கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2000 மெகாவாட் மின்சாரம்உற்பத்தி செய்த சாதனை!

1

தென் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் திட்டம் (கே.கே.என்.பி.பி.)  நேற்று (டிசம்பர் 5) 2000 மெகா வாட் மின் உற்பத்தி செய்தது. நாட்டின் ஒற்றை அணு மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய மின் உற்பத்தி சாதனை ஆகும்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ள இரண்டு உலைகள் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் பெற்றவை. வி.வி.இ.ஆர். வகையிலான இந்த அணு உலை, அழுத்த நீர் அணு உலைப் பிரிவைச் சேர்ந்தவை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆக்சைடு எரிபொருளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

பட உதவி: The hindu businessline
பட உதவி: The hindu businessline

டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் இந்த இரு உலைகளில் இருந்தும் 2000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது நாட்டில் அணு சக்தி மூலம் உற்பத்தி  செய்யப்பட்ட மின்சாரத்திலேயே மிகவும் அதிகமாகும். இரண்டு உலைகளும் அவற்றின் அதிகபட்ச உற்பத்தித் திறனை எட்டி தலா 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.

இந்த அணு உலைகளை ரஷ்ய கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இந்திய அணுசக்திக் கழகம் (என்.பி.சி.ஐ.எல்) அமைத்தது. கூடங்குளம் அணு மின்நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 20,863 மில்லியன் யூனிட்  மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. முதல் உலையில் இருந்து 16079 மில்லியன் யூனிட்டுகளும் இரண்டாம் உலையில் இருந்து 4784 மில்லியன் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.