ஷாருக்கானின் ’ரேஸ்’ சர்ச்சை – இது வெறும் திரைவிமர்சனம் அல்ல...

0

இதை எப்படி விவரிப்பது? ஒரு இனவாத தலைவரைப் பற்றிய அவமரியாதையான கருத்துக்களை வெளிப்படுத்துகிறதா அல்லது விரும்பத்தகாத ஒரு நபரை எள்ளி நகையாடுதலுக்கு ஒப்பானதா அல்லது வழக்கிலில்லாத ஒரு சித்தாந்தத்தைக் குறித்து ஓலமிடப்படுகிறதா? இரண்டு திரைப்படங்களை ஒப்பிடுதல் என்பது புதிதான விஷயமல்ல. சொல்லப்போனால் அது விமர்சகர்களின் படைபாற்றலை வெளிப்படுத்துகிறது. 

திரைப்பட உலகம் குறித்த புரிதலுக்கு உதவுகிறது. பார்வையாளர்களுக்கு பல புதிய கோணங்களை வழங்குகிறது. இந்தப் பயிற்சியானது படைப்பாற்றல் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு புதிய பகுதியை உருவாக்குகிறது. கட்டுக்கடங்காத புதிய ஆற்றலை வெளிப்படுத்தி பார்வையை விரிவடையச் செய்கிறது. சிந்தனையில் ஒரு புதிய பகுதியை கைப்பற்றி புதிய உணர்வு நிலைக்கு இட்டுச் செல்கிறது. துரதிர்ஷ்ட்டவசமாக இன்றைய காலகட்டத்தில் படைப்பாற்றல் என்பது நிந்தனைக்குறிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப் காலத்திலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள்களுக்கு எதிராக கேள்வியெழுப்பி மாறான கருத்துக்களை வெளிப்படுத்தும் காலத்திலும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புதிய காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால் கைலாஷ் விஜய்வர்கியா அவர்களின் கொச்சையான உச்சரிப்புகள் எனக்கு வியப்பை அளிக்கவில்லை. 

ஷாருக்கானின் ‘ரேஸ்’ திரைப்படத்தை தவிர்க்குமாறும் ஹ்ருதிக் ரோஷனின் ‘காபில்’ திரைப்படத்தை உயர்த்தியும் பேசியுள்ளார். முதலில் இது தீங்கற்றது போலத்தான் தோன்றுகிறது. ஒரு திரைப்படம் குறித்த அவரது உள்ளுணர்வை வெளிப்படுத்துதைப் போலவே உள்ளது. ஆனால் கைலாஷ் விஜய்வர்கியாவின் ட்விட்டர் பதிவு அவ்வளவு சாதாரணமானதாக இல்லை. அவர் எழுதியதை மறுபடி ஒருமுறை படியுங்கள். 

"ரேஸ்’ நாட்டிற்கு தேவையானவர் அல்ல, ஒரு பயனும் இல்லை. ’காபில்’ ஒரு தேசபக்தர். அவரை ஆதரிக்கவேண்டும்.” கைலாஷ் விஜய்வர்கியா

ஒரு சாதாரண மனிதர் அல்ல. ஆளும் கட்சியான பிஜேபியின் தேசிய பொதுச் செயலாளர். சர்ச்சைக்குரிய தலைப்புச் செய்தியையே விரும்பி துணிந்து வெளியிடுவார். இவரது நடவடிக்கைகள் குறித்து கட்சி ஏற்கெனவே பல விமர்சனங்கள் செய்தபோதிலும் அவர் அது குறித்த கவலையின்றி புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார். ஆனால் அப்பட்டமானது, வகுப்புவாதம் சார்ந்தது, வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது, தவறானது, குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தது போன்ற விமர்சனங்கள் மட்டும் மாறாது.

’ரேஸ்’ ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். ஒரு மாஃபியா டான் குறித்த கதை. ஷாருக்கான் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘காபில்’ ஒரு காதல் கதை. ஒரு பார்வையற்ற ஜோடியின் பழிவாங்கும் கதை. ஹ்ருதிக் முக்கிய கதாநாயகன். ஜனவரி மாதம் 25-ம் தேதியில் இரண்டு திரைப்படங்களும் ஒன்றாக வெளியாக இருந்தது ஒரு தற்செயலான விஷயமாகவும் இருக்கலாம். ஆனால் ஷாருக்கானோ ஹ்ருதிக்கோ ஒருவரைக் குறித்து மற்றவர் எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை. அவர்களது திரைப்படங்கள் குறித்தும் ஒருவருக்கொருவர் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் அது சர்ச்சையை உண்டாக்கியிருக்கலாம். அதை மார்க்கெட்டிங் உத்தி என்றும் வகைப்படுத்தியிருக்கலாம். 

இருவரும் உண்மையில் ஒருவர் அடுத்தவர் மீது மரியாதை கொண்டுள்ளனர். பொது விஷயங்களில் சுமூகமாக உறவையே பகிர்ந்துகொள்கின்றனர். ஆகவே ட்விட்டரைப் பயன்படுத்தி இரண்டு திரைப்படங்களையும் விளம்பரப்படுத்தவேண்டும் என்பதோ ரேஸ் திரைப்படத்தின் வெற்றியை குலைக்கவேண்டும் என்பதோ நோக்கமல்ல. ஹ்ருதிக் யாரையும் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்யத் தூண்டுபவர் அல்ல. இது கைலாஷ் விஜய்வர்கியா சுயமாக உருவாக்கியதாகும்.

சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக இயல்பாகவே பாரபட்சம் காட்டும் அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி வெளிப்படையாகவே இந்துத்துவ சமூகத்தை ஆதரிப்பதால் சிறுபான்மையினருக்கு இரண்டாம் நிலை குடியுரிமையே வழங்கப்படும். சொல்லப் போனால் இவர்களது மூத்த தலைவர்களும் கருத்தியலாளர்களும் சிறுபான்மையினரது குடியுரிமையை மறுத்துவிடலாம் என்றுகூட கோடிட்டு காட்டியுள்ளனர். இவர்களின் கருத்தியல்படி ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியால் இந்தியாவின் பிரிவினையை சரிசெய்யமுடியவில்லை என்றும் நாடு ’பாரதம்’ என்று பிரிந்ததற்கு முஸ்லீம்கள்தான் காரணம் என்றும் விவரித்தது. 

இடைக்கால வரலாற்றின் பாதிப்புகளுக்கும் முஸ்லீம்கள் மீது பழி சுமத்தப்பட்டது. இவர்களது பார்வையில் அரசியல் என்பது சாமுவேல் ஹண்டிங்டனின் வார்த்தைகளுக்கைப் போன்று “நாகரிகங்களின் மோதல்”. இந்திய நாகரிகத்தின் சரிவிற்கும் வீழ்ச்சிக்கும் முதல் மில்லீனியத்தின் பிற்பகுதியில் முஸ்லீம்கள் நுழைந்ததுதான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் விளக்கமளிக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை இந்திய வரலாறு என்பது இந்து மதத்தினரின் வரலாறு. இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அயல்நாட்டவர்கள். உண்மையான இந்தியர்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டிருப்பார்கள். 

இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் இந்தியாவில் வசித்தாலும் வெளிநாட்டவர்கள் என்பதால் அவர்களது விசுவாசம் சந்தேகத்திற்குரியது என்பது வீர் சவார்கரின் கருத்து. இந்த கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் செயல்படுகிறார்கள். இதுதான் சிறுபான்மையினரை இவர்கள் வெறுப்பதற்கு அடிப்படைக் காரணம். நவீனமயமாக்கல், மதச்சார்பின்மை மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றில் பல முன்னேற்றங்கள் இருந்தபோதும் அவர்களால் முந்தைய காலகட்டத்திலிருந்து வெளிவர முடியவில்லை. பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் மூர்கத்தனமான மதச்சார்புடைய எழுச்சி இந்த மனநிலையை பிரதிபலிக்கிறது. 

கைலாஷ் விஜய்வர்கியா எந்த புதிய எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளாமல் அதே பழைய எண்ணங்களையே பிரதிபலிக்கிறார். அவரது இலக்கு திரைப்படம் அல்ல. அவரது மதத்தின் அடையாளம் காரணமாக ஷாருக்கான்தான் அவரது இலக்கு. தாதா குறித்த திரைப்படம் என்பதும் அந்த தாதாவும் அதே மதத்தைச் சார்ந்தவர் என்பதும் கைலாஷ் மற்றும் அந்த கருத்தியலைச் சார்ந்த நண்பர்களுக்கு மறைமுகமாக வசதியாகவே இருந்தது.

ஹ்ருதிக் ரோஷனும் மற்றொரு நடிகராக பார்க்கப்படவில்லை. ஷாருக்கானின் மத அடையாளத்திற்கு மாறான மற்றொரு மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்பட்டார். இவ்வாறு இழிவுபடுத்தப்படுவதால் ஷாருக் மற்றும் ஹ்ருதிக் ஆகிய திரைப்படத் துறையின் இரண்டு திறமைசாலிகள் திறமைக்கு அப்பாற்பட்டு வெறும் அடிப்படை அடையாளங்களாக பார்க்கப்படுகின்றனர். இது மிகவும் துரதிர்ஷ்ட்டவசமானது. கைலாஷ் விஜய்வர்கியாவின் உலகில் ‘ரேஸ்’, ‘காபில்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒன்றோடொன்று போட்டியிடவில்லை. இரண்டு நாகரிகங்கள் தங்களது ஆதிக்கத்தை ஸ்தாபிக்கவே போராடுகிறது. 

தெற்காசியாவில் இந்திய சினிமாத் துறை அதிக சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. மதம் அல்லது ஜாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லை. திறமைகள் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக ஜாதி அல்லது மதம் என்றுமே இருந்ததில்லை. 50களிலும் 60களிலும் ராஜ் கபூர் மற்றும் தேவானந்த் சூப்பர்ஸ்டார்கள் என்றால் திலீப் குமார் மற்றும் யூசுஃப்கான் ஆகியோரும் அதே காலகட்டத்தில் கோலோச்சினார்கள். 70களிலும் 80களிலும் அமிதாப்பச்சன் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்தார். அந்த சமயத்தில் நச்ருதீன்ஷாவும் முன்னணியில் இருந்து இருவருமே இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

90 களில் இந்திய சினிமாக்களில் மதச்சார்பின்மை மலரத் தொடங்கியதுபோது சமூகம் சார்ந்த அரசியல் உச்சத்தில் இருந்தது. ராம் மந்திர் இயக்கம் தீவிரமாக செயல்பட்டது. ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி அந்த இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டது. எப்போதும் இல்லாத அளவு கான்கள் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தினர். அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான், சையஃப்அலிகான் மற்றும் தற்போது இர்ஃபான்கான், நவாசுதீன் சித்திக் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர். ஹ்ருதிக், அக்‌ஷய்குமார், அமிதாப், அஜய் தேவ்கன் ஆகியோரும் தொடர்ந்து வெற்றிபெற்றாலும் கான்களுக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. அமீர், சல்மான், ஷாருக் ஆகியோர் ஐம்பது வயதைக் கடந்தபோதிலும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றனர்.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் கதாநாயகிகள் ஆகியோருக்கு இவர்களுடன் பணிபுரிவது கனவாகவே உள்ளது. ஒரு சில ஊடகங்களும் வலதுசாரி குழுவும் ஒரு காலகட்டத்தில் கான்களுக்கு சவால்விடகூடிய நடிகராக ஹ்ருதிக் ரோஷனை சித்தரித்தது. ஒரு சில முன்னணி இதழ்களில் முதல் பக்க கட்டுரையாக வெளிவந்தபோதிலும் எந்த பயனும் இல்லை. அனைவரும் இந்து பெண்களை திருமணம் செய்துகொண்டதால் மத மாற்றத்தை தூண்டுவதற்காகவே திருமணம் செய்துகொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் தேசபத்தியற்றவர் என்ற சாயத்தை பூசுவதற்காகவே ஒவ்வொரு வாய்ப்பும் பயன்படுத்தப் பட்டது. ஷாருக்கானின் ’மை நேம் இஸ் கான்’ திரைப்படத்தையும் அமீர் கானின் மனைவி இந்தியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக கூறியதையும் மிகைப்படுத்தி மதம் என்ற சாயத்தை பூசினர்.

நாட்டுப் பற்றை சந்தேகிக்கும் விதமான கேள்விக்கனைகளை எழுப்ப கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. ’ரேஸ்’ – ஒரு திரைவிமர்சனம் அல்ல. ஷாருக்கானின் தேசப்பற்று குறித்து கேள்வியெழுப்புவதற்கும் அவர் வாயிலாக அந்த மதத்தைச் சார்ந்த அனைவரது தேசப்பற்று குறித்து கேள்வியெழுப்பவும் ’ரேஸ்’ பயன்படுத்தப்பட்டது. பெரும்பான்மை சமூகத்தினர் எப்போதும் தேசவிரோதியாகவோ நாட்டுப்பற்றற்றவர்களாகவோ இருக்கமாட்டார்கள் என்றும் மற்ற சமூகத்தினரே அவ்வாறு இருப்பார்கள் என்றும் கோடிட்டு காட்டப்படுகிறது. இது ஒரு ஆபத்தான விமர்சனமாகும். ஆனால் கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஓரங்கட்டும் இதுபோன்ற முயற்சிகள் நடந்து வருகிறது. இது தேசத்தின் வளர்ச்சியை பாதித்து அழிவுப் பாதைக்கே இட்டுச்செல்லும்.

ஆங்கில கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)