2022-க்குள் இணைய சேவைகள் பிரிவில் 12 மடங்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும்!

0

உலகளவில் இணைய பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2022-ம் ஆண்டில் இணைய சேவை துறை 12 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும் என மதிப்பிடப்படுவதாக இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (IAMAI) ஆய்வு தெரிவிக்கிறது. தற்போது இந்தத் துறையில் 10 லட்சம் ஊழியர்கள் பணியிலமர்த்தப்படுகின்றனர்.

பல பங்குதாரர்கள் இணைய பொருளாதாரத்தில் பங்களிப்பதால் 33.8 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்தத் துறை 124 பில்லியன் டாலர் அளவிற்கு வளர்ச்சியடையும் என IAMAI தெரிவிக்கிறது. இ-டெயில், உணவு தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், கல்வி தொழில்நுட்பம், விளம்பரம் மற்றும் பொழுதுபோன்ற போன்ற துறைகளின் செயல்பாடுகளே இந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என IAMAI கருதுகிறது. 

எனினும் இது மிகவும் குறைவான மதிப்பீடுதான் எனவும் வரும் நாட்களில் இணைய சேவை துறை மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை சந்திக்கும் எனவும் இது ஒட்டுமொத்த வளர்ச்சி அளவை அதிகரிக்கும் எனவும் IAMAI குறிப்பிடுகிறது.

வேலை வாய்ப்புகள் மூன்று நிலைகளில் இருக்கும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது:

1. ப்ராடக்ட் டிசைன் மற்றும் டெவலப்மெண்ட், விற்பனை மற்றும் மார்கெட்டிங், விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை, கிடங்கு, வெண்டார் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை போன்ற பிரிவுகளில் நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

2. ஆன்லைன் தளம் வாயிலாக வாழ்வாதாரம் பெறக்கூடிய விற்பனையாளர்கள், கார் ஓட்டுநர்கள், பயன்பாட்டு சேவை வழங்குவோர், உள்ளடக்கம் உருவாக்குபவர்கள் போன்றோருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

3. இணைய சேவை வழங்குவோரின் சப்போர்ட் ஸ்டாஃப், கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கையாள்பவர்கள், டெலிவரி ஊழியர்கள், வலைப்பதிவாளர்கள், சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள், பேக்கேஜிங் சேவைகள் என இந்தச் சுற்றுச்சூழலில் உள்ள மூன்றாம் நிலை பிரிவினருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கவனம் செலுத்தப்படும் பிரிவுகள்

வளர்ந்து வரும் இணைய சேவை பகுதியில் இ-டெயில் அல்லது மின்வணிகம் முக்கிய பங்கு வகிக்கும். இந்தத் துறை 2022-ம் ஆண்டு 58.2 பில்லியன் டாலராக வளர்ச்சியடையும் என மதிப்பிடப்படுகிறது. இதற்குக் காரணம் வேகமான விரிவடைந்து வரும் பயனர் தொகுப்பு, அதிகரிக்கும் நுகர்வு மற்றும் பொருட்களின் தேர்வு, வால்மார்ட்-ஃப்ளிப்கார்ட் டீல் போன்ற துறையில் காணப்படும் இணைப்புகள் போன்றவையே. இது இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

”நுகர்வோரின் தேவைகள், விருப்பம் போன்றவற்றில் கவனம்செலுத்தப்படும் விதத்தை இணையம் மாற்றிவிடும்,” என IAMAI குறிப்பிடுகிறது. 

எதிர்கால திட்டமிடலுக்கு அளவுகோலாகக் கருதும் குறைந்தபட்ச செயல்பாட்டு அளவை இன்னமும் எட்டாத காரணத்தால் விவசாய தொழில்நுட்பம் போன்ற பிரிவுகள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், IoT போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் உண்மையான தாக்கத்தை தீர்மானிக்க முடியாத காரணத்தால் இந்தப் பிரிவுகளும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு

இந்தத் துறை வளர்ச்சியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 51 மில்லியன் SME-க்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 117 மில்லியனுக்கும் அதிகமானோர் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் உற்பத்தியில் 37 சதவீதம் பங்களிக்கின்றனர். ஏற்றுமதியில் 46 சதவீதம் பங்களிக்கப்படுகிறது என IAMAI தெரிவிக்கிறது.

எனினும் தற்போது இந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இரண்டு சதவீதம் மட்டுமே டிஜிட்டலில் செயல்படுகிறது. டிஜிட்டலில் செயல்படும் இந்த நிறுவனங்கள் ஆஃப்லைனில் செயல்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிக வருவாய் ஈட்டுகிறது. அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடிவதும் புதிய பகுதிகளிலும் சந்தைகளிலும் செயல்படமுடிவதும் விற்பனைக்கு கூடுதல் வழிமுறைகள் உருவாவதுமே காரணம். 

”அரசாங்க ஏஜென்சிகளும் இணையதள வணிகங்களும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் டிஜிட்டலில் செயல்படவைக்கத் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது செயல்படும் ஆஃப்லைன் வணிகங்கள் டிஜிட்டல் முறையில் செயல்படுவதும், இண்டஸ்ட்ரீ 4.0 ப்ரொமோஷன், மைக்ரோ நிறுவனங்கள் டிஜிட்டலில் செயல்படுவது போன்ற முன்னேற்றங்கள் இருந்து வருவதாலும் வருங்காலத்தில் புதிய சேவை பிரிவுகள் வரவிருப்பதாலும் இணைய சேவையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்,” என IAMAI தெரிவிக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சோஹினி மிட்டர் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL