இவரின் உடல் பருமனை ஊரே கேலி செய்தும், தன்னம்பிக்கைக் கொண்டு பல லட்சம் பேரை வசீகரித்த விட்னி!

2

கடந்த சில வருடங்களாகவே அழகுக்கும் பெண்ணின் உடல் எடைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அதிகரித்துவருகிறது. மிகச்சரியான உடற்கட்டை கொள்ளாதவர்களை கிண்டல் அடிப்பதும், அவர்களின் மனம் புன்படும்படியும் பேசுவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக கூடுதல் எடை அதிகமுள்ள பெண்கள் பல இடங்களில் வேலைக்குக் கூட நிராகரிப்படுகின்றனர். இது உலகெங்கும் உள்ள பிரச்சனை ஆகும்.

’பர்ஃபெக்ட் ஷேப்’ என்று சொல்லக்கூடிய உடற்கட்டை பெறாத பல பெண்கள் அதை அடைய மருந்து, மாத்திரைகள், உடற்பயிற்சி, டயட், ஏன் சிலமுறை மாந்திரீகம் என்று பல வழிகளில் தங்கள் உடலை கட்டுக்குள் கொண்டுவர பாடுபடுகின்றனர். நமது உடலைக் காட்டிலும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் ஒல்லி, பருமன் என்ற பிரச்சனையெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதை இவர்கள் உணர்வதில்லை.

ஆனால் 39 வயதான விட்னி தோர் என்ற பெண்மணி எல்லா பெண்களைப் போலல்லாமல் தன் உடற்கட்டைப் பற்றி கேவலமாக கருதாமல், மனதை உற்சாகமாக வைத்திருக்கிறார். இன்று அவருடைய இந்த தன்னம்பிக்கையே அவரை உயரத்தில் கொண்டு சென்றுள்ளது. 

விட்னி அப்படி செய்தது என்ன?

விட்னி, பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சனையால் ஒரே சமயத்தில் 45 கிலோ எடைக்கூடி மிகுந்த பருமனுடன் காணப்பட்டார். பலர் அவரை அசிங்கமான பன்றியை போல உள்ளார் என்றெல்லாம் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதைத்தாங்கிக் கொள்ளமுடியாமல் மன அழுத்தத்தில் போன விட்னி, நீண்ட காலம் எதுவும் செய்யாமல் முடங்கிக்கிடந்தார். 

ஒரு நாள் தீவிரமாக யோசித்த விட்னி, தான் செய்யாத தவறுக்காக ஏன் இப்படி ஒடிந்து போகவேண்டும்? மனம் தளர்வதால் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு ஈடாகிவிடும் என்று முடிவெடுத்து தன் நிலையை எதிர்த்து போராட முடிவெடுத்தார். தன் விருப்பப் பொழுதுபோக்கான நடனத்தை தேர்வு செய்தார் விட்னி தோர். 

2016-ம் ஆண்டு 27-ம் தேதி பிப்ரவரி மாதம் விட்னி தான் ஆடிய வீடியோ ஒன்றை யூட்யூபில் பதிவேற்றினார். அவருடைய நளின அசைவுகளும், அழகிய பாவங்களும் பார்வையாளர்களின் வாயை அடைத்தது. விட்னியின் டான்ஸ் அவருடைய உடற்கட்டை மீறி பலரை வசியப்படுத்தியது. அவரைப்போன்று பல பிரச்சனைகளால் வீட்டில் முடங்கிப் போன பலரையும் ஊக்குவிப்பதாக இருந்தது. 

யூட்யூபில் அவரின் வீடியோவிற்கு பார்வையாளர்கள் அதிகரிக்க, ‘எ ஃபேட் கேர்ள் டான்சிங்’ (A Fat Girl Dancing) என்ற பெயரிலான யூட்யூப் சேனலை தொடங்கி தொடர்ந்து தனது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டார். அவர் பலவகையிலான நடனங்களை ஆடி அதில் பதிவேற்றினார். 

தற்போது விட்னி தன் பெயரில் ஒரு டிவி ஷோ நடத்துகிறார். My Big Fat Fabulous Life மற்றும் Fat Body Acceptance Campaign போன்ற பிரச்சார இயக்கங்களையும் நடத்துகிறார். உடற்கட்டை கேவலப்படுத்தாதீர்கள் என்ற அடிப்படையில் No Body Shaming என்ற வலைப்பதிவையும் நடத்துகிறார் விட்னி. 

விட்னி சந்தித்த சவால்கள்

பலரும் நடனம் ஆடுவதை விரும்பி செய்வது வழக்கம். தங்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு கலை அது. ஆனால் அதிக உடல் பருமனான ஒரு பெண் ஆடுவதை பார்க்க மக்கள் விருப்புவார்களா என்ற கேள்வி இருந்தது. அதிக உடல் எடை கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்றாலும் அவர்களை கேலி செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. மேலும் அது போன்றோரால் எதையும் சாதிக்கமுடியாது என்ற எண்ணமும் தவறானது. இது போன்று இருப்போருக்கு ஊக்கமும், ஆதரவுமே தேவை. 

விட்னி பல சவால்களை சந்தித்தார், ஆனால் அவர் இடையில் கைவிடவில்லை. விட்னியின் பள்ளிப்பருவம் முதலே அவருக்கு உணவு உட்கொள்வதில் பிரச்சனைகள் இருந்தது. அதுவே நாளடைவில் மோசமானது. பின் ஹார்மோன் பிரச்சனையால் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சனை எழுந்து அவரின் உடலில் பல பிரச்சனைகள் உருவானது. உடலில் அதிக இன்சுலின் சுரந்ததால் உடல் எடை கூடிக்கொண்டே போனது. 

உடல் எடை அதிகரிக்க, மருந்துகள் அதிகம் உட்கொண்டதில் சோம்பேறித்தனம் கூடியது. அவரின் இந்த நிலையை பார்த்த பலரும் ‘இவள் ஒன்றிற்கும் லாயக்கில்லாதவள்’ என்று முடிவுகட்டி திட்டினார்கள். 

விட்னி தனிமையில் வாழ்ந்ததால் அவரின் துயரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளானார். அவர் எங்கு சென்றாலும் உடலை கேலி செய்து பலரும் சிரித்து கிண்டல் செய்துள்ளனர். 

ஆனால் இவற்றை கடந்து தன் உடலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்னி புது வாழ்வை தேர்ந்தெடுத்து துணிச்சலுடன் உலகை சந்தித்தார். நேர்மறை எண்ணங்களை தன்னுள் கொண்டு வந்து தன் முன் இருந்த தடைகளை தகர்த்தெரிந்தார். 

”வாழ்வில் நீங்கள் எந்த ஏளனத்தையும் சந்திக்காமல் வாழ முடிவெடுத்தால், அதற்காக தினமும் நீங்கள் உழைத்து உங்களின் வாழ்க்கையை நீங்களே பிரகாசமாக்கிக் கொள்வீர்கள்,” 

என்று டெட் டாக்கில் கூறினார் விட்னி தோர்.

விட்னி தோர் யூட்யூட் சேனல் வீடியோ
விட்னி தோர் யூட்யூட் சேனல் வீடியோ