு முக்கியக் காரணம்.

பைஜுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் அந்த நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பைஜு ரவீந்தரன், 

“கடந்த ஆண்டு தனிப்பட்ட தன்மை கொண்ட செயலி வடிவத்தை அறிமுகம் செய்தது மாணவர்களின் ஈடுபாடு மற்றும் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் எங்கள் சேவையை புரிந்து கொண்டு நம்புகின்றனர், தங்களுக்கு மிகுந்த பலனை அளிப்பதாக கருதுகின்றனர். இது அவர்களுக்காக தனித்துவம் வாய்ந்த, புதுமையான கற்றல் திட்டங்களை தொடர்ந்து உருவாக்க ஊக்குவிக்கிறது,” என குறிப்பிட்டிருந்தார்.

சந்தையில் முன்னணி

கே.பி.எம்.ஜி மற்றும் கூகுள் சார்பிலான அறிக்கை கல்வி தொழில்நுட்ப சந்தை 2021ல் 9.6 மில்லியன் பயனாளிகளுடன் 1.96 பில்லியன் டாலரை தொடும் என தெரிவிக்கிறது. 2016ல் இது, 1.6 மில்லியன் பயனாளிகளுடன் 247 மில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவில் அப்கிரேட் (UpGrad), சிம்ப்ளிலர்ன் (Simplilearn ) உடாசிட்டி (Udacity) மற்றும் கிரேட் லர்னிங் (Great Learning) உள்ளிட்ட நிறுவனங்களுடன் இந்தியாவில் கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் அதிகம் இருந்தாலும், பைஜுஸ் மட்டுமே பில்லியன் டாலர் மதிப்பீடு பெற்றுள்ளது.

பைஜுஸ் டீப், 60,000 கருத்தாக்கங்கள், உறவுகள் கொண்ட நாலெட்ஜ் கிராப் தொழில்நுட்ப உதவியுடன் ஒவ்வொரு மாணவர்களுக்குமான தனிப்பட்ட கற்றலை வழங்குகிறது. இவற்றின் அடிப்படையில் வீடியோக்கள், கேள்விகள், குறைகளுக்கான அணுகுமுறை, வினாடி வினாக்கள், கேள்வி அட்டைகள் உள்ளிட்ட அம்சங்கள் அளிக்கப்படுகின்றன.

1.4 மில்லியன் பள்ளிகள் மற்றும் 227 மில்லியன் மாணவர்களுடன் இந்தியா உலக கல்வி அமைப்பில் முக்கிய இடம் வகிப்பதாக இந்தியா பிராண்ட் இக்விட்டி பவுண்டேஷன் தெரிவிக்கிறது. இணைய கற்றலுக்காக கட்டணம் செலுத்த தயாராக இருக்கும், அதிகரிக்கும் பயனாளிகள் காரணமாக பைஜுஸ் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.

ஆறு முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான முதன்மை செயலி தவிர, கடந்த ஆண்டில் பைஜுஸ் 4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கான செயலி மற்றும் பெற்றோருக்கான செயலியை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு இறுதியில் பைஜுஸ் 1 மற்றும் 3 வகுப்பு மாணவர்களுக்கான செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் கேட், ஐ.ஏ.எஸ், ஜி.எம்.ஏ.டி உள்ளிட்ட தேர்வுகளுக்கும் வழிகாட்டி வருகிறது.

கடந்த ஆண்டு, பைஜுஸ், பெங்களூருவைச்சேர்ந்த கல்வி ஸ்டார்ட் அப்பான வித்யார்தாவை கையகப்படுத்தியது. இந்தியாவில் 1998ல் தனது பிரிவை துவக்கிய சர்வதேச நிறுவனமான பியர்சனிடம் இருந்து டியூட்டர்விஸ்டா மற்றும் எடுரைட் ஆகிய நிறுவனங்களையும் கையகப்படுத்தியது. (அமெரிக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணையம் மூலம் கல்வி வழங்கிய டியூட்டர் விஸ்டாவை 2011 ல் பியர்சன் கையகப்படுத்தியது). இந்த ஒப்பந்தம் சர்வதேச வீச்சை மனதில்கொண்டு செய்யப்பட்டாலும் பைஜுஸ் இன்னமும் இந்தியாவுக்கு வெளியே விரிவாக்கம் செய்யவில்லை.

ஆங்கிலத்தில்: ஆதிரா ஏ.நாயர் /தமிழில்; சைபர்சிம்மன்

Related Stories

Stories by YS TEAM TAMIL