இந்தியாவின் மாறிவரும் தரைவழிப் போக்குவரத்து...

0

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மக்களையும், பொருட்களையும் ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வசதியுடன் நெருக்கமான தொடர்புடையது. ஆதாரவளங்களுக்கும், உற்பத்திக்கும், விற்பனை சந்தைக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுதான் சிறந்த போக்குவரத்து முறையாகும். 

நாட்டின் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்கும் சரக்குகளும், சேவையும் கிடைப்பதை உறுதி செய்து சமன்பட்ட வளர்ச்சிக்கு, போக்குவரத்து பிரதான சாதனமாகும். உலகிலேயே மிகவும் விரிவான போக்குவரத்து வசதியை கொண்டுள்ள போதிலும், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் மந்தமான திறமையற்ற நிலையை இந்தியா நீண்டகாலமாக சந்தித்து வந்துள்ளது. போக்குவரத்துத் துறை பல சவால்களை எதிர்கொள்கிறது.

தொலைதூரப் பகுதிகளுக்கும், மலைப் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. நெடுஞ்சாலைகள் யாவும் குறுகலாகவும், நெரிசலாகவும் சரிவர பேணப்படாமலும் இருப்பதால், போக்குவரத்து மந்தமடைகிறது. இதனால், விலை மதிப்பற்ற நேரம் விரயமாவதுடன், மாசுப்படலமும் ஏற்படுகிறது, விபத்துகள் அதிகரிப்பதால், ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் உயிர்கள் பலியாகின்றன. 

சாலைப் போக்குவரத்து மூலம் சரக்குகளை அனுப்புவது அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தி மாசுபடலத்தை அதிகரிக்கிறது என்றாலும், அதிகப்படியாக சரக்கு போக்குவரத்து சாலைப் போக்குவரத்து மூலமாகவே நடக்கிறது. ரயில் போக்குவரத்து மலிவானது, சுற்றுச்சூழலுக்கு கேடு பயக்காதது என்றாலும், போதிய அளவில் இல்லாததாலும், அதன் நிர்மாணம் மெதுவாக நடப்பதாலும் சாலை போக்குவரத்தே நாடப்படுகிறது. 

நீர்வழிப் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு இணக்கமானதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும், போதிய வளர்ச்சி அடையவில்லை. இப்படி கட்டண உயர்வுள்ள சாதகமற்ற போக்குவரத்து காரணமாக நமது பொருட்களை சர்வதேச சந்தையில் போட்டியிட்டு விற்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கட்டணம் குறைந்த, எளிதாக ஒவ்வொருவரும் பெறக்கூடிய, பாதுகாப்பான, குறைந்த அளவே மாசு ஏற்படுத்தக் கூடிய உள்நாட்டுப் பொருட்களை கூடியமட்டும் பயன்படுத்த கூடிய உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து கட்டமைப்பை நம்நாட்டில் உருவாக்க அரசு முன்னுரிமை அளிக்கிறது. நடைமுறையில் இருக்கும் கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவது, புதிய கட்டமைப்பை உருவாக்குவது, அதற்கேற்ப சட்ட வடிவமைப்பை நவீன மயமாக்குவது ஆகியவை இதில் அடங்கும். 

தனியார் துறையின் பங்களிப்பும் அதற்கான சூழ்நிலையை உருவாக்குவதும் இதில் உள்ளடக்கமாகும். நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மொத்த சாலைகளில் வெறும் இரண்டு சதவீதம்தான். ஆனால், 40 சதவீத சரக்குகளை அவை ஏற்றி செல்கின்றன. இந்த கட்டமைப்பின் நீளத்தையும், தரத்தையும் மேம்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு 96,000 நீளம் என்று தொடங்கிய இந்த முயற்சி, இப்போது ஒன்றரை லட்சம் கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. 

விரைவில் இரண்டு லட்சம் கிலோமீட்டராக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் நிறைவேற்றும் பாரத் மாலா திட்டம் என்பது எல்லைகளையும், சர்வதேச சாலைகளையும் இணைக்கக் கூடியது, சாலை மார்க்க தொழில்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி இணைப்பு சாலைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தேசிய சாலை மார்க்கத்தின் இணைப்பை வளர்க்கக் கூடியது. கரையோர சாலைகளையும், துறைமுக இணைப்பு சாலைகளையும், புதிதாக துரித போக்குவரத்து சாலைகளையும் உருவாக்க, இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளுடன் நாட்டின் எல்லா பகுதிகளையும் எளிதாக இணைப்பது என்பதே இதன் பொருளாகும்.

வடகிழக்கு பிராந்தியம், நக்ஸலைட்டு பாதிப்புள்ள இடங்கள், பின்தங்கிய பகுதிகள், உள்நாட்டு பகுதிகளுக்கு சாலை போக்குவரத்து இணைப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அஸ்ஸாமில் டோலா சாடியா பாலம், ஜம்மு-கஷ்மீரில் அதிநவீன செனானி நெஷ்ரி சுரங்கங்கள் கடுமையான மலைப்பாதையிலும் தொலைதூரப் பகுதிகளையும் எளிதில் அணுகுவதற்கு உதவக்கூடியவை. அதிகபட்ச போக்குவரத்துள்ள வதோதரா-மும்பை, பெங்களூரு-சென்னை மற்றும் தில்லி-மீரட் மார்க்கங்களை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதும், அதிவேக சாலைகளுடன் இணைப்பு ஏற்படுத்துவதும், மதம் மற்றும் சுற்றுலா தொடர்பான சர் டாம் பௌத்த மையம் போன்றவற்றுக்கு வசதியாகவும், விரைவாகவும் செல்வதற்கு இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

சாலையின் நீளத்தை அதிகரிப்பது மட்டுமின்றி பாதுகாப்பான நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கும் அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்கு பலமுனை அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. சாலைகள் வடிவமைப்பில் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்தல், விபத்து அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து காரணத்தை களைதல், சரியான சிக்னல் அமைத்தல், வலுவான சட்டங்கள், வாகனங்களின் தரத்தை மேம்படுத்துதல், ஓட்டுனர்களுக்குப் பயிற்சி, விபத்து ஏற்பட்டால் அளிக்கும் சிகிச்சையில் மேம்பாடு, மக்கள் விழிப்புணர்ச்சியை அதிகரித்தல் ஆகிய அம்சங்கள் இந்த பலமுனை அணுகுமுறையாகும். 

சேது பாரதம் திட்டத்தின் கீழ் அனைத்து ரயில்வே சாலை கடவுகள் அனைத்தையும் மாற்றியமைத்து மேம்பாலங்களாகவோ, தரையடி பாலங்களாகவோ மாற்றியமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் அனைத்து பாலங்களும் அமைப்பு வீதப்படி பட்டியலிடப்பட்டு, பதிவேடுகள் பராமரிக்கப்படும். இதன்மூலம் காலக்கெடுவுடனான பழுதுபார்ப்பு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாகும். மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த மசோதாவின்படி, கடுமையான தண்டனைகள், வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் ஆகியவற்றை கணினி மயமாக்கி வெளிப்படையாக மாற்றுதல், மனித தலையீடுகளை குறைத்தல், விபத்துகால உதவியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சட்டப்பிரிவுகளை இயற்றுதல், தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான அமலாக்க முறைகளை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

காற்று மாசுபடுவதை குறைக்கும் பிரச்சினையானது, பழைய வாகனங்களை புதுப்பிக்கும் திட்டங்கள், 2020 ஏப்ரல் முதல் தேதி முதல் BS-VI புகை நெறிகளை அமல்படுத்துதல், நெடுஞ்சாலைகளில் உள்ளுர் பங்கேற்பு மூலம் மரங்களை நடுதல், ஃபாஸ்ட் டாக் என அழைக்கப்படும் RFID டாக்குகள் மூலம் மின்னணு சுங்கவரி வசூலித்தல் ஆகியவற்றின் மூலம் கையாளப்படும். எத்தனால், பயோ-சிஎன்ஜி, பயோ-டீசல், மெத்தனால் மற்றும் மின்சார மாற்று எரிபொருள் பயன்பாடு மேம்படுத்தப்பட உள்ளது. 

சில நகரங்களில் சோதனை அடிப்படையில் இவற்றில் சில பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மலிவான மற்றும் பசுமையான தண்ணீர்வழிப் போக்குவரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் 7,500 கிலோமீட்டர் நீள கடற்கரையின் கப்பல் செலுத்துகை திறனை பயன்படுத்தும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

சாகர்மாலா திட்டத்தின்படி, 14,000 கிலோமீட்டருக்கும் கூடுதலான உள்நாட்டு நீர்வழிப்பாதைகளை உருவாக்கும் திட்டமும் இதில் 111 நீர்வழிப்பாதைகளை தேசிய நீர்வழிப்பாதையாக அறிவிக்கும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. சாகர்மாலா திட்டத்தின்படி, துறைமுகங்கள் வளர்ச்சியின் உந்துவிசையாக மேம்படுத்தப்பட உள்ளன.

14 கடலோர பொருளாதார மண்டலங்களை உருவாக்கி துறைமுகப் பகுதிகளை தொழில்மயமாக்குதல் இதன் நோக்கமாகும். இதற்கு ஆதரவாக துறைமுக அடிப்படை வசதிகளை நவீனப்படுத்தி மேம்படுத்துதல், துறைமுகங்களின் இணைப்பு திறனை உள்நாட்டு சாலை, ரயில், நீர்வழிப் பாதைகள் மூலம் மேம்படுத்துதல் மற்றும் கடலோர சமுதாயத்தை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். 

சாகர்மாலா திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சரக்குப் போக்குவரத்து இனத்தில் 35,000 முதல் 40,000 கோடி ரூபாய் வரை சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்றுமதி 11,000 கோடி அமெரிக்க டாலராக உயரும்: ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் போக்குவரத்து பங்கு இரண்டு மடங்கு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றுக்கும் மேலாக கங்கை, பிரம்மபுத்ரா உள்ளிட்ட பல்வேறு நீர்வழிப் பாதைகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், அவற்றின் நீர்வழிப் போக்குவரத்து திறன் மேம்படுத்தப்படும். உலக வங்கி உதவியுடனான நீர்வழிப் போக்குவரத்து நிறுவனம் என பொருள்படும், ‘ஜல் மார்க் விகாஸ் திட்டம்’ கங்கையாற்றின் ஹால்டியா முதல் அலகாபாத் வரையிலான தூரத்தை 1,500 முதல் 2,000 டன் வரை எடையுள்ள கப்பல் போக்குவரத்தை ஏற்கும் அளவிற்கு அமைக்க உதவும். வாரணாசி, சாஹிப் கன்ஜ், ஹால்டியா ஆகிய இடங்களில் உள்ள பல்வகை முனையங்கள் அமைப்பு பணிகள் மற்றும் இந்தப் பகுதியில் தேவையான அடிப்படை வசதி பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 

இத்துடன் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையான சரக்குப் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மூலம் மேற்கொள்ளப்படும்: இதனையடுத்து பொருட்களின் விலையும் குறையும். அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 37 நீர்வழிப்பாதைகள் மேம்படுத்தப்படும். நெடுஞ்சாலை மற்றும் நீர்வழிப்பாதை துறைகளில் நவீனமயம் விரைவாக நடைபெற்று வரும் அதேவேளையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பினை உருவாக்கும் திட்டமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த அமைப்பின்படி, அதிகபட்ச போக்குவரத்து முறை இணைப்புகளும், இடையூறு இல்லாத போக்குவரத்து முறைகளிடையே இணைப்பும் ஏற்படும். இந்த வகையில் நாட்டின் சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதற்கென போக்குவரத்து திறன் மேம்பாட்டு திட்டம் – லீப் திட்டமிடப்பட்டுள்ளது. 50 பொருளாதார மண்டலங்களை அமைத்தல், கிளைப்பாதைகளை மேம்படுத்துதல், சேமிப்பு மற்றும் கிடங்கு வசதியுடன் 35 பல்வகை சரக்கு பூங்காக்களை உருவாக்குதல், பல்வேறு போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் 10 நிலையங்கள் அமைத்தல் ஆகியன இந்தத் திட்டத்தில் அடங்கும். 

இந்தியாவின் போக்குவரத்து துறையில் உறுதியான மாற்றங்கள் விரைவாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் போக்குவரத்து துறை வளர்ச்சிக்கு உதவும் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க உள்ளது. இந்தப் புரட்சி இந்தியா எங்கும் நடைபெறும்போது நாடு மேலும் விரைவாக வளர்வதை நாம் காண இயலும். மேலும் வளர்ச்சியின் பயன்கள் இன்றுவரை வெளிவரம்பில் இருக்கும் பகுதிகளையும், மக்களையும் சென்றடையும் என்பது உறுதி.

(பொறுப்புத்துறப்பு: ஆங்கில கட்டுரை ஆசிரியர்- நிதின் கட்கரி, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவருடையது. இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.)