பெண்கள் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு சுயதொழில் வாய்ப்பை வழங்கும் ’பஸ்தர் ஹனி’ 

1

சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதியில் மதில்சுவர் எழுப்பப்பட்ட பசுமையான இடம் ஒன்றில் மரத்தினாலான கூடை போன்ற பல பெட்டிகள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது ’பஸ்தர் ஹனி’ (Bastar Honey) என்கிற இயற்கை தேன் விற்பனை பிராண்டின் உற்பத்தி இடமாகும். 

நிலையான தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த இடத்தில் இன்று பஸ்தர் ஹனி இந்தப் பகுதியின் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் 15,000-20,000-க்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் நிதி சார்ந்த நிலைத்தன்மையை வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் பழங்குடியினர்.

”பாரம்பரியமாகவே காட்டுப்பகுதிகளில் தேனை அறுவடை செய்துமுடித்த பிறகு கூட்டை எரித்துவிடுவது வழக்கம். இதனால் தேனீக்கள் கொல்லப்பட்டன. சுமார் ஆறாண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் (CGCOST) உதவியுடன் தேனீக்களை கொல்வதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து நாங்கள் தேன் வேட்டையாடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கத் துவங்கினோம். மேலும் எந்த வகையான பயிர்கள் மற்றும் தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்கும் விளைச்சலுக்கும் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து ஆராய CGCOST உதவியது,” என்றார் தேனீ வளர்ப்பவரான ராம் நரேந்திரா.

தந்தேவாடா பகுதியின் மாவட்ட ஆட்சியர் சௌரப் குமார் சிங் ’பஸ்தர் ஹனி’ முறையாக நிறுவப்படுவதிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதிலும் முக்கிய பங்கு வகித்தார். உள்ளூர் மக்களுக்கு தேனீ வளர்ப்பின் நுணுக்கங்களில் பயிற்சியளிப்பதற்காக புனேவில் உள்ள மத்திய தேனீ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்று இந்த சமூகம் 450-க்கும் அதிகமான தேனீ வளர்ப்புப் பெட்டிகளைக் கையாள்கிறது.

தேனீக்கள் சமூகத்தின் அடையாளமாக இருக்கையில் தேனீ வளர்ப்பு செயல்முறை என்பது அதன் நீட்டிப்பாகும். தந்தேவாடா பகுதியைச் சேர்ந்த 200 பெண்கள், 800 குடும்பங்கள் மற்றும் பிஜாபூரைச் சேர்ந்த 150 குடும்பங்கள் ஆகியவை இது தொடர்பான ஒட்டுமொத்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் பெட்டிகளை நிர்வகிப்பது, தேனை பிரித்தெடுப்பது, பேக்கிங் பணிகளை கையாள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். பஸ்தர் ஹனி குழுவினர் இந்த நடவடிக்கைகளில் பயிற்சியளித்து நிர்வகிக்கத் தேவையான பெட்டிகளை வழங்குவார்கள்.

ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு ராணி தேனீ மற்றும் 10,000 பணித் தேனீக்கள் இருக்கும். தேனீக்கள் உள்ளூர் செரானா இண்டிகா வகையைச் சேர்ந்ததாகும். 

”ஒரு வருடத்தில் ஒரு பெட்டியில் இருந்து 10 முதல் 20 கிலோ விளைச்சல் கிடைக்கும். மொத்தமாக ஒரு வருடத்தில் நான்கு முதல் ஐந்து டன் விளைச்சல் கிடைக்கும்,” என்றார் ராம். 

தேனீ வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிக்கு ஒரு கிலோ தேனுக்கு 300 ரூபாய் கொடுக்கப்படும். சமீபத்தில் பஸ்தர் ஹனி குழுவினர் இத்தாலிய மெலிஃபெரா வகை தேனீக்களை ஆராயத் துவங்கினர். இது அதிக தேன் விளைச்சலை வழங்கக்கூடியது.

”இந்த வகை தேனீக்களைக் கொண்ட ஒரு பெட்டி ஆண்டு ஒன்றிற்கு 25-35 கிலோ தேனைக் கொடுக்கும். ஆனால் அதிக மகரந்தம் தேவைப்படும். எனவே இந்த தேனீக்கள் செழிப்பாக வளர்வதற்கு உகந்த சூழலை ஆராய CGCOST உதவுகிறது,” என்றார் ராம். 

இதனிடையில் தேனீ வளர்ச்சியை கண்காணிக்கும் காதி கிராமோத்யோக், 78 பழங்குடி விவசாயக் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் மெலிஃபெரா தேனீக்கள் அடங்கிய 10 பெட்டிகள் நிர்வகிப்பதற்காக வழங்கியுள்ளது.

தற்போது விளைச்சல்கள் விநியோகிஸ்தர்கள் வாயிலாக பஸ்தர் ஹனி குழுவினரால் சந்தைப்படுத்தப்படுகிறது. அத்துடன் ஆன்லைன் வாயிலாகவும் கிடைக்கிறது.

மாவட்ட நிர்வாகத்திடமிருந்து தேவையான ஆதரவு கிடைப்பதாக ராம் தெரிவித்தார். இந்த நிர்வாகம் புதிய பெட்டி அமைப்பதற்கான 80 சதவீத கட்டணத்திற்கு பொறுப்பேற்கிறது. இதன் விலை சுமார் 16,000 ரூபாய் ஆகும். இவர்களது பணிக்கான வாய்ப்பு வருங்காலத்தில் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ராம் தெரிவித்தார்.

”இந்த பெட்டிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு முழுமையான செயல்முறைகளில் பயிற்சியளிக்கப்படும். விளைச்சல்களை பஸ்தர் ஹனி வாங்கிக்கொண்டு சந்தைப்படுத்த உதவும். இரண்டாண்டுகள் இதே முறையில் செயல்படுத்தப்படும். அதன் பிறகு பெட்டிகளின் உரிமை அதை நிர்வகிக்கும் நபர்களுக்கு மாற்றப்படும்,” என்றார் ராம்.

”குறைவான விளைச்சல் உள்ளபோதும் இதைத் தொடர் வருமான வாய்ப்பாக மக்கள் பார்ப்பதற்கு ஊக்குவிக்க விரும்புகிறேன்,” என்றார் ராம்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்த மாநிலத்திற்கு வந்திருந்தபோது பஸ்தர் ஹனியை ருசித்துப் பார்த்து பாராட்டினார். சிறிதளவு வாங்கிச் சென்றார். மற்றொரு பிரபலமான நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கந்த் நேரடியாக பெட்டிகளில் இருந்து தேனை ருசித்துப் பார்த்தார். தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயிகள் உருவாக்கிய தேன் கேக்கையும் சாப்பிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் டாக்டர் ராமன் சிங் ஒவ்வொரு முறை தந்தேவாடா வரும்போதும் சிறிதளவு தேனை வாங்கிச் செல்வார் என்றார் ராம்.

ஆங்கில கட்டுரையாளர் : யுவர் ஸ்டோரி குழு | தமிழில் : ஸ்ரீவித்யா