பட்ஜெட் 2016: தொழில்முனைவுக்கு ஊக்கம் தரும் அம்சங்கள்!

0

அருண் ஜெட்லி தாக்கல் செய்த 2016 -17 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் வளர்ச்சி மற்றும் கிராமப்புறத்துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார். வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாவிட்டாலும், சிறிய அளவிலான சலுகைகளை அறிவித்திருக்கிறார். கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை பட்ஜெட்டின் 9 தூண்களாக குறிப்பிட்ட ஜெட்லி, தொழில்முனைவு மற்றும் திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்களையும் அறிவித்திருக்கிறார்.

தொழில்துறை மற்றும் ஸ்டார்ட் அப் நோக்கில் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* ஸ்டார்ட் அப் நிறுவங்களை பொருத்தவரை ஒரே நாளில் நிறுவனம் பதிவு செய்ய அனுமதி மற்றும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரி விலக்கு ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த இரண்டுமே பிரதமர் நரேந்திர மோடியால் ஸ்டார்ட் அப் இந்தியா திட்ட நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டவை.

* தொழில்முனைவை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்டாண்ட் அப் இந்தியா என சொல்லப்படும் எழுமின் இந்தியா திட்டத்தின் கீழ் பழங்குடியினர் மற்றும் பெண்கள் தொழில் தொடங்க ரூ. 500 கோடி ஒதுக்கப்படும். சட்டமேதை அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஒவ்வொரு வங்கி கிளையும் இந்த தொழில்முனைவோர் நலனுக்கான இரண்டு திட்டங்களை கொண்டிருக்கும் என்று ஜெட்லி அறிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க மையம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினரை வேலை தேடுபவர்களில் இருந்து வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற்ற ஊக்கம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* திறன் வளர்ச்சிக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் நாட்டில் 1500 பல்திறன் வளர்ச்சி பயிற்சி மையங்களை அமைக்க ரூ.1700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திறன் வளர்ச்சிக்கான ஆன்லைன் பாடதிட்டமும் அமல் செய்யப்பட உள்ளன. மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* தொழில்முனைவு கல்வி பயிற்சி 2200 கல்லூர்கள், 300 பள்ளிகள் மற்றும் 50 ஐடிஐ மையங்களில் அளிக்கப்படும்.

* விவசாயிகளுக்கு இணையம் மூலம் கொள்முதல் வளர்ச்சி அமல் செய்யப்படும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய நில ஆவணங்கள் நவீனமயமாக்கல். 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு டிஜிட்டல் கல்வி அளிக்க திட்டம்.

* பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக ரூ.25,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* உணவு பதப்படுத்தும், தயாரிக்கும் தொழிலில் அந்திய நேரடி முதலீட்டை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திவாலாகும் நிறுவனங்கள் தொடர்பான சட்டமும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

வரிச் சலுகை முதல் ஆதார் வரை: சாமானியர்களுக்கான பட்ஜெட் அம்சங்கள்