பஞ்சாபில் மசூதி கட்ட ஒன்றிணைந்த இந்துக்களும் சீக்கியர்களும்!

0

பஞ்சாபின் இந்த கிராமத்தில் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையுடன் காணப்படுகின்றனர். இந்த கிராமத்தின் பெரும்பாலான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைய உதவுகிறது. எனினும் பெரும்பாலான இந்து மக்களுக்கும் சீக்கியர்களுக்கும் தங்களுக்கான கோயிலும் குருத்வாராவும் இருக்கையில் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த மூம் கிராமத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் தங்களது கடவுளை தொழுவதற்கென பிரத்யேக இடம் இல்லை. 

நசீம் ராஜா கான் 400 மக்கள் அடங்கிய தனது சமூகத்திற்கென பிரத்யேக தொழுகைக்கான இடம் இல்லாதது குறித்து சமூகத்தினரிடையே விவாதித்தபோது மசூதி கட்டவேண்டும் என மக்கள் உற்சாகம் காட்டினார். ஆனால் மசூதி கட்டுவதற்குத் தேவையான பணமோ நிலமோ அவர்களிடம் இல்லை. பெரும்பாலான முஸ்லீம் மக்கள் அதிக திறன் தேவைப்படாத பணிகளையும் கட்டுமானப் பணிகளையும் செய்து வருவாய் ஈட்டி வந்தனர். அதே சமயம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் வசதியாக வாழ்ந்து வந்தனர்.

நசீம் முஸ்லீம் மக்கள் தொழுகை புரிவதற்கென பிரத்யேக இடம் ஒதுக்குமாறு அருகாமையில் இருந்த கோயில் நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார். ஒரு வாரம் கழித்து பதில் வந்தது. கோயில் நிர்வாகம் அவர்களது கோயிலுக்கு அருகில் இருக்கும் 900 சதுர அடி காலி இடத்தை ஒப்படைக்க தீர்மானித்ததாக பிபிசி அறிக்கை தெரிவிக்கிறது. நசீம் கூறுகையில்,

”நான் மிகவும் பரவசமடைந்தேன். என்னுடைய நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.”

இன்று மசூதி கிட்டத்தட்ட தயார்நிலையில் உள்ளது. கிராம மக்களின் முயற்சிகளும் குறிப்பாக சீக்கியர்கள் சமூகம் கட்டிடம் கட்டுவதற்கு நிதி உதவி அளித்ததும் குறிப்பிடத்தக்கதாகும். மதம் சார்ந்த பிரிவினைகள் இல்லாத ஒரு சமூகம் எவ்வாறு சிறப்புறும் என்பதற்கு 300 ஆண்டு பழமையான மூம் கிராமம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என ’தி பெட்டர் இந்தியா’ குறிப்பிட்டது. 

இந்த கிராம மக்கள் சில சமயம் ஒருவர் மற்றொருவர் வழிபாட்டு தலத்திற்குச் செல்வதுண்டு. பெரும்பாலும் பண்டிகைகளை ஒன்றாகவே கொண்டாடுகின்றனர்.

மற்றொரு கிராமவாசியான பாரத் ராம் கூறுகையில், 

“எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் யாரும் இங்கு இல்லாதது எங்களது அதிர்ஷ்டம். தொன்று தொட்டு இந்த கிராம மக்களிடையே சகோதரத்துவ உணர்வு மேலோங்கி இருக்கிறது. ஆகவே நாங்கள் உடனடியாக மசூதிக்காக நிலம் வழங்க தீர்மானித்தோம்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA