நான்கு கணினியுடன் தொடங்கி ஒரு கோடி வரை ஈட்டும் கோவை நிறுவனம்!

0

கல்லூரியை விட்டு வெளியே வந்த நான்கு மாணவர்கள், எந்தவித பின்னணியும் இல்லாமல், பெரிய அளவு முதலீடு இல்லாமல் இன்று ஒருகோடி ரூபாய் வரை வருடத்திற்கு சம்பாதிக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

சந்தோஷ் கோவிந்தசாமி, கோபால் கிருஷ்ணன், உதய கிருஷ்ணா மற்றும் அனில்குமார் என்ற நான்கு பேரும் "மைப்ரோமோவீடியோஸ்.காம்" (Mypromovideos.com) என்ற தங்கள் நிறுவனம் மூலம் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். நிறுவனங்களுக்கான சிறுசிறு விளம்பர வீடியோக்களை உருவாக்குவதே இவர்களின் பணி. இந்த நான்கு பேரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள், பொறியியல் பட்டதாரிகள். இவர்களில் கோபால் மட்டுமே மூத்தவர், பணி அனுபவம் பெற்றவர். மற்ற எல்லோருமே கல்லூரி முடித்தவர்கள்.

முதல் முதலில் கோபால் வீட்டுப் படுக்கை அறையில் தான் இந்த நிறுவனம் செயலாற்றத் துவங்கியது. வங்கியில் கடன் பெற்று நிறுவனத்திற்கு தேவையான பொருட்களையெல்லாம் வாங்கியிருக்கிறார்கள். சின்னசின்ன ப்ராஜக்டுகள் மூலம் வலுவான வாடிக்கையாளர்களை உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டியிருக்கிறார்கள்.

"சந்தைப்படுத்துதல் என்பது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்ததல்ல. நீங்கள் என்ன கதை சொல்கிறீர்கள் என்பதை பொறுத்தது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கதையுடன் கூடிய அனிமேஷன் வீடியோவை உருவாக்கி தருகிறோம். அதுவே அவர்களின் நிறுவனத்தை பற்றிச் சிறப்பாக சொல்லும். இது அவர்கள் சந்தைப்படுத்த உதவுவதோடு அல்லாமல் விற்பனையை அதிகரித்து சந்தையில் தங்களை முன்னிருத்தவும் உதவுகிறது” என்கிறார் இந்நிறுவனத்தின் இணை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அனில்.

தன்னார்வ கல்வி

"எங்களுக்கென எந்த வணிக பின்னணியும் இல்லை. அனிமேஷன் பின்னணி இல்லை. நாங்களே தான் கற்றுக்கொண்டோம். இணையத்தில் கிடைக்கும் பாடங்களை வைத்தே நாங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, தவறுகள் நிறைய செய்து அதிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டோம்” என்கிறார் உதயா.

கல்லூரியில் படித்த போது உள்ளூர் ரோடராக்ட் க்ளப்புக்கு தேவையான அனிமேஷன் வீடியோவை உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அப்போது பொறியியல் முடித்தவர்கள், சந்தை மந்த நிலையால் வேலை கிடைக்காமல் தவிக்க, இவர்கள் தங்களுக்கான நிறுவனத்தை துவங்க முடிவெடுத்தார்கள்.

விவரணை வீடியோக்களுக்கான சந்தை

ப்ராண்டுகளை பற்றிய செய்திகளை தாங்கிவரும் அனிமேஷன் வீடியோக்களுக்கான சந்தை செழிப்பாக வளர்ந்துவருகிறது. ஒருநிறுவனம் தன்னை வித்தியாசமாக விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் மற்றவர்களை விட தனித்து தெரிவதற்கும் இது போன்ற வீடியோக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே விவரணை வீடியோக்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

வளர்ந்தவிதம்

மைப்ரோமோவீடியோஸ், 2009ம் ஆண்டு துவக்கப்பட்டது. டெம்ப்ளேட் வீடியோக்களுக்கு 50 டாலருக்கும் குறைவான கட்டணத்தையே அப்போது வசூலித்தார்கள். நிலையான வருமானம் வரத்துவங்கியப் பிறகு இதையே தொழிலாக எடுத்து செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள். ஆரம்பத்தில் எந்த பொருளாதார பின்னணியும் இல்லாத காரணத்தால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே ஆரம்பகால வருமானம் சரியாக இருந்திருக்கிறது.

நாளாக நாளாக வெறுமனே டெம்ப்ளேட் வீடியோக்கள் சந்தைக்கு போதுமானதாக இல்லை. எனவே விவரணை வீடியோக்களின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். இதற்காகவே சில திறமையான ஆட்களை தங்களோடு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி

"Workflowy" எங்கள் முதல் வாடிக்கையாளர். நாங்கள் அவர்களுக்கு இலவசமாக விவரணை வீடியோ செய்து தருகிறோம் என்று மெயில் அனுப்பினோம். அதற்கு பதிலாக மைப்ரோமோவீடியோஸை அவர்கள் தளத்தில் விளம்பரப்படுத்த ஒப்புக்கொண்டார்கள். இது நல்ல வெற்றி பெற்றது” என்று பழையதை நினைவுகூர்ந்தார் அனில்.

ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு இவர்களது பணி பிடித்து போகவே பாராட்டு கிடைத்திருக்கிறது. ஃப்ரெஷ்டெஸ்க் நிறுவனத்தை பின்தொடர்ந்து வாய்ப்பை பெற்றனர். அதையும் சிறப்பாக செய்துகொடுத்திருக்கிறார்கள். ஃப்ரெஸ்டெஸ்க் வேலையானது பிரசித்தி பெற்ற ஒன்றாக மாறியது. அந்த வீடியோ www.startupplays.com என்ற தளத்தில் உலக புதுமுயற்சிகளுக்கான கூட்டமைவில் முதல் ஐந்து வீடியோக்களில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது. இது மட்டுமல்லாமல் சில முக்கியமான ப்ராண்டுகளுக்காக பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாடிக்கையாளர்கள்

ஃப்ளிப்கார்ட், வெப்எங்கேஜ், வொர்க்ஃப்ளோய், ஹெச்சிஎல் போன்ற இவர்களது வாடிக்கையாளர்கள் பட்டியல் மிக முக்கியமானது. இவர்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சிலிக்கன் வேலியை சேர்ந்தவர்கள். அந்த வீடியோக்கள் வண்ணமயமானவை, புதுமையானவை.

மென்ஸ்ட்ரூபீடியா என்ற இலாப நோக்கற்ற ஒரு நிறுவனம் மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். அவர்களுக்கான வீடியோவையும் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே செய்த வேலையை பொறுத்தே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதால் எந்தவித மார்கெட்டிங்கும் தேவைப்பட்டிருக்கவில்லை. மைப்ரோமோவீடியோஸ் கடந்த ஆண்டில் ஒரு கோடி என்ற இலக்கை எட்டியிருக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான வீடியோக்களை 70க்கும் மேற்பட்ட புது நிறுவனங்களுக்காக உருவாக்கி இருக்கிறார்கள்.

கற்ற பாடங்கள்

"வெறும் நான்கு பேராக தான் இதைத் துவங்கினோம். வேலைகளும் எளிமையாக இருந்தன. வளர ஆரம்பித்த பிறகு எங்களுக்கு இருந்த ஒரு சவால் திறமையான ஆட்களை எங்கள் குழுவில் சேர்த்துக்கொள்வதே. புதியநிறுவனம் என்பதால் திறமையான பலரும் எங்கள் நிறுவனத்தில் இணைய தயங்கினர். அது இயல்பு தான்” என்றார் கோபால்.

எனவே புதியவர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். அவர்கள் ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

“இப்பொழுது எங்கள் குழுவானது எங்களுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. உண்மையில் வேலையின் மீது தீவிர தாகம் கொண்டிருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேலைக்கு எடுப்பது என்பது மிகப்பெரிய சவால்” என்கிறார் உதயா.

அடுத்து என்ன?

”ஏற்கனவே எங்களுக்கு உலகம் முழுவதுமான வரவேற்பு உள்ளது. வெளிநாடுகளில் சிறப்பான இடத்தை தக்கவைக்க எங்கள் நிறுவனத்தை விரிவாக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். பொழுதுபோக்கு ஊடகத்தில் நுழையும் விதமாக குழந்தைகளுக்கான பல்வேறு அனிமேஷன் வீடியோக்களை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறோம்.” என்றார்.

இந்நிறுவனம் வணிக நோக்கமற்ற வீடியோக்கள் மற்றும் அனிமேஷன் வீடியோக்களை பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் நுழையும் எண்ணத்தில் உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஃபேஸ்புக் மற்றும் யூட்யூபில் சில வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர்களின் தற்போதைய தொழிலை விளம்பரப்படுத்தவும் உதவியிருக்கிறது.

ஏன் சுயமுதலீட்டுப் பாதை?

"நாங்கள் இதற்காக எந்த பெரிய முதலீடும் செய்யவில்லை. கணினி வாங்கினோம் எங்கள் நேரத்தை செலவிட்டோம். அவ்வளவே. நாங்கள் செய்த வேலையில் இருந்து கிடைத்த பணத்தை கொண்டே நிறுவனத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டோம். கிடைக்கும் லாபத்தை தொழிலிலேயே முதலீடு செய்தோம். எங்கள் தொழிலும் பெரிய அளவிலான பணத்தை கொண்டு இயங்குவதில்லை. வெறும் மென்பொருள் மற்றும் கணினியே போதுமானது. எனவே தான் சுயமுதலீட்டுப் பாதையை தேர்ந்தெடுத்தோம்.

இந்த தொழிலை துவங்குவதற்கு தேவையான பணத்திற்காக நாங்கள் காத்திருக்கவில்லை. ஆரம்பத்தில் நிறுவனம் துவங்க என்னவெல்லாம் தேவை என ஒரு பெரிய பட்டியலே போட்டோம். அதில் அலுவலகத்திற்கு தேவையான இடம், லேண்ட்லைன் போன் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றை அந்த லிஸ்டில் வைத்திருந்தோம். உண்மையில் இவையெல்லாம் இல்லாமலே துவங்கலாம் என்று முடிவெடுத்து செப்டம்பர் 09,2009ம் ஆண்டு கோபாலின் அறையில் மூன்று கணினி மற்றும் ஒரு லேப்டாப்பை கொண்டு துவங்கினோம்.” என்றார்கள்.

ஆனால் அன்று பெட்ரூமில் துவங்கிய இடத்தை தாண்டி இன்று வெகுதூரம் வந்துவிட்டிருக்கிறார்கள்.

"தினமும் காலை என்னுடைய இரண்டாவது வீட்டிற்கு வருவதை போலவே உணர்கிறேன். ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம் என்ற உணர்வே எனக்கு வந்ததில்லை. எனக்கு மிக அருமையான தருணத்தை தரும் ஒரு குடும்பத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்” என்கிறார் சரவணன். இவர் இந்நிறுவனத்தின் முதல் பணியாளர். இப்போது மூத்த அனிமேட்டர்.

"மகிழ்ச்சியாக இருப்பதன் மூலமே ஒரு கலையை உருவாக்க முடியும். அதுவே தூண்டுகோலாக இருக்கும். உங்கள் வாடிக்கையாளர் உங்களிடம் வந்து உங்கள் வேலை மூலமாக எங்கள் ப்ராண்ட் வேறு தளத்திற்கு சென்றது என்று சொல்லும்போது கிடைக்கும் சந்தோசமே எங்களின் ஒவ்வொரு காலையையும் சிறப்பான ஒன்றாக மாற்றுகிறது. அதே மகிழ்ச்சியோடு வேலையில் ஈடுபட உதவுகிறது” என்றார் சந்தோஷ். இவர் இந்நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் மேலாண்மையின் இயக்குநராக இருக்கிறார்.

கோயம்புத்தூரில் இருந்து வெறுமனே நாலு கணினியை வைத்துக்கொண்டு மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என்று இந்த குழு நிரூபித்திருக்கிறது.

ஆங்கிலத்தில் - ABHASH KUMAR | தமிழில் - Swara Vaithee