சின்னஞ்சிறு மனிதர்களை செதுக்கும் சிற்பி: கல்விப் பணியில் ராணி!

0

கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான தாகூர்பூரில் உள்ள 'சேவ் தி சில்ரன்' இல்லத்தில் 6-ம் வகுப்புப் பயிலும் 11 வயது மாணவி ரபேயா. தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே தன் படிப்பையும் வாழ்க்கையையும் தவிர வேறு எதுபற்றியும் சிந்திக்காமல் உலா வருகிறார். ஆனால் இந்த இயல்பு நிலை 'ட்ரஷர்ஸ் ஆஃப் இன்னொசன்ஸ்' (Treasures of Innocence) இவரின் வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கும்வரைதான்!

"என் பள்ளி, படிப்பு மற்றும் நண்பர்கள் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்தேன். என்னைப் பற்றி யோசிப்பதற்கு கூட நேரமில்லை. பின்னர், ட்ரஷர் ஆஃப் இன்னொசன்ஸின் 'இக்னைட்டட் மைண்ட்' செயல்திட்டத்தில் இணைந்தேன். அதன்மூலம் என் வாழ்க்கைப் பாதையே மாறியது. இன்று, என்னைப் பற்றியும் என் சுற்றுப்புறத்தைப் பற்றியும் சிந்திக்கிறேன். கல்வியின் முக்கியத்துவம், நன்னடத்தை, பிறரை மதித்தல், உதவுதல், குறிப்பாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முதலானவற்றைக் கற்றுக்கொண்டேன். இப்போது நான் ஒரு நல்ல இந்தியக் குடிமகனாக பொறுப்புணர்வுடன் வாழ்கிறேன். 'ஸ்பேஸ் அண்ட் ஸ்கை' என்ற வகுப்பின் மூலம் இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சத்தையும் அதன் அம்சங்களையும் அறிந்தேன். இந்தக் கற்றலின் மூலம் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் வெகுவாக கூடியிருக்கிறது" என்கிறார் ரபேயா.

இவரைப் போலவே காஸிப்பூர் கல்வி நிலைய மாணவிகளுள் ஒருவரான மீதா, ஒரு படக் கதை புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆகும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொண்டதை பெருமிதத்துடன் பகிர்கிறார்.

"நான் டிரஷர்ஸ் ஆஃப் இன்னொசன்ஸின் 'மை புக் மை வேர்ல்டு' செயல்திட்டத்தில் சேர்ந்தேன். ஒரு படக் கதை புத்தகத்தை உருவாக்கச் சொன்னார்கள். புத்தகம் எழுதுவதும் வரைவதும் மிகக் கடினமானது என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தோம். டிரஷர் ஆஃப் இன்னொசன்ஸ் உறுப்பினர்கள்தான் எங்களுக்கு ஆலோசனைகளையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கி ஊக்கப்படுத்தினர். அதனால், ஒரு முழுமையான படக் கதை புத்தகத்தை உருவாக்கினோம். ஆரம்பத்தில் வரைந்த படங்கள் எதுவுமே எங்களுக்குத் திருப்தி இல்லை. அந்த உறுப்பினர்கள் உரிய ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியதனால் மீண்டும் படங்களை வரைந்து அசத்தினோம். அந்தப் புத்தகம் வெளியான பிறகு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போதுதான் ஒற்றுமையாக சேர்ந்து ஒரு செயலைச் செய்தால் கிடைக்கும் நன்மையின் விளைவை உணர்ந்தோம். ஓர் அற்புதமான படக் கதை புத்தகத்தை உருவாக்கிய குழுவில் நானும் ஓர் அங்கத்தினர் என்பதில் பெருமையாக உள்ளது" என்கிறார் நீதா.

சிந்தனைத் தூண்டலும் புத்தாக்கங்களும்

சின்னஞ்சிறு மனதில் பெரிய கனவுகளை விதைத்தல், அவர்களுக்கு ஊக்கமளித்தல், நம்பிக்கையை அளிப்பதுடன் படைப்பாற்றல் திறனை வெகுவாக மேம்படுத்துதல் முதலான நடவடிக்கைகள் மூலம் குழந்தைகளை முன்னேற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம்தான் 'டிரஷர்ஸ் ஆஃப் இன்னொசன்ஸ்' (டிஓஐ). புத்தாக்கமும் படைப்பாற்றலும் நிறைந்த தலைமைகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது இந்த அமைப்பு. குறிப்பாக, நரகம் சூழந்த வாழ்க்கையில் உள்ள குழந்தைகளை மீட்டு, அவர்களிடம் கனவுகளைக் கொண்டு சேர்க்கிறது. தன்னைச் சுற்றியுள்ள சமூக சீர்கேடுகளால் பாதிப்பின்றி அவர்களை உருவெடுக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

"மோசமான சூழலில் வாழ்ந்துவரும் குழந்தைகளை அணுகி, அவர்களது படைப்பாற்றலை மீட்டெடுத்து, அவர்கள் சிந்தித்து செயல்படவும், உற்சாகமாக கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குவதும் சற்றே கடினமானதுதான். சுய ஆய்வுக்கான வழியே இல்லாமல் போகிறது. மொழியறிவுத் திறனில் மோசமான நிலை, பகுத்து அறிந்து செயல்படுதலில் சுணக்கம் முதலானவை அந்தக் குழந்தைகளின் தன்னம்பிக்கையை சீர்குலைக்கிறது. இதனால், பிற மாணவர்களைப் போல தரமான கல்வியை அவர்கள் பெற முடியாமல் போகிறது. நம்பிக்கையின்மை, சோர்வு, தோல்வி, துக்கம் முதலானவை நிறைந்துள்ளது. இது முடிவற்ற சக்கரமாக சுழல்கிறது" என்கிறார் டிஓஐ-யின் நிறுவனர் ராணி பொவானி.

முன்னணி அமைப்புத் தலைமையின் பின்னணி

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, எம்.பி.ஏ. முடித்தவரான ராணி, புராஜக்ட் மேனேஜ்மென்ட் அண்ட் கன்சல்டிங்கில் அனுபவத் திறமை மிக்கவர். புத்தாக்கமும் தொழில்நுட்பமும், தரவுகளின்படி முடிவெடுக்கும் முறைகள், குழந்தைகளுக்கான சமூகப் பொறுப்புத் திட்டங்கள் என பல தளங்களில் செயல்திட்ட நிபுணராக செயலாற்றியவர். ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவது மட்டுமின்றி, அதை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, தானே களமிறங்கி முழுமையாக நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதில் வித்தகரும் கூட.

பல்வேறு அறக்கட்டளைகளிலும் குழந்தைகளுக்காக தன்னார்வலராக சமூகப் பணி மேற்கொண்டு வந்ததன் மூலம் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டி புத்தாக்க செயல்பாடுகளில் ஈடுபட வைப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். தனது சின்ன வயதிலேயே டிஓஐ-க்கான விதையை ஊன்றிவிட்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. "ஊரகப் பகுதியில் உள்ள குழந்தைகளையும் பெண்களையும் மேம்படுத்துவதற்காக, என் பாட்டி தன்னை பேலூர் மடத்துடன் இணைத்துக்கொண்டு சமூகப் பணியாற்றி வந்தார். அவருடன் வெவ்வேறு செயல்திட்டங்களில் கலந்துகொள்வேன். அப்போதுதான் சமூகப் பணி மீது ஆர்வம் கூடத் தொடங்கியது. முதுகலைப் பட்டங்களுக்குப் பிறகு கார்ப்பரேட் உலகில் இருந்தேன். பிறகு, 2013-ல் டிரஷர்ஸ் ஆஃப் இன்னொசன்ஸை தொடங்கினேன். என் நீண்ட கால கனவை நனவாக்குவதற்காக பல மாதங்களாக இரவு பகலாக விழித்தும் யோசித்தும் திட்டமிட்டும் இந்த அமைப்பை செதுக்கினேன். கடைசியில், என் வேலையை உதறிவிட்டு, குழந்தைகளின் முன்னேற்றத்துக்கும் அவர்களின் கனவுகளுக்கும் செயலாற்றுவது என முடிவு செய்து முழுநேரப் பணியைத் தொடங்கினேன்" என்கிறார் ராணி.

நபாஜதக் வித்யாபவனின் மாணவிகளுள் ஒருவரான 8-ம் வகுப்பு படிக்கும் அஞ்சுரா, டிஓஐ மூலம் பலன் அடைந்தவர்கள் பல இளம் திறமையாளர்களில் ஒருவர்.

"இக்னைடட் மைண்ட்ஸ் திட்டத்தில் பங்கேற்ற பிறகு, சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது குறித்து கற்றுக்கொண்டேன். பள்ளிப் புத்தகத்தைத் தாண்டிய விஷயங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்வது என்பது ஆர்வத்தைத் தூண்டியது. நம்மைச் சுற்றியுள்ள அன்றாட விஷயங்கள் அனைத்திலும் சோதனை முயற்சி செய்து வருகிறோம். இது, என் வீட்டுக்குச் சென்று சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தூண்டியது. அறிவியலைக் கற்றுக்கொள்வதில் முக்கியமான விஷயமே, கவனிப்பதுதான். என் வகுப்புகள் முடிந்தவுடன் வெளியே உள்ள எல்லாவற்றையும் அறிவியல் பார்வையோடு கவனிக்கத் தொடங்கிய பிறகு கிடைக்கும் வாழ்க்கை அனுபவமே அலாதியானது" என்று ஆச்சரியப்படுகிறார் அஞ்சுரா.

கற்பித்தல் முறையில் மாற்றம்

தற்போது ஊரக, நகர்ப்புறங்களில் உள்ள ஆதரவற்ற, ஏழைக் குழந்தைகள், பதின்ம மாணவர்களுடன் டிஓஐ இணைந்து செயல்பட்டு வருகிறது. இத்தகைய மாணவர்களின் புத்தாக்கத் திறனையும் படைப்பாற்றலையும் வெளிக்கொணர்வதுதான் டிஓஐ-யின் முக்கிய நோக்கம். தியானம், செயல்பாடுகள், குழு விவாதம், பேச்சுப் பயிற்சி, வீடியோக்கள், கதை சொல்லுதல், விளையாட்டுகள், ஓவியங்கள், நகைச்சுவைகள், நாடகங்கள், கோட்டோவியங்கள், அறிவியல் சோதனை முயற்சிகள், தொழில்நுட்பம் முதலானவை மூலமாக செயல்வழிக் கற்றலைத் தருகிறது டிரஷர்ஸ் ஆஃப் இன்னொசனஸ்.

"மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தக் கூடிய வகையிலான கற்றல் முறைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், தாங்கள் வளர்ந்த சமூகச் சூழலின் பின்னணி காரணமாக, படைப்பாற்றல் சிந்தனையை மேம்படுத்துவது மாணவர்களுக்கு கடினமாகவே இருக்கிறது. எனவே, அந்த மாணவர்களின் படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டி தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உரிய வழிகள் அனைத்தையும் நாடுகிறோம். தற்போதைய பள்ளிக் கல்வி முறையில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கு டிஓஐ முயன்று வருகிறது. குழந்தைகள் ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு மாணவரைத் தலைமைப் பண்பு மிக்கவராக உருவாக்குவதற்கும், எந்தவித செயல்திட்டத்திலும் சிறப்பாக செயல்பட வழிவகுப்பதற்கும் படைப்பாற்றல் சிந்தனைதான் முதன்மை வகிக்கிறது. எனவேதான் டிஐஏஎல் (TIAL) - சிந்தித்தல் > தேர்ந்தெடுத்தல் > செயல்படுதல் > தலைமை வகித்தல் என்ற ஃபார்முலா மூலம் தற்போதைய பள்ளிக் கல்வி முறையில் உள்ள பாதகங்களை மாற்றி சாதக நிலையை அடையச் செயல்பட்டு வருகிறோம்" என்று விவரிக்கிறார் ராணி.

நொடிந்த குடும்பங்களில் இருந்தும், விரோதம், வறுமை மற்றும் துயரத்தின் பின்னணியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இயங்கி வருகிறது டிஓஐ. "பலராலும் அன்பு செலுத்தப்படாமல் வேகமான உலகத்தில் வேகமாகவே வளருகிறார்கள் அந்தக் குழந்தைகள். எந்தவித உணர்வுபூர்வ பந்தத்தின் உறுதுணையும் இல்லாமல் தங்கள் உணவு, உடை, உறைவிடத்துக்காக தாங்களே பாடுபடத் தொடங்குகிறார்கள் அந்த சின்னஞ்சிறு மனிதர்கள். இவர்கள் அனைவரிடமும் இருக்கின்ற ஒரே பொதுவான அம்சம் 'அறிவு வேட்கை மிக்க அப்பாவித்தனம்' மட்டுமே. இந்த சக்திவாய்ந்த மனம்தான் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் காகிதக் கப்பலில் சந்தோஷமாக உலா வருவதற்கான நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தருகிறது. அத்துடன், தங்கள் துயர்மிகு வாழ்க்கைச் சூழலிலும் சின்ன சின்ன மகிழ்ச்சிகளைக் காணும் வல்லமையையும் கொடுக்கிறது. பல்வேறு அரசுப் பள்ளிகள், ஆதவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள் முதலானவற்றில், அங்கே இருக்கின்ற கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தியே படைப்பாற்றலுக்கு வித்திடும் செயல்வழிக் கல்வியை அளித்து வருகிறோம்" என்கிறார் இளம் தலைவர்.

இலக்கை நோக்கிய பாதை

கடந்த 2013 ஜூனில் தொடங்கி இந்த இரண்டு ஆண்டுகளில் கடந்து வந்த பாதையே மிகவும் நீளமானது. "ஒரு நிலையான சமூகத்துக்கு கல்விதான் அடிப்படைத் தேவை என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையுடன், குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில், அவர்களது சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், அவர்கள் தங்களது படைப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்தவும் உதவுகிறோம். புவியியல், சமூகம் மற்றும் துறை ரீதியாக வெவ்வேறு பின்னணியைக் கொண்ட குழந்தைகளுக்கு உறுதுணைபுரிய விரும்புகிறோம். 'உலகம் வசமுள்ள அனைத்து அறிவும் மனதில் இருந்தே வந்தவை. நம் மனம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் முடிவில்லா நூலகம்' என்று சுவாமிஜி சொன்னதைப் பின்பற்றும் விதமாகவே, இந்த அப்பாவி மனங்களில் பெரிய கனவுகளை விதைத்து, அவர்களது ஆர்வம், உத்வேகம், அன்பு மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்க முயல்கிறோம்" என்று முடித்து தன் பணிகளைத் தொடர்கிறார் ராணி.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்