சட்டீஸ்கர் மாவோயிஸ்ட் பகுதிகளின் மனித உரிமை மீறல்களை துணிச்சலுடன் எழுதிய பத்திரிகையாளர் மாலினிக்கு சர்வதேச விருது!

1

CPJ (Committe to Protect Journalists) ஆண்டுதோரும் சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதுகள் வழங்கும் விழாவை நடத்தி, உலகெங்கும் உள்ள தைரியமான பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவிக்கிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா நியு யார்க் நகரில் கடந்த 22 ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் மாலினி சுப்ரமணியம் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்க்ரோல்.இன் ஆன்லைன் செய்தி தளத்திற்கு கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளரான மாலினி, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரச்சனை மிகுந்த பஸ்தார் பகுதிகளில் தைரியமாக சென்று அது பற்றி கட்டுரை எழுதியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பஸ்தார் பகுதி மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெறும் இடமாக இருந்து வருகிறது. சட்டீஸ்கரில் பணிபுரியும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பாதுகாப்பான இடமான மாநில தலைநகர் ராய்பூரில் தங்கவைக்கப் பட்டனர்.

பிரச்சனைக்குரிய இடமாக காஷ்மீர் செய்திகளில் வரும் அளவிற்கு பஸ்தார் பிரச்சனை வெளி உலகிற்கு வருவதில்லை. அங்குள்ள தாக்குதல்கள் பற்றி இந்தியர்கள் பலருக்கே தெரிவதில்லை. அந்த வகையில், பஸ்தார் பகுதியில் பணி செய்து வந்த குறைந்த எண்ணிக்கை பத்திரிகையாளர்களில் மாலினியும் ஒருவர்.

அந்த பகுதிகளில் நடைபெறும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு குழுக்களின் மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், பெண்கள் மீதான வன்முறை, மைனர்களை சிறையில் அடைத்தல், பள்ளிகளை மூடுதல், என்கவுண்டர்கள் என்று பல உண்மைகளை தன்னுடைய கட்டுரைகள் மூலம் வெளியுலகிற்கு கொண்டுவந்தார் மாலினி. பலத்தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தும் எதைப்பற்றியும் அஞ்சாமல் தன் பணியை தைரியமாகவும், உண்மையுடன் வெளிப்படுத்தினார். பலமுறை காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டும், மிரட்டப்பட்டும் உள்ளார். 

ஒரு சில கண்காளிப்பர் குழுவினர் மாலினிக்கு கொலை மிறட்டலும் விடுத்துள்ளனர். ’மாலினியின் மரணம்’ என்பன போன்ற முழக்கங்களை அவரது வீட்டின் முன்பு முழங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சிலர் அவரின் வீடு புகுந்து தாக்குதலும் நடத்தியுள்ளனர். தன் மகளுடன் வாழும் மாலினியின் வீட்டின் மேல் நடுஇரவில் கற்களை வீசி தாக்கியுள்ளனர். 

இத்தனை தொடர் பிரச்சனைகளுக்கு பின் தன்னால் தன்னை சுற்றியுள்ளோர்க்கும் பிரச்சனை என்ற காரணத்தினால் பஸ்தார் பகுதியை விட்டு வெளியேறினார் மாலினி. இவரை தொடர்ந்து அங்கு தங்கியிருந்த ஒரு சில பத்திரிகையாளர்கள், மனித உரிமை வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களும் விரட்டி அடிக்கப்பட்டனர். 

CPJ செய்த ஆய்வின் படி, சட்டிஸ்கர் பகுதியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் கடுமையான சூழ்நிலைகளில் உயிருக்கு உத்திரவாதம் இன்றி இருக்கின்றனர். காவல்துறைக்கு உதவாத பத்திரிகையாளர்களை கைது செய்கின்றனர். அதே சமயம் போராளிகளுக்கு எதிராக எழுதுவோரை மவோயிஸ்டுகள் தாக்குகின்றனர். இப்படி இருமுனையில் இருந்தும் நெருக்கடி நிலை அங்கு உள்ளது. இதுவரை பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.

இத்தகைய ஆபத்தான பகுதியிலும் தைரியமாக நின்று கட்டுரைகளை எழுதியதற்கு CPJ மாலினிக்கு விருது அளித்து கவுரவித்துள்ளது. விருதை பெற்றுக்கொண்டு பேசிய மாலினி,

“இந்த விருதை பெற பெருமை அடைகிறேன். இருப்பினும் என்னை தாக்கி, அந்த பகுதியை விட்டு விரட்டியது என்னுள் ஆங்காரம் மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. என் சொந்த மண்ணாக கருதிய அந்த இடத்த விட்டு நான் தள்ளப்பட்டுள்ளேன்,” என்றார்.  

பஸ்தார் பகுதியில் வாழும் ஆதிவாசி மக்கள் பல வன்முறைக்கு ஆளாகின்றனர். மனித உரிமை மீறல், போலி கைதுகள் மற்றும் வற்புறுத்தி சரணடைதல் போன்றவற்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

”பத்திரிகையாளர்கள் அங்குள்ள உண்மை நிலையை வெளியில் சொல்லமுடியாமல் தாக்கப்படுகின்றனர். எனக்கும் அதே நிலை ஏற்பட்டது. இந்திய அரசு இதை வேடிக்கை மட்டுமே பார்த்தது, ஒன்றும் செய்யவில்லை.” 

இவற்றை தாண்டி எனக்கு கிடைத்த உன்னத ஆதரவும், குரல்களும் எனக்கு பக்கபலமாக இருந்தது. தனக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளித்த நண்பர்கள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள், சக பத்திரிகையாளர்கள், ஸ்க்ரோல் செய்தி ஆசிரியர் மற்றும் எப்போதும் உடன் இருந்த குடும்பத்தினருக்கு தன் நன்றிகளை தெரிவித்து விருதை பெற்றுக்கொண்டார் மாலினி. 

தகவல்கள் மற்றும் காணொளி உதவி: CPJ.org