’நான் தமிழ் பேசி 3 ஆண்டு ஆகிறது அம்மா...’- வெள்ளை மாளிகையில் அமெரிக்க இந்திய மாணவி வாசித்த கவிதை!

0

கடந்த வாரம் அமெரிக்க வெள்ளை மாளிகை’யில் நடைப்பெற்ற பெருமைமிகு ‘தேசிய மாணவர்கள் கவிதை நிகழ்ச்சி’யில், (National Student Poets) மனதை தொடும் கவிதையை வாசித்து எல்லாரையும் அசத்தினார் இந்திய அமெரிக்க மாணவி மாயா ஈஷ்வரன். தனது அமெரிக்க வாழ்க்கை அனுபவத்தை தன் கவிதை மூலம் பகிர்ந்த மாயா, தனது தாய்மொழியை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொண்டதை மனவலியுடன் அனைவரிடமும் பகிர்ந்து, அங்கிருந்த மிச்செல் ஒபாமா உட்பட அனைவரையும் நெகிழவைத்தார். 

வெள்ளை மாளிகையில் மாயா ஈஷ்வரன்
வெள்ளை மாளிகையில் மாயா ஈஷ்வரன்

அமெரிக்காவின் ப்ரஸ்ட் லேடி மிச்செல் ஓபாமா முன்னிலையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், 17வயது மாணவி மாயா ஈஷ்வரன் உட்பட நான்கு மாணவர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளை மேடையில் வாசித்தனர். அதை ஆர்வத்துடன் கேட்ட மிச்செல் ஒபாமா, அவர்களை பாராட்டி கெளரவித்தார். மற்றொரு இந்திய அமெரிக்க மாணவன் கோபால் ராமன் என்பவரும் இந்த மாணவர்கள் கவிதை திறன் நிகழ்வில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

நாடு விட்டு நாடு குடிபெயர்ந்த தான், தனது தாய்மொழி, அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை இழந்ததன் வலியை வெளிப்படுத்தும் தன் கவிதையை தனது தாயாருக்கு சமர்ப்பித்தார் மாயா ஈஷ்வரன்.

“அம்மா... நான் தமிழ் பேசி மூன்று ஆண்டுகள் ஆகிறது... நான் குழப்பத்தில் வாழும் ஒரு குழந்தை, என் அடையாளத்தைப்பற்றி குழம்பி நிற்கிறேன், ஆனால் நான் பண்பட்டு இருப்பதாக என்னை காட்டிக்கொள்கிறேன்,” 

என்று தன் கவிதையை ஆரம்பித்தார் மாயா. 

“அம்மா... நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை இழந்து கொண்டு வருகிறேன்... என் தலைமுடியை போல என் பூர்வீகத்தை மெல்ல மெல்ல இழந்துள்ளேன். அம்மா... நான் விரைவில் வழுக்கை ஆகிவிடுவேன் என்று எனக்கு பயமாக உள்ளது...” என்று மாயா தனது கவிதையை உருக்கத்துடன் முடித்திருந்தார். 

கரகோஷத்துடன் மாயாவை  அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் உற்சாகப்படுத்தினர். மாயாவின் கவிதையை கேட்ட மிச்செல் ஒபாமா, ”உன் கவிதை அற்புதமாக இருந்தது... இது உன் வரிகள், அதை எவரும் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது...”  என்றார். 

தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த மாயா ஈஷ்வரன், அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்தவர். பள்ளி நாட்கள் முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய மாயா, குறிப்பாக அவரது கலாச்சாரம், பாரம்பர்யத்தைப் பற்றி எழுத பிடிக்கும் என்று பிடிஐ இடம் தெரிவித்துள்ளார். 

“நான் என் தாய்மொழியை இழக்க நேரிட்ட அனுபவத்தை பற்றி கவிதையாக எழுதி, வெள்ளை மாளிகையில் வாசித்தேன். தமிழை இழந்து ஆங்கிலத்தை கடைப்பிடித்ததால் ஏற்பட்ட மனவலியை பற்றி அதில் குறிப்பிட்டு இருந்தேன்,” என்றார். 

அதே நிகழ்வில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய மாணவர் கோபாலின் அப்பா சென்னையை சேர்ந்தவர், அம்மா கேரளாவை சேர்ந்தவர். 1980களில் அமெரிக்கவுக்கு குடிபெயர்ந்த பின் கோபால்  இவர்களுக்கு பிறந்தார். ’ஆகஸ்ட் 23, 2005’ என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதையை கோபால் வெள்ளை மாளிகையில் வாசித்தார். 

’தேசிய மாணவர்கள் கவிதை நிகழ்ச்சி’, அமெரிக்காவின் இளம் கவிஞர்களை கெளரவிக்கும் உயர் நிகழ்வாகும். 2011 ஆண் ஆண்டு தொடங்கப்பட்ட இது, இளம் மாணவ-மாணவிகள் கவிதை எழுதுவதை ஊக்குவிக்க துவக்கப்பட்ட திட்டமாகும். 

தகவல் உதவி: பிடிஐ