அட்சய திருதியை தங்கம் விற்பனை: நகரங்களில் அமோகம், கிராமப்புறங்களில் சரிவு...

0

தங்கம் வாங்க உகந்த தினமாக கருதப்படும் அட்சய திருதியை அன்று நகரங்களில் விற்பனை அமோகமாக இருந்ததாகவும், கிராமப்புறங்களில் சரிவு உண்டானதாகவும் தெரிய வந்துள்ளது.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வளம் பெருகும் எனும் நம்பிக்கை இருப்பதால் ஆண்டுதோறும் இந்த தினத்தன்று தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும். அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்குவதற்காக பொதுமக்கள் தங்க நகைக்கடைகளில் ஆர்வத்துடன் குவிவதும் வழக்கம். தங்க நகை கடைகளும் வாடிக்கையாளர்களை கவர சலுகை திட்டங்களோடு முழு வீச்சில் செயல்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு அட்சய திருதியை தினம் கடந்த புதன் கிழமை கொண்டாடப்பட்டத்தை அடுத்து நகைக்கடைகளில் மக்கள் குவிந்தனர். நாடு முழுவதும் மக்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினாலும், தென்னிந்திய மாநிலங்களில் ஆர்வம் அதிகம் இருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் பொதுவாக பார்க்கும் போது, நகரங்களில் விற்பனை அதிகமாக இருந்தாலும் கிராமப்புறங்களில் விற்பனையில் சரிவு இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நகரங்களில் 10 முதல் 15 சதவீத அதிக தங்கம் விற்பனையானதாகவும், கிராமப்புறங்களில் 25 சதவீதம் வரை குறைவாக இருந்ததாகவும் எக்கனாமிக் டைஸ்ம் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு தங்க விலையில் ஏற்பட்டுள்ள 8 சதவீத உயர்வு மற்றும் நாடு முழுவதும் திடிரென ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தங்க விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசம், பிகார், தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது.

எனினும் தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் தங்கம் விற்பனை அமோகமாக இருந்தது.

தமிழகம் முழுவதும் அட்சய திருதியை அன்று 6,000 கிலோ அளவு தங்கம் விற்பனையானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை நகரில் மட்டும் 1,000 கிலோ தங்கம் விற்பனையானதாகவும் தி இந்து நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. தங்கம் தவிர வெள்ளி நகைகளை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
தங்கம் விலை உயர்வு அட்சய திருதியை தின விற்பனையை பாதிக்கவில்லை என்றும், மக்களின் உணர்வு மற்றும் அமைப்பு ரீதியான நிறுவனங்களை நாடும் போக்கு காரணமாக 25 சதவீத விற்பனை உயர்வை கண்டதாக கல்யான் ஜுவல்லர்ஸ் தலைவர். டி.எஸ்.கல்யாணராமன் கூறியுள்ளார்.

மெட்ரோக்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள தனது விற்பனை மையங்களில் இருந்து தகவல்களை சேகரித்துக்கொண்டிருப்பதாகவும், ஆனால் பொதுமக்கள் மத்தியில் பரவலாக ஆர்வம் இருந்ததாகவும் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் தலைவர் எம்பி அகமது கூறினார்.

கடந்த ஆண்டை விட விற்பனை அதிகமாக இருந்ததாக மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் மெர்சண்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜெயந்திலால் செல்லானி கூறியுள்ளார். தங்க நகைகள் தவிர தங்க நாணயங்களும் ஆர்வத்துடன் வாங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலும் தங்க நகைக்கடைகளுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 20 சதவிதம் அதிகமாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி தாக்கத்தால் கடந்த ஆண்டு பாதிப்பு இருந்தாலும் இந்த ஆண்டு விற்பனை எதிர்பார்த்த அளவு இருந்ததாக கருதப்படுகிறது.

அட்சய திருதியை பயன்படுத்திக்கொண்ட வாடிக்கையாளர்களில் பலர் திருமண நகைகளை வாங்கியதாகவும் தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.