புத்தக விரும்பி உருவாக்கிய தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகம்!

75 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய நூலகமான ‘ஞானாலயா’, பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை பாரம்பரிய தமிழ் புத்தகங்களின் சேமிப்பு!

0

இவ்வுலகில் வாழும் நம் அனைவருக்கும் ஏதோ ஒரு இடத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தோன்றி இருக்கும் ஆனால் தனி ஒருவனால் இதை செய்ய முடியாது என நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வோம். ஆனால் தனி நபரால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சான்றாக வாழ்கின்றனர் கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியர்.

கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியர்
கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியர்

புதுகோட்டை, திருக்கோகர்ணம் ஊரில் அமைந்திருக்கிறது இந்த தம்பதி நடத்தி வரும் ’ஞானாலயா’ நூலகம். இதுவே தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகம் ஆகும். தங்களது வீட்டின் பக்கத்திலேயே கம்பீரமாக ஞானலாயவிற்காக ஒரு 1,800 சதுர அடியில் பெரிய கட்டிடத்தை எழுப்பியுள்ளனர்.

“என் தந்தை ஒரு புத்தக வெறியர், அவர் ஆயுசு முடியும் வரை புத்தகத்தை படித்தார், அவரிடம் இருந்தே எனக்கும் புத்தகத்தின் மீது பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. இந்த புத்தகக் காதலால் 1959-ல் நூறு புத்தகங்களுடன் நூலகத்தை துவங்கினேன்,”

என பேச துவங்குகிறார் இந்த நூலகத்தின் நிறுவனர் 75 வயதான கிருஷ்ணமூர்த்தி. நூறு புத்தகங்களுடன் துவங்கிய இந்நூலகத்தில் தற்போது லட்சத்திற்கும் மேலான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சிற்றிதழ்கள் பொக்கிஷமாக வைக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற ஆசிரியர்களான இவர்கள் தங்கள் சொந்த செலவில் புத்தகங்களை சேகரித்து அதற்கான கட்டடம் அமைத்து பேணி வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

1959-ல் தொடங்கப்பட்டதால் பாரம்பரியமிக்க எங்கும் காணாத பழங்கால தமிழ் புத்தகங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது, 1578-ல் முதல் முதலில் வெளிவந்த தமிழ் புத்தகம் - தம்பிரான் வணக்கம். பேரறிஞர் அண்ணாவின் – மக்கள் கரமும் மன்னன் சிரமும் (1968), நிலைக்கண்ணாடியில் வலது இடமாக மெழுகில் எழுதி அச்சிட்ட டி.ஜி.லத்தீன் தமிழ் அகராதி (1867) போன்ற அறிய வகை புத்தகங்களை இங்கு காணலாம்.

“என் தந்தையின் புத்தகம், பின்பு என் காலத்தில் நான் சேகரித்த புத்தகம் மட்டுமல்லாமல் திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோயில், சென்னை மூர் மார்கெட் என பல இடங்களுக்கு சென்று பல பழைய புத்தகங்களை வாங்கி சேகரித்துள்ளேன்,” என்கிறார் இவர்

இங்கு புத்தகம் மட்டும் அல்லாமல் பாரதிதாசன் கவிதைகள் வெளிவந்த ஆத்மசக்தி இதழின் பதிப்பு, பெரியாரின் குடியரசு (1925-1931), விடுதலை (1947-1963) இதழ்கள் உள்ளது. மேலும் பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதி, பாரதிதாசன், ராஜாஜி போன்றவர்கள் எழுதிய கடித தொகுப்பும் இங்கு உள்ளது.

பல அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், ஞானாலயாவை பார்வையிட்டு நேரம் செலவழித்து சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி தி.முக செயல் தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தன் பிறந்தநாளுக்கு பரிசாக வந்த 370 புத்தகங்களை நன்கொடையாக அளித்துள்ளனர்.

தி.முக தலைவர் ஸ்டாலின் ஞானாலயாவில்
தி.முக தலைவர் ஸ்டாலின் ஞானாலயாவில்
“ஒரு அரசு ஆசரியர் ஆன நான் இதுவரை ஐந்து மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். நான் செல்லும் இடம் எல்லாம் ஒரு லாரி முழுவதும் புத்தகங்களை சுமந்து செல்வேன்,” என நினைவு கூறுகிறார் இவர்.

ஒய்வு பெற்ற இந்த ஆசிரியர்களின் நூலகத்தை பராமரிக்க ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் வரை செலவு செய்கிறார்கள். தங்களுக்கு வரும் பென்ஷன் பணத்தை இதற்காக செலவிடுகிறார்கள்.

இந்த நூலகத்திற்கு உலகளவில் பலர் வந்து செல்கின்றனர். ரஷ்யா, பிரான்ஸ் என அயல்நாட்டில் இருந்து பலர் வந்து குவிகின்றனர். இதுவரை பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த நூலகம் உதவியுள்ளது.

“இந்த ஸ்மார்ட்போன் காலத்தில் இளைஞர்கள் டிஜிட்டல் உலகில் மூழ்கிக் கிடக்கின்றனர். அதை குறைத்துக்கொண்டு நூலக பக்கம் வந்து பாரம்பரிய கலை, கலாசாரத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும்,”

என ஒரு வேண்டுகோள் விடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

அறிவு பெட்டகமான புத்தகங்களை சேமித்து நம் பாரம்பரிய தொகுப்புகளை பொக்கிஷமாய் பாதுகாத்து வருகின்றனர் இந்த தம்பதியர். இது பல தலைமுறையினருக்கு பல வகையில் உதவக் கூடும் நூல் ஆலயம். இதை அரசு அல்லது பல்கலைகழகங்கள் எடுத்து நடத்த வேண்டும் என இவர் வேண்டுகோள் விடுக்கிறார், மேலும் இந்த பாரம்பரிய நூல்களை டிஜிட்டல் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டுள்ளார்.